தினமலர் விமர்சனம் » அன்னக்கொடி
தினமலர் விமர்சனம்
இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான இயக்குனர் அமீர் - இனியா விலகிய அல்லது விலக்கப்பட்ட கதை! அன்னக்கொடியும் கொடிவீரனும் என ஆரம்பத்தில் தலைப்பு வைக்கப்பட்டு அதன்பின் ஏதேதோ காரணங்களால் அது அன்னக்கொடியாக சுருங்கிய கதை., இப்பொழுது பட ரிலீஸ்க்கு பின் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் என்னதான் காதலி என்றாலும் அடுத்தவர் மனைவியை கூட்டி வருவது போன்ற காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற கதை... என "அன்னக்கொடி" திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் ஏகப்பட்ட பிரச்னைகள்... பஞ்சாயத்துக்களை இத்திரைப்படம் சந்தித்து வந்தாலும் கிராமத்து கதைகளின் ராஜா - பாரதிராஜாவை மீண்டும் அதே பழைய பொலிவோடு அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை ஆணித்தரமாக அடித்துக்கூறிட வந்திருக்கும் படம் தான் "அன்னக்கொடி" என்றால் மிகையல்ல!!
பாரதிராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்து காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல் தான் "அன்னக்கொடி" படம் மொத்தமும்! அன்று பல வருடங்களுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படக்கதையை புனைந்திருக்கும் பாரதிராஜா, ஆடுமேய்க்கும் இளைஞனுக்கும், அதே மாதிரியான ஒரு யுவதிக்கும் இடையே காதல் பிறக்கும் கதையை அழகாக சொல்லியிருப்பதோடு, அது கரிசல்காட்டில் பூத்து காய்த்து, கனியாகும் தருவாயில், வில்லன் விஸ்வரூபமெடுத்து நயவஞ்சகமாக நாயகியின் கணவராகி அந்த காதல் மரத்தை வேரோடு எப்படி சாய்க்கிறார் என்பதையும் தனக்கே உரிய கிராமத்து கிளுகிளுப்புகளுடன் காதல் கிளிகளும், குயில்களும் பறக்க மண்வாசனையுடன் படமாக்கி, கதையாக்கியிருக்கிறார்.
அதன் பின்னும் நாயகருக்கும் நாயகிக்குமான காதல் எப்படி மீண்டும் துளிர்கிறது என்பது தான் அன்னக்கொடியின் வித்தியாசமும் விறுவிறுப்புமான சர்ச்சைக்கும் சலசலப்புக்கும் காரணமான கிளைமாக்ஸ்! அதிலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் வீரத்தையும், ஈரத்தையும், தீரத்தையும் காட்டி காண்போர் கண்களையும் நெஞ்சங்களையும் கனக்க செய்வதுதான் "அன்னக்கொடி" படத்தின் பி மற்றும் சி. சென்டர்களுக்கான பலமும், ஏ சென்டருக்கான பலவீனமும் எனலாம்!
அறிமுகநாயகர் லஷ்மண், கொடிவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகி கார்த்திகாவை தன் கை விரல்களில் நனைந்திருக்கும் கம்பங்கூழை ஒவ்வொரு விரலில் ஒட்டியுள்ள கூழுக்கும் ஒரு சும்மானாச்சுக்கும் மருத்துவ குணமும் சொல்லி நக்கவிடும் காட்சி ஒன்று போதும் லஷ்மணின் நடிப்புக்கு கட்டியம் கூற...
நாயகி கார்த்திகாவும் அன்னக்கொடியாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார். அடுத்தடுத்து கோ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் இதில் தான் தன் அம்மா ராதாவுக்கு தானும் சற்றும் சளைத்தவரில்லை... என்பதை அம்மணி மெய்ப்பித்திருக்கிறார். பலே பலே!
