கஜானா
விமர்சனம்
தயாரிப்பு : போர் ஸ்கொயர் ஸ்டுடியோ
இயக்கம் : பிரபதீஸ் சாம்ஸ்
நடிகர்கள் : யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர், மொட்ட ராஜேந்திரன், பிரதாப் போத்தன், ஹரிஷ் பேராடி, சென்ராயன், வேலு பிரபாகரன்,
வெளியான தேதி : 09.05.02025
நேரம் : 1 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
நாகமலை என்ற இடத்தில் நாகங்களின் பாதுகாப்பில் உள்ள நாக கற்கள் மற்றும் ஒரு புதையலை பற்றி பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து வைத்துள்ளார். அந்த புதையலை எடுக்க செல்பவர்கள் உயிரோடு திரும்ப மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது, அதோடு அங்கு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக நம்பப்படும் சூழ்நிலையில் அந்த புதையலை எடுப்பதற்காக இனிகோ பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் முயற்சி செய்கின்றனர். அந்த புதையல் குறித்த தகவல்களை ஹரிஷ் பெராடியிடம் உள்ள தகவல்களை பெறுவதற்காக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான வேதிகா முயற்சி செய்கிறார். இவர்களில் யாருக்கு அந்த புதையல் கிடைத்தது? எப்படி அந்த நாகமலை காட்டுக்குள் சென்றனர்? அங்கு நடந்த அமானுஷ்ய விஷயம் என்ன? புதையல் எடுக்கப் போனவர்கள் திரும்பினார்களா என்பதே படத்தின் மீதி கதை.
ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடும் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்ட இந்த கஜானா படத்தை பார்த்த பிறகு அவை அத்தனையும் கேள்விக்குறியாக நமக்கு தெரிகிறது. 'இண்டியானா ஜோன்ஸ்', 'நேஷ்னல் டிரஷர்' போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான படம் என்று சொல்லிவிட்டு ஏதோ குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படம் போல் கஜானாவை உருவாக்கி ஏமாற்றத்தை தந்துள்ளார் இயக்குனர் பிரபதீஸ் சாம்ஸ். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரிய விளங்கான யாழி குறித்து இதில் முதல் முறையாக கிராபிக்ஸ் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் அதையும் அரைகுறையாக காட்டியிருப்பது அடுத்த ஏமாற்றம்.
கதையின் நாயகனாக நடித்துள்ள இனிகோ பிரபாகர் தனது முழுமையான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்தை தாங்கி பிடிக்கிறார். கதாநாயகியாக நடித்துள்ள வேதிகா கடைசி வரை ஒரு அறையில் அமர்ந்து ஹரீஷ் பெராடியிடமிருந்து கதையை மட்டும் கேட்கிறார். இவருக்கும் இனிகோ பிரபாகருக்கும் ஒரு சீன் கூட காம்பினேஷன் இல்லை.
ஆராய்ச்சியாளராக வரும் பிரதாப் போத்தன், எழுத்தாளரான ஹரீஷ் பெராடி, காட்டை பாதுகாக்கும் பணியில் இருக்கும் வேலு பிரபாகரன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அழுத்தம் இல்லாமல் இருக்கின்றன. நாக தேவதையாக நடித்துள்ள சாந்தினி ஒரு சில காட்சிகள் வந்து செல்கிறார். யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் காட்சிகள் காமெடிக்காக தனி டிராக் ஆக எடுத்து சேர்த்துள்ளது துண்டாக தெரிகிறது.
மொத்தத்தில் கதாபாத்திரங்களை நம்பாமல் கிராபிக்ஸை நம்பி களமிறங்கி இருப்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் ஒளிப்பதிவாளருக்கு பெரிய வேலை இல்லை, இசை அமைப்பாளர் அச்சு ராஜாமணி முடிந்த அளவு தனது இசையின் மூலம் படத்திற்கு தோள் கொடுத்துள்ளார்.
பிளஸ் & மைனஸ்
சமீபகாலமாக பேண்டஸி மற்றும் ஹாரர் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் சிலர் கதையை நம்பாமல் கிராபிக்ஸ் காட்சிகளை நம்பி பேண்டஸி படத்தை எடுக்க விரும்புகின்றனர். கன்டென்ட் நன்றாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். இயக்குனர் எடுத்துக் கொண்ட நாட் சூப்பராக இருந்தாலும் அதை சொன்ன விதம் சுவாரஸ்யமாக இல்லை. இவர்கள் நினைத்தபடி கிராபிக்ஸ் காட்சிகள் நேர்த்தியாக அமையவில்லை. இயற்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் விலங்குகளின் உருவங்கள் திரையில் தெரிகிறது. இரண்டாம் பாதி எப்போது முடியும் என சொல்லும் அளவிற்கு படம் ஆமை வேகத்தில் நகர்கிறது.
கஜானா - காலி
கஜானா தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கஜானா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்