சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய்யை வைத்தே மூன்று படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு மற்றும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் ராஜா ராணி படத்தில் துவங்கி விஜய்யின் படங்கள் வரை அட்லீ ஏற்கனவே வெளியான ஹிட் படங்களில் இருந்து கதையின் சாராம்சம் மற்றும் சில காட்சிகளையும் உருவி தனது படங்களில் வைத்திருந்தார் என அவரது படம் வெளியாகும்போதெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள ஜவான் படத்தின் கதையை இதுவரை இல்லாத விதமாக புதிதாக உருவாக்கி இருப்பாரோ என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் நிறையவே இருந்தது. ஆனால் வழக்கமாக ஒரு படத்திற்கு இன்னொரு படத்தை மட்டுமே தழுவி எடுத்து வந்த அட்லீ, ஜவான் படத்தில் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் முக்கியமான காட்சிகளை பாரபட்சம் பார்க்காமல் உருவி ஜவான் படத்தை ஒரு கதம்ப சாதமாக கொடுத்துள்ளார். சாம்பிளுக்கு இதோ சில காட்சி ஒற்றுமைகளை பார்க்கலாம்.
Who Am I
ஜவான் படத்தின் ஆரம்பக் காட்சி ஜாக்கிசான் நடித்த ‛who am I' படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளில் இருந்து தழுவப்பட்டுள்ளன.. அதே ஆரம்பக் காட்சி கமல் நடித்த வெற்றி விழா படத்தின் ஆரம்ப காட்சிகளுக்கும் பொருந்தும்.. மேலே சொன்ன இரண்டு படத்திலும் கதாநாயகர்கள் போலீஸ் அதிகாரிகள்.. விபத்து காரணமாக தாங்கள் யார் என்பதையே மறந்து விடுவார்கள்.
ஆரம்பம்
இதில் எதிரி நாட்டு வீரர்களுடன் சண்டையிடும்போது துப்பாக்கி வேலை செய்யாமல் போவது போல ஆரம்பம் படத்தில் இதேபோன்று ஒரு காட்சி உள்ளது, எதிரி நாட்டு வீரர்களுடன் மோதும்போது தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டுளை அணிந்ததால் இந்திய வீரர்கள் பலர் பலியாவது.. இதனாலேயே கதாநாயகன் தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு எதிரியை பழிவாங்க கிளம்புவது என அஜித் படத்திற்கும் சம மரியாதை செலுத்தியுள்ளார் அட்லீ.
சர்தார்
ராணுவத்தாலேயே துரோகி என முத்திரை குத்தப்பட்ட உளவுத்துறை அதிகாரி வயதான காலத்தில் அவரது போலீஸ் அதிகாரியான மகனுடன் சேர்ந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்துவதுடன் எதிரியை அழிப்பது கடந்த வருடம் வெளியான சர்தார் படத்திலிருந்து டீசன்டாக உருவப்பட்டு ஜவானில் சேர்க்கப்பட்டுள்ளது.
கத்தி
தந்தை போல வேடமிட்டு மகன் ஷாருக்கான் லைவ்வில் வந்து பேசுவது, ஆனால் உண்மையான அப்பா கதாபாத்திரம் வில்லன்களிடம் சிக்கி இருப்பது.. வில்லன் இந்த லைவ் பார்த்து அதிர்ச்சியாவது.. இதை அப்படியே விஜய் நடித்த கத்தி படத்தில் இருந்து உருவி இருக்கிறார் அட்லீ... விஜய் தனது அண்ணன் என்பதால் கோபித்துக்கொள்ள மாட்டார் என அட்லீ நினைத்து விட்டார் போல.
தர்மத்தின் தலைவன்
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆஜானுபாகுவான உயரம் கொண்ட மனிதனுடன் ஷாருக்கான் மோதுவது எல்லாம் தர்மத்தின் தலைவன் படத்தில் ஏற்கனவே ரஜினிகாந்த் செய்து காட்டியதுதான்.
இன்னும் இதுபோல பல படங்களில் இருந்து காட்சிகளை எடுத்து ஜவானுக்காக அட்லீ பயன்படுத்தி இருப்பதை பார்க்கும்போது தமிழில் தானே இந்த காப்பி பிரச்னை எல்லாம், ஹிந்தி ரசிகர்களுக்கு இது தெரியப் போகிறதா என்ன, என நினைத்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது.