Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மாற்றான்

மாற்றான்,Maatran
15 அக், 2012 - 17:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாற்றான்

தினமலர் விமர்சனம்



சூர்யா, கே.வி.ஆனந்த், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட “அயன்’ வெற்றிக்கூட்டணி மறுபடியும் இணைந்து உருவாக்கி இருக்கும் படம்தான் “மாற்றான்’. சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் பிரமாண்டமான தமிழ்படம்!

கதைப்படி, ஜெனிட்டிக் சையின்டிஸ்ட் எனப்படும் மரபணு விஞ்ஞானி சச்சின் கடேகர், தனது மனைவி தாராவின் கர்ப்பத்திலும் தனது விஞ்ஞானத்தை விதைக்கிறார். அதன் விளைவு ஒரே இதயத்துடன் இரட்டை குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இதயம் இல்லாத குழந்தையை வெட்டி பிரித்து எடுத்து விடலாம் என மருத்துவர்கள் ஆலோசனைக் கூற அதை ஏற்க மறுக்கிறார் தாயார் தாரா. அகிலன், விமலன் எனப் பெயர் சூட்டி, இருவரையும் அன்பு பாராட்டி, சீராட்டி வளர்க்கிறார்கள் சச்சினும் தாராவும்! இரட்டையர்கள் பிறந்த நேரம் “எனர்ஜியான்’ எனும் பால்பவுடர் கம்பெனி ஆரம்பித்து பெரிய கோடீஸ்வரர் ஆகும் சச்சின் கடேகர், தொழிலில் போட்டிகளை சமாளிக்க பல்வேறு தகிடு தத்தங்களை செய்வதுடன், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பல்வேறு கிரியா ஊக்கிகளையும் கலந்துகட்டி பால்பவுடர் பிஸினஸில் கொடிகட்டி நிற்கிறார். அவரது தொழில் ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முற்படும் வெளிநாட்டு பெண் பத்திரிகையாளரையும், சக தொழில் போட்டியாளரையும் தீர்த்து கட்டும் சச்சின், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ஒரு பென்டிரைவ் தன் இரட்டையர் மகன்களின் வசம் சிக்குவது அறிந்து, அதை பறித்துவர அடியாட்களை அனுப்புகிறார். அவர்களால் அகிலனின் உயிர் பறிபோக, அவர் உடம்பில் இருக்கும் இதயம் விமலனுக்கு பொருத்தப்பட்டு அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன., அகிலனின் சாவிற்கு காரணம் தேடும் விமலன், அப்பாவின் சகுனித்தனம் மொத்தத்தையும் தெரிந்து முன் நிறுத்த முற்படுகிறார். தந்தையார் சச்சினோ விமலனையும் தீர்த்து கட்ட முயல்கிறார்.... இறுதியில் வென்றது யார் என்பது க்ளைமாக்ஸ்!

அகிலன், விமலன் என்று இரட்டை குழந்தைகளும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கின்றனர். ஜாலி பேர்வழியான அகிலன் தொழிலாளித்துவம் பேசும் விமலனுக்கு காதல் பாடங்கள் எடுக்கும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. நான் ஒரிஜினல் இவன் டூப்ளிகேட். அவன்கிட்டே இதயம் இருக்கலாம்... என்கிட்டே ஈரம் இருக்கு... என்று அகிலன் பேசும் “பஞ்ச்’சுகள் விமலனைவிட அகிலனை வசீகரமாக காட்டுகின்றன. என்றாலும் அப்பாவின் அக்கிரமங்களை கண்டு பொங்கும் ஒழுக்கசீலரான விமலனும் காதலையும், காஜலையும் கூடவே ஹார்ட்டையும் அகிலனிடம் கொடுத்துவிட்டு ஸ்கிரீனை விட்டு பிரிவது உருக்கம்!

காஜல் அகர்வால் விமலனை காதலித்து அகிலனை அண்டர்டேக் செய்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாத படத்தின் பலவீனங்களில் ஒன்று! எனினும் கதாநாயகியாக காஜல் தன் பங்கை சரியாகவே செய்திருப்பது ஆறுதல்!

சூர்யாக்களின் அப்பா, வில்லன் விஞ்ஞானி என சச்சின் கடேகர் வெளுத்து வாங்கி இருக்கிறார். அன்பு நிறைந்த அம்மாவாக தாரா, பிரமாதம். தினேஷாக வரும் ரவிபிரகாஷ், வோல்காவாக வரும் லெரின் மாலிவா உள்ளிட்டவர்களும் “நச்’ சென்று நடித்திருக்கின்றனர்.

மனிதனின் கைவிரல்களில் ஆறாவதாக ஒருவிரல் ஒட்டி பிறந்திருந்தால் கூட அது செயல்படாத விரலாக அதிர்ஷ்ட விரலாக வெட்பிராபர்ட்டியாகத்தான் இருக்கும் எனும் நிஜம் தெரிந்தவர்களுக்கு இதயமே இல்லாமல் அதுவும் ஒட்டியும் ஒட்டாமல் ஓர் உடல் மற்றொரு உடலுடன் உயிர் வாழ முடியுமா? எனும் சந்தேகம் எழுவது போன்றே ஒரு தந்தையே தன் மகன்களில் ஒருத்தரை கொண்டு அடுத்தவரையும் கொல்ல முயல்வது சாத்தியமா எனும் சந்தேகத்தையும் கிளப்புகிறது! அதை அப்பாவிடம் கேட்கப்போகும் எஞ்சியுள்ள மகனிடம் அவர், நீ எனக்கு மட்டும் பிறக்கலை... பத்து பேருக்கு பிறந்தவன்... என கொச்சையாக பேசுவது என்னதான் ஜெனிட்டிக், மரபணு விஞ்ஞானம் என்றாலும் “உவ்வே’ என குமட்டலை ஏற்படுத்துகிறது!

மற்றபடி புதுப்புது லொகேஷன்கள், ரஷ்யா - உக்வேனியா என நம்மை குஷிபடுத்தி விடுகிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த்! அவருக்கு பக்கா பக்க பலமாக இருந்து உள்ளார்கள் மாற்றானின் முன் பாதியை புதுசாகவும், பின்பாதியை காமிக்ஸாகவும் கொடுத்திருக்கும் எழுத்தாளர்கள் சுபா, ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் உள்ளிட்டோர்!

ஆக மொத்தத்தில் “மாற்றான்’ சிறிதாக “தோற்றான்’ என்றும் சொல்ல முடியாது! பெரிதாக “வென்றான்’ என்றும் சொல்ல முடியாது! “மாற்றான்’ - “மாற்று ஆன் ஸ்கிரீன்!’



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மாற்றான் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in