தினமலர் விமர்சனம் » ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தினமலர் விமர்சனம்
முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’
சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.
உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும் அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவரை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!
மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இதைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!
அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!
தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!
இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.
ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.
---------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள்
வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில்
திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள
சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ
ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட். ஒரு ராத்திரில வழியில ஒரு விபத்தைப்பார்க்கறாரு.
போலீஸ் உதவல. அதனால் தானே விபத்தில் பாதிக்கப்பட்ட ஆளை தன் வீட்டுக்கு
கொண்டு போய் சிகிச்சை தர்றாரு, அவருக்கு துப்பாக்கிக்குண்டு
பாய்ஞ்சிருக்கு. போலீசால் தேடப்படும் குற்றவாளி.ஆபரேஷன் பண்ணி முடிச்சதும்
அந்தாள் தப்பிடறார். வந்தது வினை. போலீஸ் ஹீரோவை கைது பண்ணிடுது. இப்போ
யாரைக்காப்பாத்தினாரோ அவரை, ஹீரோ சுட்டுக்கொலை பண்ணனும், இதுதான் போலீஸ்
கொடுக்கும் அசைன் மெண்ட். இதை செய்யலைன்னா 10 வருசம் சிறை தண்டனை. இப்போ
ஹீரோவுக்கும் , அந்த குண்டு காயம்பட்ட ஆளுக்கும் நடக்கும் யுத்தமே கதை .
கடந்த
15 வருடங்களில் தமிழில் வந்த மிகச்சிறந்த த்ரில்லர் படங்களில் இது
ஒன்று. சபாஷ் மிஷ்கின். 1972 ல் வந்த ராஜேஷ் கன்னாவின் துஷ்மன் (எதிரி)
அதன் உட்டாலக்கடி ரீ-மேக்கான சிவாஜி கணேசனின் நீதி படத்தின் சாயல்கள் ஓ ஆ
கு-ல இருக்கு. அது போக இது ஒரு போர்த்துகீசிய மொழிபடத்தின் தழுவல்
தாக்கம் என மிஷ்கினே சொல்லிட்டதால படத்தைப்பத்தி மட்டும் மேற்கொண்டு
பார்ப்போம்.
இளையராஜா தான் படத்தின் முதுகெலும்பு. ஒரு
த்ரில்லர் மூவிக்கு இசை எந்த அளவு முக்கியம் என்பதை இளையராஜா அநாயசமாக
உணர்த்தி இருக்கிறார். இதே படத்தை பின்னணி இசை இல்லாமல் மியூட் செய்து
பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும். அபாரமான பிஜிஎம், அதுவும்
க்ளைமாக்சில் அட்டகாசமான துள்ளல் இசை
வழக்கு எண் ஹீரோ ஸ்ரீ
தான் இதிலும் ஹீரோ , அருமையான நடிப்பு , மிஷ்கின் நடிப்பும் கன
கச்சிதம். அந்த பார்வை அற்ற சிறுமி உருக்கமான நடிப்பு. எட்வர்ட் என படம்
முழுக்க அழைக்கும் அந்தப்பொண்ணும் அழகு நடிப்பு.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1.
எரியும் வீட்டில் பிடுங்குவது எல்லாம் லாபம் என போலீஸ் விபத்தில்
பாதிக்கப்பட்ட ஆளிடம் வாட்சை சுடும் காட்சி போலீஸ்காரங்களூக்கு சவுக்கடி.
தியேட்டரில் செம அப்ளாஷ் அந்த காட்சிக்கு
2. ஒரு போலீஸ்காரர்
துரோகி ஆன இன்னொரு போலீஸ் ஆஃபீசருக்கு “ அய்யா “ என்பதை மாறுபட்ட
உச்சரிப்பில் 3 முறை சொல்வது கிளாஸ் நடிப்பு .
3. படம் முழுக்க
வைக்கப்பட்ட கேமிரா கோணங்கள் அபாரம் . வரும் காலகட்டத்தில் ஃபிலிம்
இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்களூக்கு மிஷ்கின் படங்கள் ஒரு பாடமாக இருக்கும்
4.
