''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சென்னை : பண்டிகை காலங்களில் தியேட்டர்களில் நேரடி தெலுங்கு படத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் விஜய்யின் ‛வாரிசு' படத்திற்கு அங்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில், பண்டிகை காலங்களில் தியேட்டர்களில் நேரடி தெலுங்கு படத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்களை அறிவுறுத்தி உள்ளது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்திற்கு அங்கு சிக்கல் எழுந்துள்ளது. இது இரு மொழி படம் என்றாலும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இதை டப்பிங் படமாகவே கருதுகின்றனர்.
தமிழகத்தில் தமிழ் படங்கள் தவிர்த்து பிற மொழி படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் போன்ற படங்கள் இங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகி வசூலை குவித்தன. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாது தமிழ் சினிமா வட்டாரத்திலும் புயலை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை :
தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ் சினிமாவை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இதனால் விஜய்யின் வாரிசு படம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
நேரடித் தெலுங்குத் படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் படங்களோ தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சமும் காட்டப்படுவது இல்லை. தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும். பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை. 'கலைக்கு மொழி இல்லை' என்று கூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.
திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்திக்கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல! தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? இது விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சினிமா என்பது அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடியது. மொழி கடந்த இந்த கலையில் இப்போது மொழி சார்ந்த அரசியல் நுழைந்திருப்பது சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது சாமானிய மக்கள் இடையேயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.