சாமானியன்,Saamaniyan

சாமானியன் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ராகேஷ்
இசை - இளையராஜா
நடிப்பு - ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர்
வெளியான தேதி - 23 மே 2024
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினிகாந்த் படங்களை விடவும் அதிக வசூலைக் கொடுத்த நாயகர்களில் ஒருவர் ராமராஜன். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அவரது வெற்றிப் பயணம் இருந்தது. பின் திடீரென நின்று போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்துள்ள படம் இது.

ஒரு கிராமத்துக் கதையில்தான் ராமராஜன் மீண்டும் நடிப்பார் என்று பார்த்தால் ஒரு ஆக்ஷன் கதையை அவருக்காக எழுதியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். இருந்தாலும் சென்டிமென்ட் ஆக அமைக்கப்பட்டுள்ள கதையும், எடுத்துக் கொண்ட பிரச்சனை சாமானியர்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை என்பதாலும் 'கனெக்ட்' செய்து கொள்ள முடிகிறது.

மதுரை அருகே ஒரு கிராமத்திலிருந்து, நண்பர் எம்எஸ் பாஸ்கருடன் சென்னைக்கு வருகிறார் ராமராஜன். அவர்களை சென்னையில் உள்ள முஸ்லிம் நண்பர் ராதாரவி தனது வீட்டில் தங்க வைக்கிறார். மறுநாள் ராமராஜன் சூட்கேஸில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுடன் ஒரு தனியார் வங்கிக்குள் நுழைந்து அதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். அந்த வங்கியின் மேனேஜர் வீட்டில் துப்பாக்கியுடன் எம்எஸ் பாஸ்கரும், உதவி மேனேஜர் வீட்டில் துப்பாக்கியுடன் ராதாரவியும் சென்று அந்த குடும்பத்தினரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். மூவரும் ஏன் இப்படி செய்கிறார்கள். வங்கியில் சிக்கிய மக்களையும், வங்கி ஊழியர்களையும், வீடுகளில் சிக்கியவர்களையும் போலீஸ் மீட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை வங்கியை தனது கட்டுப்பாட்டில் 'துணிவு'டன் வைத்திருக்கும் ராமராஜன் பற்றிய கதையும், இடைவேளைக்குப் பின் அவர் யார் என்பதைப் பற்றிய கதையும்தான் இந்த 'சாமானியன்'. மக்களுக்குக் கடன் கொடுக்கும் வங்கிகள் அவர்களை மிரட்டக் கூடாது என்றும், வீடு வாங்க ஆசைப்படும் நடுத்தர மக்களின் கனவுகளை பில்டர்கள் நசுக்கக் கூடாது என்றும் சொல்லும் கதை.

ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்துள்ளார். அவருடைய உடல்நலக் குறைபாடு படத்தில் தெரிகிறது. அவரால் நிற்கக் கூட முடியவில்லை. உட்கார வைத்தே காட்சிகளை எடுத்து சமாளித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவ்வளவு பிரச்சனையிலும் தன்னால் நடிக்க முடியும் என முடிந்தவரையில் முயற்சித்திருக்கிறார் ராமராஜன். மகள் மீது அதீத பாசம் வைத்துள்ள பாசக்கார அப்பாவாக கண் கலங்க வைக்கிறார். கிளைமாக்சில் அவர் பேசும் வசனங்கள் கடன் கொடுப்பவர்களுக்கும், கடன் வாங்குபவர்களுக்குமான எச்சரிக்கை மணி.

ராமராஜனின் நண்பர்களாக ராதாரவி, எம்எஸ் பாஸ்கர். நண்பனின் செயலுக்கு துணை போகும் உற்ற நட்பாக இருக்கிறார்கள். வங்கி மேனேஜராக போஸ் வெங்கட். போலீஸ் அதிகாரியாக கேஎஸ் ரவிக்குமார், ராமராஜன் மகளாக நக்ஷா சரண், எம்எஸ் பாஸ்கர் மகனாக லியோ சிவக்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜா இசையில் இப்படத்திற்காக போடப்பட்ட பாடல்களை விட அவருடைய பழைய பாடல்கள் படத்தில் ஆங்காங்கே ஒலிப்பது இனிமையாக உள்ளது.

ராமராஜனின் வெற்றிப் பயணம் பற்றி இன்றைய இளம் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கிராமப்புறங்களில் இருக்கம் ராமராஜன் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வந்தால் அதுவே அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. உடல்நலன் பற்றி கவலைப்படாமல் நடிப்பின் மீதுள்ள தீரா ஆர்வத்தில் நடிக்க வந்துள்ள ராமராஜனுக்கு வாழ்த்துகள்.

சாமானியன் - மக்களின் குரல்

 

சாமானியன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சாமானியன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