லஷ்மண் - கார்த்திகா இருவருமே பிரமாதம் என்றாலும் இவர்கள் இருவரையும் தனது வில்லத்தனத்தால் விவரமாக ஓரங்கட்டியிருக்கிறார் மனோஜ் கே.பாரதி! வாவ்., மனிதர் மன்சூர் அலிகான் ஸ்டைலில் ரேக்ளா வண்டியும் அடிவாங்க மாடுகளும், மனிதர்களுமாக என்னமாய் மிரட்டியிருக்கிறார்! அதுவும் "வெடக்கோழி கொழம்புதான் வெளஞ்ச கம்மங்கூழு தான் சஞ்சனக்கா சனக்கு தான் - இது சடையன் போட்ட கணக்கு தான்..." எனப்பாடியபடியும், ஆடு மாதிரி கத்தி, மனைவியின் பழைய காதலை அவருக்கு ஞாபகப்படுத்தும் இடங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். பேஷ், பேஷ்! ஹீரோவாக தோற்றாலும் வில்லனாக ஜெயித்திருக்கிறார் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் என்றால் மிகையல்ல!!
மருமகளையே படுக்கைக்கு அழைக்கும் இயக்குனர் மனோஜ்குமார், வில்லன் மனோஜை வீழ்த்த போராடும் மீனாளும், கதாநாயகியின் அம்மா கள்ளச்சாராய பேர்வழி ரமாபிரபா, நாயகர் லஷ்மணின் மனைவியாக அறிமுகமாகும் சுபிக்ஷா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை அன்னக்கொடிக்கு உயிரோட்டம் தருகிறது என்றால், சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு உயிர் மூச்சாக திகழ்கிறது!
வழக்கம் போலவே பாரதிராஜா, படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் தோன்றி என் இனிய தமிழ் மக்களே... என ஆரம்பித்து இந்த கதை பிறந்த கதையையும் நடந்த சூழலையும் விளக்குவதில் இருக்கும் கிக், படம் முழுக்கவும் இருப்பது "அன்னக்கொடி"யின் பெரிய பலம்!
ஆகமொத்தத்தில், "அன்னக்கொடி" டாக்டர் ராமதாஸ்க்கு - "கறுப்புக்கொடி!" பாரதிராஜா ரசிகர்களுக்கு - "வண்ணக்கொடி!!" மற்றவர்களுக்கு...?!
------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
ஹீரோ ஆடு மேய்க்கிறவரு. அப்போ ஹீரோயின் மட்டும் ஐ.ஏ.எஸ் கலெக்டராவா இருக்கப்போகுது? அதுவும் சுள்ளி பொறுக்கும் கள்ளிதான். ஒரு டைம் ஹீரோ கால்ல முள் குத்தும்போது ஹீரோயின் தன் செருப்பைத்தர்றா. ஹீரோ அதுக்கு முன்னால லேடீசையோ, லேடீஸ் செப்பலையோ பார்த்ததில்லை போல. அந்த செருப்புக்கு முத்தம் கொடுக்கறார், மோந்து பாக்கறார். இன்னும் என்ன என்ன எல்லாமோ பண்றார்.
2 பேரும் லவ் பண்றாங்க. ஹீரோயின் அம்மாக்காரி ஒத்துக்கலை. பெண் கேட்க வந்த ஹீரோவையும், ஹீரோ அப்பாவையும் அவமானப்படுத்தி அனுப்பறா. ஹீரோ, ஹீரோயின் அம்மாவை ஓங்கி உதைச்சுடறாரு. போலீஸ் கேஸ் ஆகி 6 மாசம் உள்ளே போறாரு. அந்த சைக்கிள் கேப்ல வில்லன் கூட ஹீரோயினுக்கு மேரேஜ் ஆகிடுது. மேரேஜ் மட்டும் தான் ஆச்சு ஆனா வேற எதுவும் ஆகலை (ஏன்னா இது தமிழ்ப்படம்) வில்லன், ஏன்? ஹீரோயினை மேரேஜ் பண்ணியும் அவ கூட குடும்பம் நடத்தலை அப்டிங்கறதுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் மேட்டர் இருக்கு. என்ன பெரிய சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு இந்த படத்துக்கு? அதையும் சொல்லிடுறேன். சின்ன வயசுல வில்லனுக்கு படாத இடத்துல பட்டு மனைவியோட குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை.
