தினமலர் விமர்சனம்
நல் அரசியலை விரும்பும் ஒரு நடுநிலை பத்திரிகை புகைப்பட கலைஞனின் போராட்டமும், ஏமாற்றமும் அவனால் அரசியலிலும், சமூகத்திலும் ஏற்படும் மாற்றமும், ஏற்றமும்தான் "கோ" படத்தின் மொத்த கதையும்!
பிரபல வங்கியில் பெரும்பணத்தை துப்பாக்கி முணையில் கொள்ளையடித்து தப்பும் நக்சலைட் கும்பலை துரத்தி, துரத்தி படம்பிடித்து போலீஸில் சிக்க வைப்பதின் மூலம் ஒரேநாளில் பிரபலமாகிறார் தின அஞ்சல் பத்திரிகை புகைப்பட கலைஞர் அஸ்வின் எனும் ஜீவா! இந்த காட்சியில் சுறுசுறுப்பாக ஆரம்பமாகும் அவரது துப்பறியும் பத்திரிகையாளர் புத்தி எலக்ஷன் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாஸராவ் தன் பதவி ஆசைக்காக 13வயது சிறுமியை திருமணம் செய்யும் காட்சிகளை பதிவு செய்து பத்திரிகையில் பிரசுரித்து பரபரப்பு கிளப்புவது, "சி.எம்." பிரகாஷ்ராஜ் எக்குத் தப்பாய் கேள்வி் கேட்ட நிருபரை செருப்பால் அடிப்பதை படம் எடுத்து அதே எலக்ஷன் நேரத்தில் அவருக்கு ஆப்பு வைப்பது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி இந்த இரண்டுமே எலக்ஷனில் தோற்றுப்போக காரணமாக இருந்து படித்த இளைஞர்களால் புதிதாய் பிறந்த "சிறகு" கட்சி ஜெயிப்பதற்கு காரணமாவது... என படம் முழுக்க பத்திரிகை புகைப்பட கலைஞராக பட்டையை கிளப்பி இருக்கிறார் ஜீவா. அதிலும் ஆரம்பத்தில் வங்கி கொள்ளையர்கள் தப்பும் வேனை காமிராவும் கையுமாக ஜீவா ச்சேஸ் செய்யும் காட்சிகள் செம த்ரில்! அதே த்ரில் க்ளைமாக்ஸில் கண்ணி வெடியும் காலுமாக தனக்கும், சமுதாயத்திற்கும் நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பனை தீர்த்து கட்டிவிட்டு ஜீவா தப்புவது வரை விறுவிறுப்பாக படம் பிடிக்கப்பட்டிருப்பது தான் "கோ" படத்தின் பெரிய பலம்!
ஜீவாவிற்கு ஜோடியாக புரட்சிப் பெண் பத்திரிகையாளராக வலம் வரும் ரேணுகா நாராயணன் பாத்திரத்தில் வரும் கார்த்திகா, அவரது அம்மா மாஜி நாயகி ராதா மாதிரி 16 அடி பாய ரெடி என்றாலும், படத்தில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதால் பரபரப்பான சில காட்சிகளிலும், ஃபாரின் லொகேஷன் பாடல் காட்சிகளிலும் 8 அடி மட்டும் பாய்ந்து, கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் அம்மணி. அடுத்தடுத்த படங்களில் 32 அடி பாய்வதற்கு வாழ்த்துக்கள்!
முன் பாதியில் நல்லவன், பின்பாதியில் வில்லனாக வரும் அஜ்மல், இன்று அரசியலில் குதிக்கத் துடிக்கும் நடிகர்களையும், அவர்களுக்கு ஓட்டு போடாதீங்க... இவங்களுக்கு போடுங்க... என கை காட்டும் சினிமா இயக்குநர்களின் ஒரிஜினல் முகங்களையும் தோலுரித்து காட்டியிருப்பது போலவே தெரிகிறது. பேஷ் பேஷ்!. அஜ்மலும், அவரது பாத்திரமும் ஹீரோ ஜீவாவை போலவே "கோ" படத்தின் பெரும் பலம்! பியா, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாஸராவ், போஸ் வெங்கட், ஜெகன், ராஜா, வனிதா என எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு!
