ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் தலைப்பு 'அமரன்' என நேற்று(பிப்., 16) படத்தின் ஒரு அறிமுக வீடியோவுடன் அறிவிப்பு செய்தார்கள். அத்தலைப்பில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. பழைய படத் தலைப்புகளை வேறு எந்த நடிகர்களைக் காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்துவது சிவகார்த்திகேயன் படத்திற்காகத்தான் இருக்கும்.
அமரன்
சிவகார்த்திகேயனின் 21வது படமாக இந்த 2024ம் ஆண்டில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டில் கே ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா நடிப்பில் இதே பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஆதித்யன் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். கார்த்திக் பாடிய 'வெத்தல போட்ட ஷோக்குல,' மறைந்த நடிகை ஸ்ரீவித்யா பாடிய 'டிரிங் டிரிங்' உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை.
மாவீரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம். மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம். இதற்கு முன்பு 1986ல் ராஜசேகர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடிப்பில் இதே பெயரில் ஒரு படம் வந்துள்ளது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த 'மர்த்' படத்தின் ரீமேக்தான் அப்படம். அந்தக் கால 'மாவீரன்' படம் தமிழின் முதல் 70 எம்எம் படமாக அமைந்தது. வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.
வேலைக்காரன்
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் 2017ல் வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. கருத்தியலான படமாக இருந்தாலும் கமர்ஷியல் ரீதியாக இப்படம் வெற்றி பெறவில்லை. இதே பெயரில் ரஜினிகாந்த், அமலா நடிக்க எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1987ல் வெளியான படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை.
ஹீரோ
சிவகார்த்திகேயன் நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த படம் 'ஹீரோ'. இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா நடித்தார்கள். இதே பெயரில் ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ரகுமான், சுகன்யா நடித்து ஒரு படம் வெளிவந்துள்ளது. ஹிந்தியில் சஞ்சய் தத், மாதுரி தீட்சித், ஜாக்கி ஷெராப் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'கல்நாயக்' படத்தின் ரீமேக்தான் 1994ல் வெளிவந்த 'ஹீரோ'. வந்த தடம் தெரியாமல் ஓடிப் போன ஒரு படம். சிவகார்த்திகேயனின் ஹீரோவும் அவருக்கு வெற்றியைத் தராமல் போனது.
காக்கி சட்டை
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்க ஆர்எஸ் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் 2015ல் வெளிவந்த படம் 'காக்கி சட்டை'. சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திய ஒரு படம். இதே பெயரில் 1985ல் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த 'காக்கி சட்டை' படமும் கமலுக்கு ஒரு முக்கியமான ஆக்ஷன் படம். இரண்டு 'காக்கிசட்டை' படங்களுமே கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற படங்கள். அன்றைய படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த அனைத்துப பாடல்களையும் இப்போதும் ரசித்துக் கேட்கலாம்.
எதிர்நீச்சல்
சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா நடிக்க ஆர்எஸ் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் 2013ல் வெளிவந்த படம். தனி கதாநாயகனாக சிவகார்த்திகேயனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படம். இதே பெயரில் கே பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடிக்க 1968ல் வெளிவந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம். கருப்பு வெள்ளை காலத்திய படங்களில் காமெடி நடிகரான நாகேஷ் கதாநாயகனாக நடித்து முத்திரை பதித்த ஒரு படம். தங்கள் சினிமா வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி நாகேஷ், சிவகார்த்திகேயனுக்கு 'எதிர்நீச்சல்' பொருத்தமான தலைப்பு தான்.
புதிய தலைப்புகளுக்கு பஞ்சம் என்பதால்தான் இப்படி பழைய தலைப்புகளை மீண்டும் புதிய படங்களுக்கு வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இருந்தாலும் சில படங்களுக்கு பழைய தலைப்புகளாக இருந்தாலும் அத்தலைப்புகள் எவ்வளவு முக்கியம் என்பது படம் வந்த பிறகே தெரியும். 'அமரன்' எப்படி இருக்கப் போகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.