தினமலர் விமர்சனம்
வேலைக்கு போகும் பெண்கள், பணியிடத்தில் பழகுபவர்களுடன் (குறிப்பாக ஆண்களுடன்) வீட்டிற்கு வந்த பின்பும் மணிக்கணக்கில் போனில் பேசுவதும், அலுவலக ஆண்களை வீட்டில் கணவனிடம் புகழ்வதும் வீணான சந்தேகங்களையும், விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்! என்பதை சொல்லி வந்திருக்கும் படம்தான் லத்திகா!
அழகான மனைவி, அன்பான குழந்தை என வசதியாக வாழும் பில்டிங் காண்ட்ராக்டர் ஈஸ்வர். அவரது குழந்தை லத்திகாவை திடீரென ஒருநாள் யாரோ கடத்தி வைத்துக் கொண்டு ஈஸ்வரை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கேட்ட பணத்தை கொடுத்த பின்பும் குழந்தையை தராமல் இழுத்தடிக்கும் அவர்கள், தனது தொழில்போட்டியாளர்கள்தான் என நம்பும் ஈஸ்வர், அதிரடியாக களத்தில் தானே இறங்குகிறார்! அவருக்கு மட்டுமல்ல... ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? குழந்தையை கடத்தியவர்கள் யார்? குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதா... இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்யாசமாகவும், விளையாட்டாகவும் பதில் சொல்லி இருக்கிறது லத்திகா படத்தின் மீதிக்கதை!
ஈஸ்வராக டாக்டர் சீனிவாசன் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருப்பதுடன், லத்திகா படத்தை இயக்கி, தயாரித்தும் இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், காமெடியாக திரியும் டாக்டர், ஆக்டிங்கில் ஜஸ்ட் பாஸ் என்றாலும், டைரக்ஷனிலும், புரடக்ஷனிலும் பர்ஸ்ட் க்ளாஸ் என்பது ஆறுதல்!
வில்லன் ஆண்டனியாக மாஜி ஹீரோ ரகுமான், மேஸ்திரி சண்முகசுந்தரம், ஈஸ்வரின் மனைவி மீனாட்சி கைலாஷ், உதவியாளர் அவந்தி இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சஹானா பாத்திமா, லத்திகா என எல்லாரும் இருந்தும் டாக்டர் சீனிவாசனை சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பது சற்றே போர்!
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என எண்ணற்ற பொறுப்புகளை ஏற்றிருக்கும் புதியவர் ரா.பரதன் பாத்திரத் தேர்விலும் இன்னும் சற்றே கவனம் செலுத்தியிருந்தால் லத்திகா, லாஜிக்கா இருந்திருக்கும்.