ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள்தான் பெருமைக்குரிய ஒரு விருதாகக் காலம் காலமாகக் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் 'சிறந்த ஒரிஜனல் பாடல், சிறந்த சர்வதேசத் திரைப்பட விருது, சிறந்த டாகுமென்டரி திரைப்பட விருது, சிறந்த டாகுமென்டரி குறும்பட விருது' ஆகிய பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டன.
இவற்றில் 'சிறந்த ஒரிஜனல் பாடல்' விருதில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் விருதை வென்றுள்ளது. அடுத்து 'சிறந்த டாகுமென்டரி குறும்பட' விருதில் 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படம் விருதைப் பெற்றுள்ளது. இரண்டு இரண்டு விருதுகளும் இந்தியத் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' குறும்படம் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், டக்லஸ் பிலஷ், கார்த்திகி கொன்சால்வெஸ், குனீத் மோங்கா, அசின் ஜெயின் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் கொன்சால்வெஸ் முதல் முறை இயக்கியுள்ள படம் இது. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி 'டிஓசி என்ஒய்சி' திரைப்பட விழாவில் முதன் முதலில் திரையிடப்பட்டது. அமெரிக்காவில் டாகுமென்டரி படங்களுக்காக நடத்தப்படும் திரைப்பட விழா அது. அதன் பின் இந்தப் படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
அனாதையாக வந்த யானைகளின் பராமரிப்பு கதை
தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் ஊட்டி அருகே உள்ள முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் தம்பதியரான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரைப் பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தேசியப் பூங்காவில் அனாதையாக வந்த ரகு என்ற யானைக் குட்டியை வளர்க்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த யானைக்குட்டியை அவர்கள் பாசத்துடன் எப்படி வளர்க்கிறார்கள் என்பதுதான் இந்தக் குறும்படத்தின் கதை. யானைக்கும், அவர்களுக்கு இடையிலான பாசப் பிணைப்பு, யானையை அவர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்பது பற்றிய விளக்கம் ஆகியவை அந்த டாகுமென்டரியில் இடம் பெற்றுள்ளது.
5 ஆண்டுகளாக உருவான கதை
இப்படத்திற்காக ஐந்து வருடங்கள் வரை உழைத்திருக்கிறார் படத்தை இயக்கிய பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வெஸ். இப்படம் பற்றிய அனுபவத்தைப் பற்றி கார்த்திகி கூறுகையில், “பொம்மன் ரகுவுடன் ஒரு நாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பார்த்தேன். அப்போது முதலே ரகு மீது காதலில் விழுந்துவிட்டேன். அவரின் தோளைப் பற்றிக் கொண்டு மூன்று மாதக் குட்டியான ரகு நடந்து கொண்டிருந்தது. நான் உடனே ஓடிச் சென்று அங்கு ஆற்றில் ரகுவை அன்புடன் தடவிக் கொடுத்தேன். அந்த சமயத்தில் பொம்மனுக்கும் ரகுவுக்கும் இடையே இருந்த பாசத்தை உணர்ந்தேன். இந்தப் படத்தைக் கனடாவிலும், அமெரிக்காவிலும் திரையிட்ட போது பெருமையாக உணர்ந்தேன். மிருகங்கள் கொல்லப்பட்டு வரும் இந்தக் காலத்தில் ஒரு மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையே உண்ண பிணைப்பைப் படமாகக் கொடுக்க ஆசைப்பட்டேன்.
2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 5 ஆண்டுகளில் 450 மணி நேரத்திற்குக் காட்சிகளைப் படமாக்கினோம். இந்தப் பயணத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்தினோம். இந்த டாகுமென்டரியில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி உங்களால் எதையும் யூகிக்க முடியாது. பொம்மன் மற்றும் பெல்லியும், யானைகளும் நடிகர்கள் அல்ல. டாகுமென்டரி படம் எடுப்பதென்பது சுவற்றின் மீது ஈ இருப்பது போலத்தான். அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் ஐடியா, ஆனால் அங்கே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கவும் இல்லை. இந்தப் படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம்,” என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தைத் தயாரித்துள்ளவர்களில் குனீத் மோங்காவும் ஒரு பெண் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது வென்றது குறித்து, “ஒரு இந்தியத் தயாரிப்புக்கு முதல் முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளோம். இரண்டு பெண்கள் இதை சாதித்துள்ளனர். எனக்கு இன்னும் நடுக்கமாகவே இருக்கிறது. இந்த விருதை வென்றதற்கும், இந்தக் கதையை தந்தற்கும் கார்த்திகிக்கு நன்றி. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும்… எதிர்காலம் தைரியமானது, எதிர்காலம் இங்கே உள்ளது..போகலாம் வாருங்கள்..ஜெய்ஹிந்த்,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏஆர் ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றதை விட, 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றதை விட இரண்டு பெண்கள் தங்களது இந்தியப் படைப்பு மூலம் இந்திய மண்ணுக்கும், இந்தியப் பெண்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர்கள் வலிமையான 'யானைப் பெண்கள்' .