''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சென்னையில் பழைய சிங்கிள் தியேட்டர்கள், சில தியேட்டர் வளாகங்கள் மூடப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னை, அசோக் நகர், அசோக் பில்லர் அருகிலும், மெட்ரோ ரயில் நிலையம் எதிரிலும் உள்ள பிரபல உதயம் தியேட்டர் வளாகம் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
1983ம் ஆண்டு இந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. கடந்த 41 வருடங்களாக செயல்பட்டு வந்த இத்தியேட்டர் மூடப்பட உள்ளது என்ற தகவல் சினிமா ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்பதுதான் இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு அதிகமாகத் தெரியும்.
ஆனால், அந்தக் காலத்திலேயே இப்படி ஒரே வளாகத்தில் மூன்று, நான்கு தியேட்டர்களுடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சென்னையில் திறக்கப்பட்டன. அப்போதெல்லாம் இந்த மல்டிபிளக்ஸ் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அப்படியான தியேட்டர்களை 'காம்ப்ளக்ஸ்' என்று அழைப்பார்கள்.
சென்னையில் தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் ஆகியவை பழைய காம்ப்ளக்ஸ் தியேட்டர்களாக ஆரம்பமாகின. உதயம் காம்ப்ளக்ஸில் உதயம், சந்திரன், சூரியன் ஆகிய தியேட்டர்களில் கடந்த 40 ஆண்டுகளில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கேகே நகர், மாம்பலம் பகுதி மக்களுக்கு இந்த தியேட்டர் இத்தனை வருடங்களாக வசதியான ஒரு தியேட்டர் வளாகமாக இருந்தது. உதயம் தியேட்டரின் பால்கனி பகுதியை மாற்றி மினி உதயம் என்ற தியேட்டரை சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார்கள்.
மிக தாராளமான பார்க்கிங் வசதியுடன் உள்ள இந்த உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு தியேட்டர்களுடன் உள்ள இந்த வளாகத்தை மூடப் போவது மேலே குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு நிச்சயம் வருத்தத்தைத் தரும். பல படங்களின் பாடல் காட்சிகளில் இந்த தியேட்டர் வளாகம் இடம் பிடித்துள்ளது. அதனால், இத்திரையரங்கம் மூடப்பட்டாலும் அதன் நினைவுகள் ரசிகர்கள் மனதில் இருக்கும்.
கொரோனா காலத்திலிருந்தே மக்கள் தியேட்டர்களுக்கு வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த வளாகத்தில் கடந்த பல மாதங்களாக மாலை, இரவு நேரக் காட்சிகள் அதிகம் நடக்காமல் மூடப்படுவது வாடிக்கையாக இருந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே ரசிகர்கள் சினிமா பார்க்க வந்தார்கள். மற்ற நாட்களில் கூட்டம் வராமல் தியேட்டரை நடத்துவது சாதாரண விஷயமல்ல.
62,400 சதுர அடி கொண்ட இந்தத் தியேட்டர் 53 பங்குதாரர்களுக்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள். அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் பேச்சுவார்த்தைக்குப் பின் விற்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். 2009ம் ஆண்டு முதல் மூன்று முறை விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஒருவர் 80 கோடிக்கு ஏலம் கேட்டு விலைக்கும் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. நீதிமன்ற சிக்கலில் இருந்த இடத்தின் தற்போதைய சட்ட நிலை என்ன என்று தெரியவில்லை.
அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் முக்கியமான பகுதியில் உள்ள இந்தத் தியேட்டர் வளாகம் மூடப்பட்ட பின் அங்கு பல மாடி அடுக்குகளுடன் கூடிய குடியிருப்பு வளாகம் வர உள்ளதாகத் தெரிகிறது.