பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் |
இரண்டாம் உலகப் போரின்போது நேசநாட்டுப் படையில் ஒரு பகுதியாக இந்தியா போரிட்டு வந்தது. பர்மா, மலேயா மற்றும் பிற இடங்களில் ஜப்பானிய படைகளுக்கு எதிராக போரிட்டு வந்தனர் நம் இந்திய வீரர்கள். இந்தக் காலகட்டங்களில் பிரிட்டிஷ் இந்திய அரசு வேண்டுகோளின்படி, 1945ஆம் ஆண்டு நான்கு திரைப்படங்கள் யுத்த பிரச்சாரத் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. “பர்மா ராணி”, “மானஸம்ரக்ஷணம்”, “கண்ணம்மா என் காதலி”, மற்றும் “என் மகன்” ஆகிய இந்த நான்கு திரைப்படங்களும் யுத்த பிரச்சாரத் திரைப்படங்களாக 1945ல் வெளிவந்து, சிறப்பித்திருந்தன.
பர்மா ராணி
பர்மாவை, ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க இந்திய ராணுவம் போராடுவதாக வரும் கதைமைப்பின் பின்னணியில் வந்த இத்திரைப்படத்தை, “மாடர்ன் தியேட்டர்ஸ்” அதிபரான டிஆர் சுந்தரம் இயக்கியிருந்ததோடு, ஜப்பானிய ராணுவத் தளபதியாக நடித்தும் இருந்தார். மேலும் ஹொன்னப்ப பாகவதர், கேஎல்வி வசந்தா, காளி என் ரத்தினம், எஸ்வி சகஸ்ரநாமம், டிஎஸ் பாலையா, என்எஸ் கிருஷ்ணன், டிஏ மதுரம் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில், பிரிட்டிஷ் இந்திய விமானப் படையின் வீர சாகஸங்களும் இடம் பெற்றிருந்தன. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவிலிருந்த ஆங்கிலேயரும், யுத்த பிரச்சார இயக்குநருமான ஜிடிபி ஹார்வே, அப்போது படத்தைப் பாராட்டி பேசியிருந்தார்.
மானஸம்ரக்ஷணம்
அடிப்படையில் காங்கிரஸ்வாதியான இயக்குநர் கே சுப்ரமணியம் தயாரித்து இயக்கியிருந்த திரைப்படம்தான் “மானஸம்ரக்ஷணம்”. காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளையும் மீறி, யுத்த பிரச்சாரத் திரைப்படத்தை தயாரிக்கின்றாரே என்று பலர் வருந்திய இத்திரைப்படத்தில், எஸ்டி சுப்புலக்ஷ்மி, டிஆர் ராமச்சந்திரன், விஎன் ஜானகி, காளி என் ரத்தினம், ஜி பட்டு அய்யர் ஆகியோர் நடித்திருந்தனர். ஜப்பானிய உளவாளிகளால் பர்மியப் பெண் ஒருத்தி துரத்தி வரப்படுவதாகவும், ஜப்பானிய உளவாளிகளால் தகர்க்கப்படவிருந்த இந்தியக் கப்பலை அவள் காப்பாற்றுவதாகவும், பின் சென்னையில் இந்தியர்கள் ஜப்பானியர்களிடமிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில், பிரிட்டிஷ்காரர்களைப் புகழ்ந்து காட்சிகளை அமைத்துவிடாமல், இந்திய மக்களின் மனிதாபிமானத்தைச் சிறப்பித்திருப்பதுபோல் கதையை அமைத்திருந்தார் இயக்குநர் கே சுப்ரமணியம்.
கண்ணம்மா என் காதலி
கொத்தமங்கலம் சுப்பு கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கியிருந்த இத்திரைப்படமும் ஜப்பானின் பர்மா ஆக்கிரமிப்பு பின்னணிக் கதையைக் கொண்டதே. நடிகர் எம்கே ராதா கதையின் நாயகனாகவும், நடிகை எம்எஸ் சுந்தரிபாய் படத்தின் நாயகியாகவும் நடித்திருந்தனர்.
என் மகன்
“ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரித்து, இயக்குநர் ஆர்எஸ் மணியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமும் ஒரு யுத்த பிரச்சாரத் திரைப்படமாகவே பார்க்கப்பட்டது. என் கிருஷ்ணமூர்த்தி, யுஆர் ஜீவரத்தினம், டி பாலசுப்ரமணியம், எம் எம் ராதாபாய், பேபி கமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தனர். செல்வம் என்ற கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்த படத்தின் நாயகன் என் கிருஷ்ணமூர்த்திக்கு, அவரது தந்தை திருமண ஏற்பாடு செய்து பெண் பார்த்து வைக்க, தான் காதலித்த பெண் விமலாதான் அந்தப் பெண் என்று தெரியாத நிலையில் தவிக்கும் இவனது நிலையிலேயே, இவனது காதலி விமலாவும் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை செல்வம்தான் என அறியாமல் அவளும், “ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்” பயிற்சியில் சேர்ந்து விடுகின்றாள். பின் செல்வம் இந்திய விமானப் படையில் சேர்ந்து, ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து பர்மாவை மீட்கும் போரில் காயம் அடைந்து, சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் மருத்துவ முகாமில் விமலாவை சந்திக்க, இருவரது காதலும் கை கூடுவதுபோல் முடியும். இத்திரைப்படமும் ஒரு யுத்த பிரச்சாரத் திரைப்படமாகவே வெளிவந்தது. பிலிம் தட்டுப்பாடு பெரிய அளவில் படவுலகை பாதித்திருந்த இந்தக் காலகட்டத்தில், யுத்த பிரச்சார முழுநீளப் படங்கள் தவிர, யுத்தச் செய்திப் படங்களும் ஏராளமாக தயாரிக்கப்பட்டன.