சமூகத்திலும், அரசியலிலும் மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை முதன்முதலாக அடிமட்ட தொண்டன் முதல் அரசியல்வாதிகள் வரை உணர்த்தியிருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ரொம்பவே துணிச்சல்காரர். அவரது துணிச்சலுக்கு பக்கபலமாக இருந்திருக்கும் எழுத்தாளர்கள் சுபா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ரிச்சர் எம்.நாதன், படத்தொகுப்பாளர் ஆண்டனி, வெளியிட்டாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்!
மொத்தத்தில் பத்திரிகையாளர்கள் படும் பாட்டையும், அவர்களது புகழையும் பாடும் "கோ" - "ஆஹா-ஓஹோ!"
-------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
கோ என்றால் தலைவன். ஒரு அரசியல் தலைவன் உருவாவதற்குப் பின்னால் உள்ள குட்டிக்கரணங்களும் குரூரங்களுமே "கோ.
பழம் தின்று கொட்டையைக் கூட துப்பாத இரு மூத்த தலைவர்கள். நேர்மை, நியாயம், தூய்மை என நிறைய பேசுகிற ஒரு இளைஞர் கூட்டம். இரு தரப்பையும் மோத வைக்கிற தேர்தல் ரேஸ் பத்திரிகையாளர்களின் உறுதுணையுடன் அதிகாரம் இளைய தலைமுறைக்குக் கை மாறுவதுதான் கதை.
கையில் கேமராவும் கண்களில் தேடலுமாக ஒரு பத்திரிகை போட்டோகிராபர் கேரக்டருக்கு ஜீவா நன்றாகவே ஜீவன் கொடுத்திருக்கிறார். பிரஸ் மீட் சச்சரவுகளின் போது ஜீவா பேச்சில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தே கூல் பண்ணும் காட்சி இயல்பான ஹீரோயிசம்.
புது வரவான கார்த்திகாவுக்கு பரபர செய்தி நிருபர் கேரக்டர். தூண்டில் போடும் கண்கள். தூங்கி வழியும் எக்ஸ்பிரஷன்கள். பாவம், நிருபர் வேலையையும் சேர்த்து ஜீவா செய்துவிட்டால், பொண்ணு என்னதான் பண்ணும்? இன்னொரு பெண் நிருபராக வரும் பியா அரை ட்ரவுசர் டான்ஸ், வரம்பு மீறும் பேச்சு என கவர்ச்சி டிபார்ட்மெண்ட்டைக் கவனித்துக்கொள்கிறார். பிஞ்சில் பழுத்த பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கு பியா அவிழ்த்துக் காட்டுவது காமெடியாம்.
"நான் எளிமையா வந்து போகணும், அவ்வளவுதானே? என்ற நிருபரிடம் பிரகாஷ்ராஜ் சீறிவிட்டு, திடீரென காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் நடப்பது ரசிக்க வைக்கிற கலாட்டா.
தன்னைப் பற்றிய பகீர் செய்திக்காக எதிர்கட்சித் தலைவர் பத்திரிகை அலுவலகத்துக்கே வந்து பச்சையாகப் பேசி மிரட்டுவாராம். பிட் அடித்து, பறக்கும் படையிடம் மாட்டிக்கொண்ட ஸ்டூடண்ட்ஸ் மாதிரி மொத்த அலுவலகமே தலையைச் சொறியுமாம். கோ டீமுக்கும் நாட்டு நடப்புக்கும் இவ்வளவு தூரமா?
"என்னமோ ஏதோ பாடல் அக்மார்க் ஹாரீஸ் டச். சமூக விரோதச் செயல்களும் அரசியல் வாழ்க்கையும் பிரிக்க முடியாததாகி விட்ட காலகட்டத்தில், புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆசைப்பட்டிருப்பது சரி. ஆனால் அவர்களில் ஒருவரையே மெகா வில்லனாக காட்டியிருப்பது மொட்டிலேயே ஆசிட் ஊற்றுகிற வேலை. நக்ஸல்களுக்கும் மாபியாக்களுக்கும் வித்தியாசம் தெரியாத குழப்பம் வேறு.
கோ - பாக்கெட் நாவல்.
குமுதம் ரேட்டிங் - ஓகே