எடிட்டிங்க், ஒளிப்பதிவு மிக அருமை. முழுப்படமும் இரவில் தான் நடக்கிறது.
மிஷ்கினுக்கு சூரிய வெளிச்சமே ஆகாது போல, ஆனால் அந்தக்குறையே தெரியாத
வண்னம் அபாரமான ஒளிபதிவு
5. பின் பாதியில் வரும் 20 நிமிட இழுவைக்காட்சிகள் தவிர படம் பூரா செம விறுவிறுப்பு. ஹாட்ஸ் ஆஃப் டோட்டல் டீம், கலக்கல்.
இயக்குநரிடம் சில கேள்விகள் 1.
ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ கிட்டே நாளைக்கு எப்போ எக்சாம்?னு கேட்கப்படும்
கேள்விக்கு காலை 10 30 மணிக்குனு பதில் சொல்றார். எல்லா எக்சாமும் காலை
9-9 30க்கு ஆரம்பிச்சுடும்.
2. சாலையில் விபத்தைப்பார்த்த ஹீரோ உடனே ஏன் 108 க்குக்கூப்பிடலை? கூப்பிட்டு வேன் வராம இருந்து பின் இவர் காப்பாத்துனா ஓக்கே
3.
ஓநாய் கேரக்டர் 40 கொலை செஞ்சவன்னு ஒரு இடத்துல வசனம் வருது, இன்னொரு
இடத்துல அவன் மேல 14 கொலைக்கேஸ் இருக்குன்னு வருது. ஏன் இந்தக்குழப்பம்?
எல்லாமே வில்லனால் ஜோடிக்கப்பட்டவை என்றாலும் செய்வன திருந்தச்செய்ய
வேண்டாமா?
4. ஹீரோவுக்கு ஷூட்டிங்க்கு போலீஸ் ட்ரெயினிங்க்
கொடுக்குது. ஆனா காதுல பாதுகாப்புக்கவசம் தலையே? தொழில் முறை போலீசே
காதுல எதையாவது தடுப்புக்கு மாட்டிட்டு அதை செய்யும்போது புது ஆள் ஏன்
மாட்டிக்கலை?
5. போலீஸ் ஆஃபீசரா வரும் அந்த வெள்ளை சட்டைக்காரர்
பாடி லேங்குவேஜ் சரி இல்லை. நாடகம் நடக்கும்போது திடீர்னு நீ போய் நடின்னு
அறிமுகம் இல்லாத ஆளை தள்ளி விட்டா எப்படி பதட்டத்துடன் நடந்துக்குவாரோ
அப்படி நடந்துக்கறார். சீன் முடிஞ்சதும் அப்பாடா எப்போடா நம்ம பார்ட்
முடியும்கற மாதிரி இருக்கு.
6. சாதா போலீஸ் எல்லாம் க்ளோஸ்
கட்டிங்க் பண்ணி டிரஸ்ஸிங்கல நீட்டா இருக்கும் போது ஹை லெவல் சி பி சி ஐ
டி ஆஃபீசர் பொருத்தமே இல்லாத சட்டை அணிந்திருப்பது உறுத்தல்
7.
ஹீரோவுக்கு மிஷ்கின் மேல் எந்த குரோதமும் விரோதமும் இல்லை. போலீஸ் அவரை
கொலை செய்யச்சொன்னபோதும் அவருக்கு முழு மனதும் இல்லை , ஆனால் மிஷ்கினை
கொலை வெறியுடன் அவர் பார்க்கும்போது என்னமோ அவர் சொந்த மாமன் மகளை கொலை
செய்தவரைப்பார்ப்பது போல் ஆக்ரோசமாகபார்ப்பது ஏன்? ஓவர் ஆக்டிங்க்
சி.பி.கமெண்ட்
- த்ரில்லர் மூவி ரசிகர்கள் எல்லோரும் பார்க்கலாம். இளையராஜா
ரசிகர்கள், ஏ.ஆர்.ஆர்., ரசிகர்கள் பார்க்கலாம் (அப்போத்தான் பிஜிஎம்
பற்றி அவங்க தெரிஞ்சுக்கலாம்) பிரமாதமான மேக்கிங்க் ஸ்டைல் உள்ள இந்த படம்
தமிழ்நாடு பூரா டப்பா தியேட்டர்களில் போட்டிருப்பது வருத்தம்.
