ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
மாநாடு வெற்றிப்படத்தை அடுத்து, மன்மதலீலை என்ற 'அடல்ட்' படத்தை கொடுத்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, அப்பா தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
மன்மத லீலை என்ன மாதிரியான கதை?
'எல்லா ஆண்களும் ராமர்களே; மாட்டிக் கொள்ளும் வரை. இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்கள்' இது தான் படத்தின் கதை. அடல்ட் படம் தான். ஆனாலும் குடும்பத்தோடு, நண்பர்களோடு பார்க்கலாம். படத்தை பார்த்ததும், அவரவர் பழைய நினைவலைகளை இப்படம் தட்டி எழுப்பும். அமெரிக்காவில் இந்த மாதிரி படங்கள் நிறைய வந்துள்ளன. நம்மூரில் தான் இதை சரியாக கொண்டு செல்லவில்லை. இதற்கு முன் சதிலீலாவதி, மன்மத லீலை போன்ற பல படங்களை நம் இயக்குனர்கள் கொடுத்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை இயக்குனர்கள் தொட்டு விட்டால், அதன் பின் எந்த மாதிரியான படமும் எடுக்கலாமா?
அப்படியெல்லாம் இல்லை. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் தருவேன். பட்ஜெட், நாயகன் எல்லாம் இரண்டாம் பட்சமே. அஜித், கார்த்தி, சூர்யா, சிம்பு என யார் எடுத்தாலும், அவர்களை வித்தியாசமாகவே காட்டினேன். அவர்கள் செய்யாத பாத்திரத்தை தரும் போது அவர்களுக்கும் ஒருஉற்சாகம் வரும். அஜித்தை மங்காத்தா வில் வில்லனாக மாற்றியது போல், நமக்கும் சவாலாக இருக்கும். ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கிடைக்கும்.
தமிழில் நல்ல கதைகள் அதிகம் வருவதில்லையே ஏன்?
இங்கு எழுத்தாளர்கள் எல்லாம் இயக்குனர்களாகிவிட ஆசைப்படுகின்றனர். முன்னாடி பாரதிராஜா, கே.பி., சார் எல்லாருக்கும் எழுத்தாளர்கள் இருந்தனர். இன்று எல்லாமே ஒருவரே செய்வதால், நல்ல கதைகளுக்கு பஞ்சமாகி விடுகிறது.
பெரிய பட்ஜெட் படங்களுக்கும், கதைக்கான படங்களுக்கும் வித்தியாசம் என்ன?
மலையாளப் படங்கள் பெரிய பட்ஜெட் இல்லை. கதையை மட்டுமே நம்புகின்றனர். த்ரிஷ்யம் படம் பெரிய பட்ஜெட் படமில்லை; ஆனால் அப்படம் சீன மொழியிலும் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் மட்டுமே, பேசப்படும் படமாகாது. கே.ஜி.எப்., படம் தான், உலகையே கன்னட திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. இதற்கு கதை தான் காரணம். இந்த கொரோனா காலத்தில் ஓ.டி.டி.,க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நிறைய கதைக்களை அருமையாக மலையாள திரையுலகினர் கொடுத்துள்ளனர்.
அப்பா உங்களை மிரட்டுகிறாராமே?
மாத செலவுக்கு காசு அனுப்ப சொல்வார். தாமதமானால், நான் முதலில் இயக்கிய பூஞ்சோலை என்ற படத்தை வெளியிட்டு விடப்போவதாக மிரட்டுவார்.
இசையில், அப்பாவும் இளையராஜாவும் மீண்டும் இணைவார்களா?
விரைவில் என் அடுத்த படத்தில் அப்பாவும், இளையராஜாவும் இசையில் இணைந்து பணிபுரிவர்.
- -நமது நிருபர் --