நீரும் நெருப்பும், தளபதி, ஜெய் பீம்- ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை |
சினிமா தோன்றிய ஆரம்ப காலங்களில் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க எல்லா செலவுகளுமாக சேர்த்து ரூபாய் நாற்பதாயிரம் இருந்தால் போதும் என்றிருந்த நிலையில், மூன்று லட்சம் ரூபாய் செலவில் ஒரு தமிழ் படம் உருவாகிறது என்ற ஒரு செய்தி 1930களின் மத்தியில் வெளியாகி தமிழ் திரைப்பட உலகை ஒரு பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. இந்த பரபரப்புக்கு சொந்தக்காரர் “அஸன்தாஸ் கிளாஸிகல் டாக்கீஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் அஸன்தாஸ். தான் தயாரிக்க இருக்கும் “பக்த நந்தனார்” திரைப்படத்தில் நந்தனராக நடிக்கப் போகின்ற புகழ்பெற்ற ஒருவருக்கு நடிப்புச் சன்மானமாக ரூபாய் ஒரு லட்சம் தருவதாக பேரம் பேசப்பட்டது.
அவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக கொடுக்க நேர்ந்தது ஏன்? காரணம் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்ற வைராக்கியத்தோடு இருந்து வந்த ஒரு மேடை நாடகக் கலைஞரின் வைராக்கியத்தை உடைத்து, அவரை இந்தப் படத்தில் நடிக்க வைத்து, அந்தக் கலைஞரின் புகழில் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து விடலாம் என்ற திட்டமிடலோடு களம் காண செயலாற்றினார் தயாரிப்பாளர் அஸன்தாஸ். யார் அந்த கலைஞர்? அவர் ஏன் நடிக்கக் கூடாதென வைராக்கியம் கொண்டிருந்தார்?
அவர் வேறுயாருமல்ல. குயில் போல பாடும் குரல்வளத்தோடு, “கொடுமுடி கோகிலம்” என்று அன்போடும், மரியாதையோடும் அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த கே பி சுந்தராம்பாள் தான். பிரபல பாடகரும், மேடை நாடக நடிகருமான எஸ் ஜி கிட்டப்பாவின் மனைவியான இவர், தனது கணவரின் திடீர் மறைவினால் பெரும் அதிர்ச்சியும், வேதனையுமுற்றிருந்தார். கிட்டப்பாவுடன் நடித்த நான் பிற ஆண்களுடன் இனி இணைந்து நடிக்க மாட்டேன் என வைராக்கியமும் கொண்டிருந்தார். நாடக மேடையில் நடிப்பதை தவிர்த்து, மேடைகளில் கச்சேரி செய்வதை மட்டும் தொடர்ந்திருந்தார்.
அன்றைய காலகட்டங்களில் திரைப்படங்கள் மூலம் புகழ் கொடி நாட்டி வந்த நடிகைகளான டி பி ராஜலக்ஷ்மி, எம் எஸ் விஜயாள், கே டி ருக்மணி, எஸ் டி சுப்புலக்ஷ்மி, எம் ஆர் சந்தான லக்ஷ்மி ஆகியோரைக் காட்டிலும் சங்கீத மேடைகளில் புகழ் பெற்றிருந்தார் கே பி சுந்தராம்பாள். இவரது புகழையே மூலதனமாக்கி பெருத்த லாபமடையலாம் என்ற ஆசை கொண்டிருந்தார் படத்தின் தயாரிப்பாளரான அஸன்தாஸ். நடிப்பிலிருந்து விலகி இருந்தவர் மீண்டும் நடிக்கின்றார் என்றால் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்ற திட்டத்தோடு, கே பி சுந்தராமபாளுக்கு ஊதியமாக ஒரு லட்சம் ரூபாய் தருவதாக பேசினார் தயாரிப்பாளர் அஸன்தாஸ். வேறு எந்த ஆண் நடிகரும் ஜோடியில்லை. எனவே நடித்தால் என்ன? என்று எடுத்துச் சொல்லப்பட்டு, அதன்படி கே பி சுந்தராம்பாள் “பக்த நந்தனார்” வேடமேற்று நடிக்க சம்மதம் பெறப்பட்டது.
இதே காலகட்டத்தில் இயக்குநர் கே சுப்ரமணியம் இயக்கத்தில், எஸ் டி சுப்புலக்ஷ்மி ஆண் வேடமேற்று பகவான் கிருஷ்ணன் பாத்திரத்தில் நடித்து வந்த “பக்த குசேலா” என்ற திரைப்படமும் கல்கத்தாவில் தயாராகி வருகிறது என்ற செய்தி, அன்றைய தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் அதிகரிக்கச் செய்திருந்தன. “பக்த குசேலா” திரைப்படத் தயாரிப்பு பணி முடிந்து தமிழ் நாட்டில் படம் வெளிவரும் முன்பு தனது “பக்த நந்தனார்” படத்தை எடுத்து முடித்து வெளியிட்டுவிட்டால், பெயரும், புகழும், பணமும் பெருகும் என்பது படத்தின் தயாரிப்பாளரான அஸன்தாஸின் திட்டம். ஒரு பெண், ஆண் வேடமிட்டு முதன் முதலில் நடிக்கும் திரைப்படம் “பக்த குசேலா” என்று விளம்பரங்களும், செய்திகளும் வெளிவந்த வண்ணம் இருக்க, பந்தயத்தில் முந்திக் கொள்ள லட்சங்களோடு இறங்கினார் “பக்த நந்தனார்” படத் தயாரிப்பாளர் அஸன்தாஸ். கே பி சுந்தராம்பாள் ஆண் வேடமிட்டு நடித்து வந்த “நந்தனார்” முதலில் வெளிவருமா? ஏஸ் டி சுப்புலக்ஷ்மி ஆண் வேடமிட்டு நடித்து வந்த “பக்த குசேலா” முதலில் வெளிவருமா? என்ற பெரும் போட்டியில் கே பி சுந்தராம்பாளின் “பக்த நந்தனார்” திரைப்படம் 1935லேயே வெளிவந்து மாபெரும் வெற்றியை சுவைத்தது.