-----------------------------------
குமுதம் விமர்சனம்
பாடல்கள் கிடையாது.கதாநாயகி கிடையாது. ஏன் வசனம் கூட ரொம்பக் கிடையாது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லா இயக்குநர்களிடமிருந்தும் வித்தியாசப்பட்டு தான் நினைத்ததை நினைத்தபடி எடுத்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறார் மிஷ்கின்.
ஓநாய், ஆட்டுக்குட்டி என்று தலைப்பு இருந்தாலும் படம் சிறுத்தைப்புலி வேகம்.
ரோட்டில் ஒருவன் துப்பாக்கிக் காயம் பட்டு உயிருக்குத் தவிக்கிறான். வழக்கம்போல் எல்லோரும் வேடிக்கை பார்த்துவிட்டுப் போகிறார்கள். ஆனால் மருத்துவக்கல்லூரி மாணவன் ஒருவன் மட்டும் அவனைக் காப்பாற்றி தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைக்கிறான். மறுநாள் அந்த காயம்பட்ட ஆளைக் காணவில்லை. வாசல் கதவை போலீஸ் தட்டுகிறது. 14 கொலைகள் செய்த ஒரு குற்றவாளிக்கு சிகிச்சை தந்து தப்பிக்க விட்டதாய் அவனையும், குடும்பத்தையும் போலீஸ் பந்தாடுகிறது. அப்புறம் என்ன? யார் அந்தக் குற்றவாளி ஓநாய்? அவன் ஏன் பல கொலைகளைச் செய்தான்? இந்த ஆட்டு்க்குட்டியின் கதி என்ன? என்பதைக் காட்டுக்குள் கண்ணைக் கட்டிக்கொண்டு பயனித்தால்தான் கண்டுகொள்ள முடியும்.
படத்தைத் தன் சிறிய தோளில் தாங்கி எங்கேயோ உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார் இளையராஜா. சில இடங்களில் ஓநாயாய்ப் பாயும் இசை. திடீரென ஆட்டுக்குட்டியாய் கொஞ்சுகிறது. சில நேரம் மெளனம் காட்டி மனத்தைப் பிசைகிறது. படத்தை இன்னொரு முறை இளையராஜாவுக்காக கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் போலிருக்கிறது.
மிஷ்கின் ஒரு குற்றவாளி. இரக்கமில்லாமல் கொலை செய்தவர் என்று தெரியும்போதும் அவர் மீது நமக்கு கோபம் வராமல் எப்படியாவது தப்பிக்கட்டும் என்ற பரிவு தோன்றுகிறதே. அதுதான் திரைக்கதை ஆசிரியராகவும் மிஷ்கினின் வெற்றி.
சின்னச்சின்ன காட்சிகளில் அவரவர்களுக்கான உலகத்தைக் காட்டியிருப்பது, அதுவும் படம் முழுக்க ஏராளமாகக் காட்டியிருப்பது நெகிழ வைக்கிறது. அந்த கான்ஸ்டபிள் வாழ்நாள் பூராவும் சொன்ன ‘ஐயா’ என்ற ஒற்றை வார்த்தையிலேயே தன் உயிரின் மிச்சம் ஒட்டியிருப்பதை உணரும் காட்சியாகட்டும், தன் வீட்டிலேயே ஒரு மரணம் விழுந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஸ்ரீ செய்யும் பெரிய ஆபரேஷனுக்கு உதவும் அந்த டாக்டரின் அட்வைசாகட்டும், இப்படி நினைத்து நினைத்து பிரமிக்க வைக்கும் காட்சிகள் படம் பூராவும் நிரவிக் கிடக்கிறது.
ஆனால் தன் ஃபிளாஷ்பேக்கை டி.ஆர். பாணியில் கதை சொல்லும்போது, அவர் மட்டுமல்ல, பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.
