'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
கொஞ்சும் அழகு தமிழில் பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டில் முதல் பெண் வர்ணனையாளர். தமிழார்வத்தால் வெளிநாட்டு மேடைகளிலும் இவர் தன் கம்பீர குரலால் கர்ஜிக்கிறார். குறும்படம், சினிமா, விளம்பரங்கள் என மாடலிங், நடிப்பிலும் கலக்குகிறார். பட்டிமன்ற பேச்சாளரும், நடிகையுமான அன்னபாரதியின் பேட்டி...
அன்னபாரதி பற்றி
சொந்த ஊர் திருநெல்வேலி. வசிப்பது கோவில்பட்டி. எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் படித்தேன். பல்கலையின் கோல்ட் மெடலிஸ்ட். தமிழ் மேல் உள்ள காதலால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என் அம்மாவுக்கு பாரதியாரை பிடிக்கும். ஆகவே எனக்கு அன்னபாரதி என பெயர் வைத்தார். சிறு வயதிலே திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, நடன போட்டிகளில் பங்கேற்பேன். அம்மா, அப்பா பெரிய உறுதுணை.
சின்னத்திரைக்குள் நுழைந்தது எப்படி
தமிழ் ஆர்வமே என்னை மேடைகளில் ஏற்றியது. காமெடி ஜங்ஷன், அரட்டை அரங்கம், மங்கையர் மன்றம் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எல்லாரும் பேச மட்டும் செய்வர். நான் நாட்டுப்புற பாடலை பாடுவேன். தொடர்ந்து வட்டார வழக்கிலும் பேசுவேன். இந்த தனித்துவத்தை பலரும் பாராட்டினர்.
சுவாரஸ்சியமான பட்டிமன்ற அனுபவம்
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்ற மேடைகளை சந்தித்தாலும் என் முதல் மேடை ஒரு விபத்து தான். பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் வரவில்லை என்பதால் என்னை பேச அழைத்தனர். தாயா தாரமா தலைப்பில் தாய்க்கு ஆதரவாக பேசினேன். பேசும் போது 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்' என்ற பாடலை பாடினேன். மேடையில் இருந்து கீழே இறங்கியதும் ஒருவர் ரூ.100 கொடுத்தார். அதை இன்றுவரை பத்திரமாக வைத்துள்ளேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன்முதலாக மைக்கை பிடித்தேன். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பாயாசமா, ஐஸ் கிரீமா என்று பேசியதையும் இன்னும் மறக்கவில்லை நான்.
பேச்சாளருக்கு மாடலிங், நடிப்பு ஆர்வம்...
சின்னத்திரை அனுபவத்தால் நடிப்பு ஆர்வம் வந்தது. நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குற்றம் குற்றமே, வீரபாண்டியபுரம் படங்களிலும், செங்களம் வெப்சீரிஸ்சிலும் நடித்து வருகிறேன்.
பட்டிமன்றம், சினிமாவில் ரோல் மாடல்கள்...
பட்டிமன்றத்தில் மதுரை முத்து. அவரோடு நான் இணைந்து பேசிய வீடியோக்கள் வைரல். சினிமாவில் நயன்தாரா. பெண்ணாக எவ்வளவு பிரச்னை இருந்தாலும் முட்டி மோதி வெற்றி கண்டு கொண்டிருக்கிறார்.
உங்களுடைய இலக்கிய வாசிப்பனுபவம்
'இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்' என்ற கம்பராமாயண வரிகள் பிடிக்கும். கற்க கசடற என்ற திருக்குறளும் மிகவும் பிடிக்கும். இந்த குறளில் துணைக்கால் வராது. நன்றாக படித்தால் நம் சொந்த காலிலே நிற்கலாம் என்பதை உணர்த்துகிறது.
முதல் பெண் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்...
சத்திரப்பட்டி, கீழக்கரை ஜல்லிக்கட்டுகளில் 'மாடு வருது துள்ளிக்கிட்டு, தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு', 'சீறி வரும் காளையின் வேகமா, ஏறி வரும் காளையரின் வேகமா' என எதுகை மோனையோடு பேசி, ஜல்லிக்கட்டு சார்ந்த பாடல்களையும் பாடினேன்.
அடுத்த பட வாய்ப்புகள், எதிர்கால திட்டம்
இரண்டு திரைப்படங்களில் நடிக்க கேட்டுள்ளனர். காமெடி ரோலும், சீரியஸ் ரோலும் வருகிறது. நான் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை மக்கள் கொடுக்கும் வரவேற்பை வைத்து முடிவு செய்வேன். என்னை பொறுத்த வரையில் நல்ல குணசித்திர நடிகையாக வலம் வர ஆசை. என்றைக்கும் பட்டிமன்றத்தையும், மைக்கையும் விடமாட்டேன்.
சாதிக்க விரும்பும் பெண்களுக்கு...
பெண்பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதை விட ஆண் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லி வளர்க்க வேண்டும். பெண்கள் தங்கள் திறமைகளை பயப்படாமல் வெளிக் கொண்டு வர வேண்டும்.