ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
அறிமுக இயக்குனர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து பெரும் வெற்றிகளைக் குவித்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எழில் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இசையில், விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் 1999ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி வெளிவந்த படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. இன்றுடன் இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிறது.
90களில் தமிழ் சினிமாவில் அதிகமான காதல் படங்களே வெளிவந்தது. குறிப்பாக விஜய் நடித்து அப்போது வெளிவந்த காதல் படங்களில் 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் பெரிய வெற்றியைப் பெற்று அதிக நாட்கள் ஓடிய ஒரு முக்கியமான படம்.
பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் விஜய். அவரது குரலை மட்டுமே ரசிப்பவர் சிம்ரன். விஜய்யை நேரில் பார்க்கும் போதெல்லாம் அவர் ஒரு ரவுடி என நினைப்பார் சிம்ரன். தன் மனம் கவர்ந்த பாடகர்தான் அவர் என்பது சிம்ரனுக்குத் தெரியாது. இந்நிலையில் விஜய்யால் சிம்ரனின் கண் பார்வை பறி போகிறது. தன்னால் பார்வை போன சிம்ரனுக்கு தன் சிறுநீரகத்தைத் தானம் செய்து பார்வை கிடைக்க வைக்கிறார். ஆனால், தீவிரவாதி என தவறுதலாகக் கைதாகி 7 வருட சிறைதண்டனை அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறார். இதனிடையே, சிம்ரன் ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகிறார். சிம்ரனை சந்திக்கச் செல்கிறார் விஜய். ஆனால், விஜய்தான் தன் பார்வை பறி போகக் காரணம் என நினைக்கும் நினைக்கும் கலெக்டர் சிம்ரன், விஜய்யை கைது செய்யச் சொல்கிறார். விஜய்தான் தன் மனம் கவர்ந்த பாடகர், என்ற உண்மை சிம்ரனுக்குத் தெரிய இருவரும் ஒன்று சேர்கிறார்கள். இதுதான் படத்தின் கதை.
குட்டி என்ற கதாபாத்திரத்தில் விஜய், ருக்கு என்ற கதாபாத்திரத்தில் சிம்ரன், மணி என்ற கதாபாத்திரத்தில் மணிவண்ணன் மற்ற கதாபாத்திரங்கள் என இப்படம் பல நினைவுகளை இத்தனை வருடங்களுக்குப் பின்பும் சுமந்து நிற்கிறது.
200 நாட்களைக் கடந்து ஓடிய படங்களில் இப்படமும் ஒன்று. விஜய்யின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. விஜய் - சிம்ரன் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடிய காலம் அது.
எஸ்ஏ ராஜ்குமார் இசையில், “தொடத் தொடவெனவே, இன்னிசை பாடி வரும், இருபது கோடி, மேகமாய் வந்து போகிறேன்” ஆகிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.
தெலுங்கில் நாகார்ஜுனா, சிம்ரன் நடிக்க 'நுவ்வு வஸ்தாவனி' என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. கன்னடம், பெங்காலி, ஹிந்தி, ஒடியா ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது.
காதல் நாயகனாக நடிக்கும் வயதை விஜய் கடந்துவிட்டார். இருந்தாலும் இளம் வயதில் அவர் நடித்த காதல் படங்கள் சில தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்றவை. “பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி,” ஆகிய படங்கள் விஜய்யின் மறக்க முடியாத காதல் படங்கள்.