மிஷ்கினுக்கு இணையாக ஸ்ரீயின் அந்தப் பதட்டம், கோபம், இரக்கம் எல்லாம் நைஸ்!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் காட்டுக்குள்ளே திருவிழாகுமுதம் ரேட்டிங்: நன்று
----------------------------------------
கல்கி விமர்சனம்
சம்பவங்களும் திருப்பங்களும் வசனங்களும் நிறைந்த கதையம்சத்தோடு திரைப்படங்கள் தரும் அனுபவம் ஒருவகை என்றால், வெறும் உணர்வுகளும் மௌனங்களும் மட்டுமே பேசும் திரைப்படங்கள் அதைவிட அழுத்தத்தையும் ஆழத்தையும் தரக்கூடியவை. இரண்டாம் வகையைச் சேர்ந்தது மிஷ்கினின் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
கதையை நாளிதழின் ஓரத்தில் உள்ள இடைவெளியில் எழுதிவிடலாம். மனம் திருந்திய கொலைகாரன் படும் அவஸ்தைதான் கதை. கூலிக்குக் கொலை செய்துவந்த வுல்ஃப்(மிஷ்கின்), ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து போலீஸ்காரர்களிடமிருந்தும், எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, இறுதியில் இறந்து போகிறார். இதை மிரட்டலான திரைக்கதையில் கோத்து வாங்கி, கேமராவால் செழுமைப்படுத்தி, இசையால் மெருகூட்டி, நடிப்பால் நகாசு செய்து, திரையில் ஓடவிட்டு இருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கின்னும் "வழக்கு எண் 18/9 ஸ்ரீயும்தான் ஹீரோக்கள். ஒரே இரவுக்குள் நடைபெறும் சேஸிங்தான் த்ரில்லிங். சென்னை மாநகரத்தின் இரவும் அதன் அமைதியும் இப்படித்தான் இருக்கும் என்பதைத் தன்னுடைய ஒவ்வொரு ஃப்ரேமிலும் தீட்டியிருக்கிறார் கேமராமேன்.
ஒவ்வொரு சீனும் ஆங்கிலப் படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டு இருக்கிறது. வுல்ஃப், ஸ்ரீயைச் சந்திக்க மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் சீன், சபாஷ்! தன்னுடைய கதையை, கல்லறைத் தோட்டத்தில் உட்கார்ந்து, ஒரே ஷாட்டில் உணர்ச்சி பொங்க மிஷ்கின் விவரிக்கும் விதத்தில் ஒரு நூறு கவிதை, உணர்ச்சிப் பொங்கல்.
இசை விமர்சகரான ஷாஜியிடம் இவ்வளவு நடிப்பாற்றலா? அவரது உயரமும் கைகளுமே போலீஸ் மிடுக்கை கூட்டுகின்றன. ஸ்ரீயின் முகத்தில் பதற்றம், வேகம், கோபம், அழுகை எல்லாம் அவ்வளவு பொருத்தம். இளையராஜாதான் படத்தின் முழு பலம். அமைதியையும் தன் இசையால் அழகுபடுத்துவதோடு, நம்மை சீட் நுனியிலும் அமர வைக்கிறார்.
படம் நெடுக ஏராளமான போலீஸ் வாகனங்கள் பறந்துகொண்டே இருக்கின்றன. துப்பாக்கிகளும் டுமீல் டுமீல் என்று வெடித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ் சினிமா இலக்கணப்படி, ஹீரோவுக்கு கடைசியில்தான் குண்டடி படுகிறது. மிஷ்கின் படத்தில் வழக்கமாக இடம்பெறும் மஞ்சள் புடைவை குத்துப்பாட்டு இதில் இல்லை! ஆரம்பத்தில் வீட்டில் வைத்தே ஒரு பெரிய ஆபரேஷனை ஸ்ரீ செய்வது கொஞ்சம் ஓவர்! அதற்கு அவரது ஆசிரியர் மொபைல் போனிலேயே வழிகாட்டுகிறார் என்பது நம்பும்படியாக இல்லை.
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - புதிய டுமீல் அனுபவம்!