வில்லனோட அப்பா, மருமக மேல அதாவது ஹீரோயின் மேல ஆசைப்படறாரு. அந்த மேட்டர் தெரிஞ்சு வில்லனே தன் அப்பாவை சதக். தான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு தெரிஞ்ச ஒரு லேடியை சதக். தனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர் இந்த உண்மையை ஊருக்கு சொல்லிடக்கூடாதுன்னு அவரையும் ஒரு சதக். மொத்தத்துல படமே சதக் சதக் தான் .
படத்தோட ஹீரோ லக்ஷ்மணாம், அய்யோ பாவம். ஓப்பனிங்கே சரி இல்லை. ஆள் நல்லா தான் இருக்கார். ஆனா அவருக்கு வாய்ப்பு குறைவு. தமிழ் இனத்தலைவருக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் ஒரு ஒத்துமை என்னான்னா 2 பேருமே தன் வாரிசை எப்படியாவது முன்னுக்கு கொண்டாந்துடனும்னு படாத பாடு படறாங்க. ஆனா அதுக்கு நம்மை ஏன் இப்படி பாடாப்படுத்தனும் ?
மனோஜ் தாஜ்மஹால்ல ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைச்சே அட்டர் ஃபிளாப் ஆன பட ஹீரோ. அவரை வில்லன் ஆக்கி படம் பூரா ஹீரோ மாதிரி அலைய விட்டா எவன் உக்காந்து பார்ப்பது ? இந்த லட்சணத்துல அவர் எந்திரன் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக் வேற, சகிக்கலை. (அவர் ம்மேமேமே என க்ளோசப்ல கத்தும்போது அப்பா சாமி முடியல)
ஹீரோயின் கார்த்திகா. அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு. அடேங்கப்பா. என்ன தான் கிராமியப்பெண்ணா மேக்கப் போட்டாலும் அதையும் மீறி அவர் முகத்துல ஒரு சிட்டி களை ஓடுது.
முதல் மரியாதை டைம்ல எல்லாம் பாரதிராஜா படத்தில் ஒரு கண்ணியம் இருக்கும். ஆனா இதுல காட்சிக்கு சம்பந்தமே இல்லாம கவர்ச்சிக்காட்சிகள் திணிக்கப்பட்டு ஒரு நல்ல கலைஞன் வியாபாரத்துக்காக விலை போனதை பறை சாற்றுது. யூ டூ பாரதிராஜா?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 1. இதுதான் என் லட்சியப்படம்னு பாரதிராஜா பிரஸ் மீட்ல அடிக்கடி உதார் விட்டு பில்டப் பண்ணினது
2. படத்துல தன் பையன் மனோஜ் தான் மெயின், அப்டிங்கற விஷயத்தை ரகசியமா வெச்சுகிட்டது (மேட்டர் லீக் ஆனா ஒரு பய படம் பார்க்க வர மாட்டானே?)
