மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் திரையுலகம் கண்ட தலை சிறந்த பாடலாசிரியர்களில் மிகவும் குறிப்பிடும்படியான ஒருவராக பார்க்கப்படுபவர்தான் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். வலியோரும், எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடுவது இவரது தனிச்சிறப்பு. சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, புத்துயிர் பெற்ற கவிஞராக உயர்ந்து காட்டியவர்.
கவிதைகள் பாடியும், எழுதியும் தோழர்களை உற்சாகமூட்டியவர். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மாடு மேய்ப்பவராக இருந்து பின் மாட்டு வியாபாரியாக, மாம்பழ வியாபாரியாக, தேங்காய் வியாபாரியாக, கீற்று விற்பனையாளராக, மீன், நண்டு பிடித் தொழிலாளியாக, உப்பளத் தொழிலாளியாக என இளமையிலிருந்து பல்வேறு பணிகளைச் செய்து, வாழ்வின் அனைத்தையும் கற்றுணர்ந்தவராக, அரசியல் தெளிவு பெற்று பின் பாடகனாக, நடிகனாக, நடனக்காரனாக இருந்து இறுதியில் கவிஞனாக உருப்பெற்றவர் இவர்.
ஒரு நாடகக் கம்பெனியில் நடிகராக இருந்து வந்த இவரது நண்பர் நம்பிராஜன் சிபாரிசின் பேரில் “படித்த பெண்” என்ற திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் பாடல் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி” என்றிருந்தாலும், இவர் எழுதிய முதல் பாடல் “படித்த பெண்” திரைப்படத்திற்காகத்தான். படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட, பாடல் எழுதியதற்கான தொகை ரூ 150ஐ கேட்டுப் பெறுவதற்காக அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டிற்கே சென்றார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
வீட்டிற்குள் விட உதவியாளர் மறுத்துவிட, கோபம் கொண்ட கவிஞர், கவிதை ஒன்றை எழுதி, இதை உன் முதலாளியிடம் கொடு என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். “தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன், நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில்லென்று சொல்லுதற்கு?” என்று கவிஞர் எழுதியிருந்த அந்தக் கவிதையைப் படித்த படத் தயாரிப்பாளர் பழமையில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதால் “கவிஞன் அறம் பாடிவிட்டானே?” என்று பதறிப்போய் பணத்தைக் கொடுத்தனுப்பினார்.