ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா - யாருடன் சிவா கூட்டணி?
09 நவ, 2021 - 11:52 IST
ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் வெளிவந்துள்ள அண்ணாத்த படம் கடும் விமர்சனங்களையும் மீறி ரஜினிகாந்த் படத்துக்குரிய வசூலையும் பெற்று வருகிறது. இதற்கிடையே, சிவா இயக்கும் அடுத்த படம் என ஆளுக்கொரு கருத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாத்த வெளியீட்டிற்கு முன்பாக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா மீண்டும் சிவா - ரஜினிகாந்த் கூட்டணி இணைய வேண்டும் என தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை சவுந்தர்யாவே சொந்தமாகப் படம் தயாரித்து நிறைவேற்றப் போவதாக ஒரு தகவல்.
அண்ணாத்த படத்திற்கு முன்பாக சூர்யா நடிக்கும் படத்திற்குத்தான் சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மீண்டும் அந்தப் படத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் என ஒரு தகவல்.
விஜய்யிடம் ஏற்கெனவே கதை சொல்லி இருக்கிறார் சிவா. அதனால், அந்தக் கூட்டணியும் மீண்டும் இணையலாம் என்பது வேறொரு தகவல்.
சிவாவின் ஆஸ்தான நாயகன் அஜித் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால், அவர்கள் கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்பது மற்றொரு தகவல்.
இவையனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடப்படும் தகவல்கள். படப்பிடிப்பிற்கு செல்லும் வரை இன்னும் இது போன்ற பல தகவல்கள் வரலாம்.