3. இது லைஃப் டைம் கேரக்டர்மா, உங்கம்மாவுக்கு எப்படி முதல் மரியாதையோ, அப்படி உனக்கு அன்னக்கொடி அப்டினு கார்த்திகா கிட்டே பீலா விட்டு முடிஞ்ச வரை கிளாமர் காட்ட வைத்தது
4. ஜீ.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி கூட (மேரேஜ் வேலைகள்) பிசியா இருந்ததால, இசையில பின்னணி இசைல கவனம் செலுத்தலை
5. ஆவாரங்காட்டுக்குள்ளே ஆடோட்டும் புள்ளே..., போறாளே போறாளே என்னை விட்டு..., காடை முட்டை கண் அழகி மாடு முட்டும் மார் அழகி... என 3 பாட்டு கேட்கும்படி இருக்கு. பாடல்கள் எடுத்த விதத்தில் மட்டும் பழைய பாரதிராஜா மனம் கவர்கிறார்
இயக்குநரிடம் சில கேள்விகள் 1. தன் கண் முன்னே தன் முன்னால் காதலி புருஷனுடன் சந்தோஷமா வாழ்ந்தாலே காதலன் இன்னொரு மேரேஜ் பண்ணிக்க 1000 தடவை யோசிப்பான். ஆனா தன் காதலி நல்லா வாழலை, மேட்டரே நடக்கலை என்ற விஷயம் தெரிஞ்சும் ஹீரோ எப்படி இன்னொரு மேரேஜும் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்கு அப்பாவும் ஆகறாரு?
2. தன் மனசில் காதலனை வெச்சுக்கிட்டு என்ன நிர்ப்பந்தத்துல ஹீரோயின், வில்லனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டா? என்பதற்கு சரியான விளக்கம் படத்துல இல்லை (ஹீரோயின் அம்மா வில்லன் கிட்டே கடன் வாங்கிக்கிட்டார் என்பதற்கான காட்சிகளே இல்லை )
3. கதை நடக்கும் கால கட்டம் 1960 மாதிரி தெரியுது. போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் தான் அப்டி காட்டுது
4. வில்லன் “நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” கேரக்டர். ஆனா அவர் எதுக்கு பலான லேடி வீட்டுக்குப்போறார். போய் அவமானப்படறார்?
5. வில்லன், தான் தாம்பத்யத்துக்கு லாயக்கில்லைனு தெரிஞ்சும், எதுக்கு ஒரு மேரேஜ் பண்ணிக்கறார்? மனைவியை கொல்றார்? மீண்டும் ஹீரோயினை எதுக்கு மேரேஜ் பண்றார்?
6. சப்பாத்திக்கள்ளி செடி இலைல முள்ளால் கீறி எழுதுனா பால் வடியும், ஆனா சுண்ணாம்புல எழுதுன மாதிரி நீட்டா எழுத்துக்கள் இருக்கே எப்படி? இதை ஒரு சிட்டி சப்ஜெக்ட் எடுக்கற டைரக்டர் எடுத்தா சரி தெரியலைன்னு விட்டுடலாம், யூ டூ பா ரா?
7 ஹீரோயின் தன் பேரை அன்னக்கொடின்னு சப்பாத்திக்கள்ளி இலைல எழுதறா. அப்போ அங்கே வரும் ஹீரோ (ஆடு மேய்ப்பவர்) என்ன எழுதனும்? அன்னக்கொடிப்ரியன், அன்னக்கொடி நேசன் இப்படித்தானே எழுதனும், எதுக்கு கொடி வீரன்? அப்டினு எழுதறார்? இவர் வீரரா? (டைட்டிலை நியாயப்படுத்த?)
8. ஒரு சீன்ல ஒரு பிச்சைக்காரி ஹீரோயின் அம்மா கிட்டே வர்றா. அவளுக்கு எதுக்கு அவ்ளவ் மேக்கப்? (டான்ஸ் மாஸ்டர் மாதிரி)
9 நட்ட நடு ராத்த்ரி 12.30 மணிக்கு வில்லன், ஹீரோயினை துரத்திட்டு ஓடறார். ஊரு சனமே தூங்கிட்டு இருக்கு. ஆனா ஒரு லேடி அப்போ தான் குப்பை கொட்ட வாசலுக்கு வருது. அந்த நேரத்துக்கு யாராவது குப்பை கொட்ட வருவாங்களா?
10. வில்லன், ஹீரோவோட சம்சாரத்தை கடத்திட்டுப்போறார். எதுக்கு ஹீரோ உட்பட எல்லாரும் பதை பதைக்கறாங்க? வில்லன் தான் அதுக்கு லாயக்கில்லாதவன் ஆச்சே?
