தினமலர் விமர்சனம்
சிங்கப்பூர் வாழ் தமிழர்களால் முழுக்க முழுக்க சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் உருவாகி வெளிவந்திருக்கும் வித்தியாசமான படம்தான் "சிங்கையில் குருஷேத்திரம்".
சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் தமிழர்களை பற்றிய கதைதான் "சிங்கையில் குருஷேத்திரம்" மொத்தபடமும்! அந்த கடத்தல் கதைக்குள், ஒரு அண்ணன்-தம்பி பாசம், அக்காள்-தம்பி நம்பிக்கை துரோகம், மாமன்-மாப்பிள்ளை பழிக்குபழி... உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை கலந்து கட்டி வித்தியாசமான கோணத்தில் விறுவிறுப்பாக கதை சொல்லி சிங்கையில் குருஷேத்திரம் படத்தை தமிழகத்திலும் நம்பிக்கையுடன் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்!
கதைப்படி தன் தாயை போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தி தன் குடும்பத்தை குலைத்த தாய்மாமனை பழிவாங்க அவர்கூடவே போதை பொருள் கடத்தலில், உடம்பும் மனதும் முடியாத தன் தம்பியுடன் இணைந்து ஈடுபடும் ஹீரோ என்ன செய்கிறான்? எப்படி பழி வாங்குகிறான்! அதனால் எப்படி எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாகிறான்? என்பது தான் க்ளைமாக்ஸ்!
ஹீரோ பிரகாஷாக பாத்திரம் ஏற்றிருக்கும் விஷ்ணுவில் தொடங்கி வில்லன் வினோத்தாக வரும் சிவக்குமார், உடம்பு முடியாத தம்பி சுப்ராவாக வரும் பிரகாஷ் அரசு, மதியழகன், விக்னேஷ்வரி, ராஜேஷ் கண்ணன், குணாளன் மார்கன், கார்த்திக் மூர்த்தி, மாஸ்டர் நடிகர்கள் கிஷன்மூர்த்தி துரைராஜ், திவேஷன் துரைராஜூ உள்ளிட்ட ஒவ்வொருவரும் நம்மூர் நட்சத்திரங்களையே மிஞ்சும் வகையில் பாத்திரம் அறிந்து பளிச் என்று நடித்திருக்கின்றனர். ரஃபியின் இசை, லூகாஸ் ஜோடோனின் ஒளிப்பதிவு, பிரவீனின் படத்தொகுப்பு என 3-ம் படத்திற்கு பலம்!
காலங்காலமாக கண்டு வந்த திருடன்-போலீஸ் கதை தான் என்றாலும் அதை வித்யாசமாக சொல்லி இருக்கும் இயக்குநர் டி.டி.தவமணி, அதை மேலும் விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் "சிங்கையில் குருஷேத்திரம்" இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! ஒருவகையில் நம்மூர் சினிமாக்காரர்களும் பார்க்க வேண்டிய ப(பா)டம் தான் சிங்கையில் என்றால் மிகையல்ல! காரணம் ஆக்ஷன் படத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் பிடித்திருக்கும் அழகே அழகு!
மொத்தத்தில் "சிங்கையில் குருஷேத்திரம்" சில வகையில் "சிறப்பான சித்திரமே!"