'விடாமுயற்சி' - முதல் பாடல் வெளியானது | ஜெயிலர் 2 படத்தில் கே.ஜி.எப் பட நடிகை | 237-வது படத்தில் சினிமாவை வியக்க வைக்கப்போகும் கமல் | ‛வீர தீர சூரன்' கதைகளம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | காதலிப்பது பிடிக்கும், ஆனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை : ஸ்ருதிஹாசன் | போதையில் கிடாரிஸ்ட்டின் விமர்சனத்தால் சரியான பாதைக்கு நகர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் | புஷ்பா 2 காட்சியை ரத்து செய்துவிட்டு பேபி ஜான் பார்க்க வற்புறுத்திய தியேட்டர் நிர்வாகம் | நிறைவேறாத ஆசை : மகன் மூலம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மோகன்லால் | புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் பாடிய பாடல் யு-டியூப்பில் இருந்து நீக்கம் | நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் : நேரில் சென்று வாழ்த்திய சிவகார்த்திகேயன் |
2024ம் ஆண்டு நிறைவுப்பெற இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. இந்த ஆண்டு சினிமா துறையில் பலர் குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ளனர். குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஜனவரி 24: நடிகை ஸ்வாசிகா - பிரேம் ஜேக்கப்
தமிழில் 'கோரிப்பாளையம், மைதானம், வைகை, சோக்காளி, அப்புச்சி கிராமம், சாட்டை' ஆகிய படங்களில் நடித்திருந்தவர் சுவாசிகா. எந்தபடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அவருக்கான வாய்ப்புகளும் குறைந்தன. இதனையடுத்து மலையாளம் சினிமாவில் பிஸியான அவர், 'லப்பர் பந்து' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். படம் ஹிட்டடித்ததும், இவரின் யசோதா கதாபாத்திரமும் பேசப்பட்டது. இவரும் மலையாள டி.வி நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்ட நிலையில் ஸ்வாசிகா - பிரேம் ஜேக்கப் திருமணம் கடந்த ஜனவரி 24ல் கேரளாவில் நடைபெற்றது.
பிப்ரவரி 21: நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி
'தீரன் அதிகாரம் ஒன்று', 'இந்தியன் 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது காதலர் ஜாக்கி பக்னானியை கோவாவில் கரம் பிடித்தார். இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஏப்ரல் 24: நடிகை அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அடுத்து 'டாடா' படத்தின் மூலம் பிரபலமானார். மலையாளத்திலும் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும் அபர்னா தாஸ், 'மஞ்சும்மல் பாய்ஸ்' நடிகர் தீபக் பரம்போலை ஏப்.,24ல் காதல் திருமணம் செய்துகொண்டார்.
ஜூன் 10: நடிகை ஐஸ்வர்யா - நடிகர் உமாபதி
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' படத்தில் அறிமுகமானார். உமாபதி, 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில் அறிமுகமானார். தற்போது அவரது அப்பா தம்பி ராமையா நடித்துள்ள 'ராஜாகிளி' படத்தை இயக்கி, இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.
ஜூன் 23: நடிகை சோனாக்சி சின்ஹா - ஜாகீர் இக்பால்
'லிங்கா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர், கடந்த ஜூன் 23ம் தேதி, ஜாகீர் இக்பால் என்பவரை திருமணம் செய்தார். இருவரும் 4 வருடங்கள் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2: நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்றது.
செப்டம்பர் 15: நடிகை மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு
மலையாள நடிகையான மேகா ஆகாஷ், தமிழில் 'ஒருபக்க கதை, பேட்ட, மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரான திருநாவுக்கரசின் மகனான சாய் விஷ்ணுவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் செப்.,15ல் நடைபெற்றது.
செப்டம்பர் 16: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் ஹைதரி
மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தொடர்ந்து 'செக்கச் சிவந்த வானம், சைக்கோ' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துவந்த இவர், 'மஹா சமுத்திரம்' படத்தில் நடித்த போது நடிகர் சித்தார்த் உடன் காதல் வயப்பட்டார். இருவரும் காதலர்களாக வலம் வந்த நிலையில் செப்.,16ல் திருமணம் செய்துகொண்டனர்.
நவம்பர் 8: நடிகை ரம்யா பாண்டியன் - லோவல் தவான்
'டம்மி டப்பாசு, ஜோக்கர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், இயக்குனர் துரை பாண்டியனின் மகளாவார். கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு நட்பு ஏற்பட்டு பின்பு, அது காதலாக மாறியது. இருவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன் நவம்பர் 8ல் திருமணம் செய்துகொண்டனர்.
டிசம்பர் 4: நடிகர் நாகசைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா
தெலுங்கு இளம் ஹீரோக்களில் ஒருவரும், நடிகர் நாகார்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து 2017ல் திருமணம் செய்தார். பிறகு இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இதனையடுத்து தமிழில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் டிசம்பர் 4ல் குடும்பத்தார் சம்மதத்துடன் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்னா ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற்றது.
டிசம்பர் 8: நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர்
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் 'மீன்குழம்பும் மண் பானையும், பூமரம், ஒருபக்க கதை, விக்ரம், ராயன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் மாடல் அழகியான தாரிணி காளிங்கராயரும் காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 8ல் கேரளா குருவாயூர் கோயிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
டிசம்பர் 12: நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றார். இவர் தனது பள்ளிகால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டதை அடுத்து, இந்து முறைப்படி டிசம்பர் 12ல் கோவாவில் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் டிச.,15ல் கிறிஸ்தவ முறைப்படியும் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்தனர்.