11. வில்லன் தன் மனைவியை கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட் பண்ண தூக்குக்கயித்துல மாட்டி விடறாரு. தூக்கு போட்டுக்கிட்டு செத்தா நாக்கு வெளீல தள்ளி இருக்கனுமே? அப்படி இல்லாதப்ப ஊர் சனங்க ஏன் சந்தேகப்படலே? போலீஸ் விசாரணை பண்ணலை?
12. கார்த்திகா ஒரு டைம் ஆவேசம் ஆகி, வில்லன் கிட்டே “நீ என் புருஷன் தானே, பாயை போட்டாச்சு, வாடா பார்க்கலாம்“ என போரிங்க் பைப் லேடி ரேஞ்சுக்கு இறங்கி கூப்பிடுவது மகா மட்டமான இயக்கம். அந்த சீனில் காமிரா ஆங்கிள் ஆபாசம்
13. நான் ஆம்பளைடி 1000 வீட்டுக்குப்போவேன், நீ பொம்பளை போன்ற கேவலமான ஆணாதிக்க வசனங்கள் எதுக்கு?
14. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாட்டு ஹம்மிங்கை BGMஆக பல காட்சிகளில் ஜிவி பிரகாஷ் உல்டா பண்ணிட்டாரு
மனம் கவர்ந்த வசனங்கள் 1. கோழி திருடுனவன் கோளாறா தப்பிச்சுக்கிட்டானாம். கோழி இறகுல காது குடைஞ்சவன் மாட்டிக்கிட்டானாம் (கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம் நாவலில்)
2. என்னை பரிகாசம் பண்ண உனக்கு வயசு பத்தாதுடி. நான் வயசுக்கு வந்து பல வருசம் ஆகுதுடா. சீர் செலவுக்கு பயந்து வீட்ல சடங்கு வைக்கலை
3 ஆத்துத்தண்ணி ஒரு ருசி. ஊத்துதண்ணி ஒரு ருசி. சுனைத்தண்ணி மூலிகை ருசி (பாலகுமாரனின் தலையணைப்பூக்கள் நாவல் வசனம்)
4 செருப்புப்போடாம போனா கால்ல முள் தான் குத்தும், ஆனா இடைய சாதி நாம செருப்புப்போட்டுட்டுப்போனா ஆளையே குத்திடுவாங்க
5 . உங்களைப்பார்த்ததுல எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, கால்ல என்ன சக்கரமா கட்டி வெச்சிருக்கே? (ஒய்.ஜி.மகேந்திரனின் வசூல் சக்கரவர்த்தி நாடக வசன உல்டா)
6. போலீஸ் - நீ எந்த ஊரு? லேடி : எந்த ஊர்ல இருந்து பிடிச்சுட்டு வந்தீகளோ அதே ஊருதான்.
7. கடிச்சுக்க ஒண்ணும் இல்லை. பொய், உன் கிட்டே 20 இருக்கு. புரியல, உன் கை விரல்கள், கால் விரல்கள்.
கமெண்ட் : அன்னக்கொடி - தயாரிப்பாளர்க்கு அன்னக்காவடி - மணிவண்ணன் ஆத்மா சாந்தி அடையட்டும் - படம் அட்டர்பிளாப் - டி வில போட்டாக்கூட பார்க்க முடியாது.
----------------------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
‘அன்னக்கொடி’ எனது கனவுப்படம் என்று சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. ஆனால், அந்தக்கனவு இவ்வளவு தட்டையான ரசனைகளால் நிறைந்திருக்கும் என்று சராசரி தமிழ் சினிமா ரசிகன்கூட நினைத்திருக்க மாட்டான். ஆடு மேய்க்கப் போகும் இடத்தில் சாதி மீறி பூக்கும் காதலை அதன் பிரிவின் வலியைச் சொல்லவந்து அதில் துளிகூட யதார்த்தத்தைச் சொல்லாமல் நுனிப்புல் மேய்ந்த செயலாகி இருக்கிறது அன்னக்கொடி கதை. இந்தப் படத்துக்காக பார்த்திபனோடு ஊடல்: இயக்குனர் அமீரோடு உரசல்!
