இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பேசும்படம் தொடங்கிய காலம்தொட்டு இன்று வரை தமிழ் திரையுலகில், நம் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலோடு கூடிய புராண இதிகாச கதைகள், ராஜா ராணி கதைகள், உறவுகளின் மேன்மையை உணர்த்தும் குடும்பக் கதைகள், சமத்துவத்தை போதிக்கும் சமூகக் கதைகள், வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை கதைகள் என எண்ணற்ற வகையான திரைப்படங்கள் வந்து, நம்மை மகிழ்வித்ததோடு, நம் வாழ்விலும் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிவிட்டது இந்த சினிமா என்ற ஊடகம்.
குறிப்பாக தமிழ் சினிமாவில், எந்த வகையான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களாக இருந்தாலும், அதில் நகைச்சுவைக்கென ஒரு தனி இடம் எப்போதும் இருந்தது உண்டு. காளி என்.ரத்னம், என்.எஸ்.கிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், டி ஆர் ராமச்சந்திரன், 'டணால்' கே.ஏ தங்கவேலு, ஜேபி சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், கவுண்டமணி, வடிவேலு என, இன்றிருக்கும் சந்தானம் மற்றும் யோகிபாபு வரை ஏராளமான நகைச்சுவை நாயகர்கள் அந்தந்த காலத்திற்கேற்றாற்போல் தங்களது சிறப்பான நகைச்சுவை நடிப்பை வழங்கி நம்மை மகிழ்வித்து வருகின்றனர்.
காலத்தால் அழியா காவியப் படைப்பான “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் என்பது தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. குறிப்பாக நடிகர் நாகேஷ், நடிகர் டிஎஸ் பாலையாவிடம் கதை சொல்லும் அந்த நகைச்சுவைக் காட்சிக்கு இணையான ஒரு நகைச்சுவை காட்சியை இனி எப்போதும் தமிழ் திரையுலகமும், தமிழ் திரைப்பட ரசிகர்களும் காணப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. காட்சியில் நடித்திருக்கும் அந்த இருவரின் உடல் மொழியும், வசன உச்சரிப்பும்தான் ஒட்டுமொத்த நகைச்சுவையின் இலக்கணம் என்றால் அது மிகையல்ல.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த நகைச்சுவை காட்சி உருவானதன் பின்னணி என்ன என்று பார்த்தால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருமுறை இயக்குநர் ஸ்ரீதரிடம் என் நண்பர் ஒருவர் இருக்கின்றார். நன்றாக கதை சொல்லக் கூடிய அவரை நான் உங்களிடம் அனுப்பி வைக்கின்றேன் வேண்டுமானால் அவரிடம் கதை கேட்டுப்பாருங்கள் என சொல்லி அனுப்பி வைத்திருக்கின்றார். அவர் அனுப்பிய நபர் வேறு யாருமல்ல, சிவாஜி நடிப்பில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “புதிய பறவை” என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தாதா மிராஸி.
இயக்குநர் ஸ்ரீதரின் அலுவலகத்திற்குச் சென்ற மராத்தியரான இயக்குநர் தாதா மிராஸி, ஸ்ரீதர் மற்றும் சித்ராலயா கோபு ஆகிய இருவரின் முன்பு அமர்ந்து கதை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார். கதையை வாயால் சொல்லாமல் தன் கைகளின் அசைவைக் கொண்டு சொல்ல, புரியாமல் இயக்குநர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும், என்ன? என அவரிடம் கேட்க, அதன் பிறகு அவர் வார்த்தைகளால் விவரித்திருக்கின்றார் "கும் இருட்டு" என்பது போல். மீண்டும் கதையை தொடர்ந்த அவர், தன் கைகளின் அசைவைக் கொண்டே சொல்ல ஆரம்பிக்க, திரும்பவும் இவர்கள் என்ன? என கேட்க, “ஒரு கருப்பு உருவம் வருகிறது” என்பது போல் வார்த்தைகளால் விவரிக்க, பொறுமை இழந்த இயக்குநர் ஸ்ரீதர், நீங்கள் உங்கள் கதையை எனக்கு எழுத்து வடிவில் தந்து விடுங்கள் நான் படித்து தெரிந்து கொள்கின்றேன் என கூறியிருக்கிறார்.
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் போது இந்த சுவாரஸ்யமான நிகழ்வு இயக்குநர் ஸ்ரீதரின் நினைவுக்கு வர, சித்ராலயா கோபுவை அழைத்து, விவாதித்து, பின் இயக்குநர் தாதா மிராஸி இவர்களிடம் கதை சொன்ன விதத்தையே மையமாக வைத்து, நாகேஷையும், டிஎஸ் பாலையாவையும் நடிக்க வைத்து ஒரு நகைச்சுவை காட்சியாக படமாக்கி பெரும் வெற்றி கண்டனர் இயக்குநர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும்.
பிறர் மனம் நோகும் வசனம் ஏதுமின்றி, உடற்கேலி ஏதுமின்றி, நகைச்சுவை ஒன்றே நலம் காக்கும் மருந்தென எண்ணி, படைப்புகளைத் தந்த அந்தக் கால சினிமா ஒரு ஆரோக்கியமான சினிமா என்பதற்கு “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம். காலம் கடந்தும் பேசப்படும் இந்தக் காவிய மயமான நகைச்சுவைக் காட்சிக்குப் பின் இப்படி ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்ததை, இயக்குநர் ஸ்ரீதர் திரைப்படங்களின் காப்பகம் போல் விளங்கும் சித்ராலயா கோபு பொதிகை தொலைக்காட்சியில் வழங்கிய ஒரு நேர்காணலில் கூறியதிலிருந்து நாம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.