‘அன்னக்கொடி’யின் ஒவ்வொரு காட்சியும் பாரதிராஜாவின் பழைய படங்களில் ஏற்கனவே வந்திருக்கிறதே என்று சொல்லிவிட முடிவது அவரது கற்பனை வறட்சியைத்தானே காட்டுகிறது! புழுதிக்காடும், ஆவாரம்பூக்களும், கள்ளிச்செடியும், கரட்டு மேடும் பாரதிராஜா படத்துக்குப் புதிதா என்ன?
மனைவியோடு, கணவனாக இல்லறம் நடத்த உடல் தகுதியில்லாத சடையன் மனோஜ் அத்தனை பெண்களையும் காமப்பார்வை பார்ப்பதும், தாசி வீட்டுக்குப்போவதுமென காட்டுவது எதை பில்டப் செய்ய? மனோஜின் ஒட்டு மீசையைப் போல அவரது கீச்சுக்குரலும் பாத்திரத்தோடு பொருந்தவில்லையே!
ஆடு மேய்க்கும் இடத்தில் பாம்புக்கடி, பூரான் கடி போல முள் கடி அதாவது முள் குத்தியதற்காக பாரதிராஜா, ஹீரோ லக்ஷ்மணனுக்குச் சொல்லித் தந்திருக்கும் விரல் வழியாக சுனைத் தண்ணீரை வழியவிடும் வைத்தியமும் அதன் குளோஸ்-அப் காட்சிகளும் அடல்ஸ் ஒன்லி.
க்ளைமாக்ஸ் காட்சியில் மனோஜிடமிருந்து தப்பியோடும் கார்த்திகாவை ஏறக்குறைய முக்கால் நிர்வாணமாகக் காட்டியிருப்பதில் என்ன காட்சி நியாயம்?
மகன் மனோஜின் கையாலாகத்தனத்தைத் தெரிந்துகொண்டு மருமகள் கார்த்திகாவை மாமனார் மனோஜ்குமார் விரசப்பார்வை பார்ப்பதில் என்ன புதுமையைக் கண்டார் இயக்குனர்? அல்லது என்ன சொல்ல வருகிறார்?
எல்லா காட்சியிலும் நீக்கமற இருக்கும் மனோஜ் முகம் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்ட ஆரம்பிப்பது யார் (தோற்றப்)பிழை? அதுவும் ‘சஞ்சனக்கான் சனக்குத்தான் சடையன் போட்ட கணக்குத்தான்’ என்று அவர் தமது அக்மார்க் பாடலைப் பாடிக்கொண்டு சாகும்போது கூட ரசிக்க முடியவில்லையே!
புதுமுகத்துக்கு உரிய நிறைகுறைகளோடு, பாத்திரத்தோடு ஒன்ற முடியாமல் நொண்டுகிறார் லக்ஷ்மண்! மேக்-அப்போடு ஆடு மேய்க்க வரும் கார்த்திகாவின் தோற்றத்தில் கொஞ்சமாவது நேட்டிவிட்டி வேண்டாமா? அவருக்கு கேமரா பயமில்லை. அவ்வளவுதான்!
ஜி.வி.பிரகாஷ்குமார் கல்யாண அவசரத்தில் பின்னணி இசை கோத்திருப்பார் போல. சுரத்தே இல்லாமல் சும்மா அதன் போக்கில் போகிறது! பாடல்களும் அப்படியே!
‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் இறுதிக் காட்சியில் விஜயகுமாரை வெட்டுவதற்காக நெப்போலியன் அரிவாள் வீசுவார். விஜயகுமார் ஒதுங்கிக்கொள்ள அது பக்கத்தில் இருக்கும் ராதிகாவைப் பலிவாங்கிவிடும். அந்தக்காட்சியை ‘அன்னக்கொடி’யின் இறுதிக் காட்சி நினைவுறுத்தினாலும், மனோஜ் தன் கையிலிருக்கும் அரிவாளால் தன்னைத்தானே வெட்டிக்கொள்வது எவ்வளவு சொதப்பலான காட்சி என்பது, படம் எடுப்பதில் பழம் தின்று கொட்டை போட்ட பாரதிராஜாவுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை!
எவ்வளவு பெரிய கலைஞனுக்கும் சறுக்கல் என்பது சாதாரணம்தான். ஆனால், தமது அடுத்த அடுத்த படைப்புகளின் வெற்றி மூலம் தம்மை நிரூபித்து விடுவார்கள். பாரதிராஜா, அப்படி நிரூபிப்பார் என்று தமிழ் சினிமா ரசிகன் நம்புகிறான். நிரூபிப்பீங்களா?
----------------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
செருப்புத் தைப்பவரின் மகன் லக்ஷ்மணனுக்கும் சாராயம் காய்ச்சுபவரின் மகள் கார்த்திகாவுக்கும் ஆடு மேய்க்கும்போது காதல் ஏற்படுகிறது. ஆனால் வில்லன் மனோஜின் மனைவியாக கார்த்திகா ஆகிவிட, அப்புறம் அன்னக்கொடி எப்படிப் பறந்தாள்? என்பதுதான் படம்.
கிழிந்த சட்டை, கடித்த நகத்துண்டு, பழைய செருப்பு இதில் எல்லாம்கூட காதலை வழிய வைக்க பாரதிராஜாவால் மட்டும்தான் முடியும்.
ஆனால் மென்மையாகப் போய்க்கொண்டிருந்த காதல் கதை பின்னர் செமையாய் அடி வாங்குகிறது. வில்லன் ஆண்மையில்லாதவன் என்பதால் அவன் மனைவியை அவனது அப்பாவே அடைய முயல, அவரைக் கொலை செய்து, தன் ரகசியம் பற்றிய செய்தியைச் சொன்னவனையும் போட்டுத்தள்ளி, தட்டுத் தடுமாறுகிறாள் அ.கொடி. விரல் சூப்பும் காட்சிகளில் காதலா இருக்கிறது?! கடவுளே.
புதுமுகம் லக்ஷ்மண் ஓகே.
கார்த்திகா கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அம்மாவைப் போலவே நல்ல அகலமான வெற்று முதுகு!
முதல் முறையாக நடித்திருக்கிறார் மனோஜ். ஆனால் அந்த ‘பஞ்ச்’ பாட்டு எரிச்சலைத்தான் தருகிறது.
இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சுபிக்ஷா பளிச்.
மீனாளும் தன் வெற்று முதுகைத் தாராளமாகக் காட்டுகிறார்.
இசை ஜி.வி.பிரகாஷாம். அப்படியா?!
கள்ளிச்செடி, முள் மரம் முள் படாமல் அதில் உள்ள இலைகளைத் திண்ணும் ஆடு என்று ஒன்றுவிடாமல் மண்வாசனையைப் பதியவைக்கிறது சாலை சகாதேவனின் கேமரா.
பாரதிராஜா படத்தில் யார் நடித்தாலும் அது பாரதிராஜா நடிப்பதைப் போலவே இருக்கும். இதிலும் அது தொடர்கிறது.
தன்னுடைய லட்சியப்படம் அது, இது என்று பாரதிராஜா ஏகப்பட்ட பில்டப் செய்துவிட்டதை நம்பிப் போனால்..
அன்னக்கொடி - அரைக்கம்பத்தில் பறக்கிறது.
குமுதம் ரேட்டிங் - ஓகே.