தினமலர் விமர்சனம்
நடிகர் விஜயகாந்த்துக்கு அரசியலில் அடியெடுத்து வைத்த பின்பு அதிரடியான ஒரு திரைப்படம் தேவைப்பட்டிருக்கிறது! அதற்காக இயக்குனர் அவதாரமும் எடுத்து, லாஜிக் பற்றியும் கவலைப்படாமல், மேஜிக் என்றும் கூறாமல் இந்த விருதகிரி திரைப்படத்தை தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக்கி இருக்கிறார் கேப்டன்!
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு அயல்நாட்டில் ஆரம்பமாகிறது கதை! சர்வதேச அளவில் நடைபெறும் போலீஸ் துறையின் மீட்டிங் ஒன்றிற்காக அங்கு வந்திருக்கும் தமிழக போலீஸ் அதிகாரி விருதகிரி விஜயகாந்த், இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் தீவிரவாதிகள் சிலரை ஒற்றை ஆளாக (கூட வரும் அந்த ஊர் போலீஸ்காரர்களை தூர நிறுத்தி விட்டு) துரத்திச் சென்று துவம்சம் செய்து, உலகின் நம்பர் ஒன் போலீஸான ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு பாடம் நடத்தி விட்டு, மாலை மரியாதையுடன் ஊர் திரும்புகிறார். அதன் பின்னர் உட்காரக் கூட நேரமில்லாமல் அரவாணிகள் பலரும் காணாமல் போவது குறித்த புகார் அவர் வசம் வருகிறது. உடனடியாக களத்தில் இறங்கும் கேப்டன், உப்பு வியாபாரி சண்முகராஜனின் மீது சந்தேகம் கொண்டு தன் உதவியாளரான கொமெடி சாம்ஸை திருநங்கை வேடத்தில் சண்முகராஜனின் ஏரியாவுக்கு அனுப்பி பாலோ பண்ணுகிறார். அதில் போலீஸ் மன்சூர் அலிகான் உதவியுடன், விருமாண்டி ஜெயிலர் சண்முகநாதன்தான் அரவாணிகளை கடத்தி, கொன்று அவர்களது உடல் உறுப்புகளை அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார் என்பதை கண்டுபிடித்து, அவரையும் அவரது கூட்டாளிகளையும் கூண்டோடு தீர்த்துக்கட்டி திருநங்கைகளின் தியாகராஜர் ஆகிறார் கேப்டன். அதுவரை தடம் மாறாமல் சரியான ரூட்டில் போய்க் கொண்டிருந்த விருதகிரியும், அவர் கிரிவலம் வந்த பாதையும் கதையும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை கடத்துவது, அல்பேனிய சமூக விரோதிகள் என்றும், அந்த கும்பலின் தலைவனுக்கு சென்னையில் இருந்தபடியே விஜயகாந்த் எச்சரிக்கை விடுப்பதுடன், அந்த கூட்டத்தை பிடிக்க ஆஸ்திரேலியா கிளம்பியதும் கரடு முரடாகி விடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு படிக்க போகும் தன் வளர்ப்பு மகள் ப்ரியாவை சமூக விரோதிகள் கடத்தியதும், 48 மணி நேரத்தில் அவரை மீட்க இந்திய வெளியுறவுத்துறை ஆஸ்திரேலிய காவல்துறை என எதன் உதவியும் இல்லாமல் ஆஸ்திரேலியா போகும் கேப்டன், அங்கு சமூக விரோதிகளுக்கும், அவர்களுக்கு உதவும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராக விடும் சவால்களும், பஞ்ச் டயலாக்களும் தமிழக ஆளும் கட்சியினரையும், அரசியல்வாதிகளையும் தாக்குவது காமெடி! படத்திற்கு சென்சார் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் விஜயகாந்த் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளை எல்லாம் பிடித்து முடித்து விட்ட கேப்டன், இதற்காகதான் ஐரோப்பிய தீவிரவாதிகளையும், ஆஸ்திரேலிய சமூக விரோதிகளையும் குறி வைத்து, சர்வதேச போலீசாக பதவு உயர்வு பெற்றிருக்கிறார் என்பது புரியாமல் இல்லை! அதேநேரம் உப்பு வியாபாரி சண்முகராஜனை எதிர்க்கும் போதும், பிடிக்கும் போதும் உள்ளூர் அரசியல்வாதிகளை நேரடியாகவே தன் வாயில் போட்டு மெல்லும் கேப்டன், மன்சூர் அலிகான், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மூலம் அதிகாரியாக இருக்கும்போதே இத்தனை செய்கிறீர்களே? அந்த அதிகாரத்தையே வழங்கும் அரசாங்கம் உங்கள் வசம் வந்தால் நாடே மாறிப் போகும் என அடிக்கடி பேச விடுவதும் ஓவர்.
பொட்டு வைத்து வாழ்பவர்களையும் தெரியும், பொட்டுகட்டி வாழ்ந்தவர்களையும் தெரியும் என விஜயகாந்தே பேசி நடித்திருப்பதும் ரொம்பவே ஓவர்! சமீபமாக டாக்டர் விஜயகாந்த் ஆகிவிட்டதாலோ என்னவோ, பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி மருந்து எல்லாம் கொடுக்கும் கேப்டன், முதல் சீனிலேயே தீவிரவாதியை பிடித்தது எப்படி? என மருத்துவ ரீதியாக ஒரு காரணம் கூறுகிறார். இப்படி தான் சந்தேகப் பட்டதற்கெலலாம் விளக்கம் கூறும் கேப்டன், கதாநாயகி தன்னை அங்கிள் என கூப்பிடவும் இசைந்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரம் அவர்களுக்கு இடையேயான உறவை விளக்காதது குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
வெளிநாடுகளில் தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரத்தும் போது வறுத்தகறியாகும் விருதகிரியில், மாதுரி இடாகி, அருண்பாண்டியன், மன்சூர் அலிகான், சண்முக ராஜன், சாம்ஸ், பி.வி.சிவம், கலைராணி, உமா பத்மநாபன், சந்தான பாரதி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் பங்கு பெற்றிருந்தும், சுந்தர்.சி பாபுவின் இசை, கே.பூபதியின் ஒளிப்பதிவு, ஆர்.வேலு மணியின் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இருந்தும் விருதகிரியில் விஜயகாந்த்தே பெரிதாக தெரிகிறார். இதுதான் படத்தின் ப்ளஸ்! மைனசும் கூட!!
விஜயகாந்தின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் விருதகிரி... கேப்டன் கட்சிக்காரர்களுக்கு விருந்து சரி... மற்ற ரசிகர்களுக்கு?!
-----------------------------------
குமுதம் விமர்சனம்
விஜயகாந்த்தை முதன்முதலாக டைரக்டர் சேரில் உட்கார வைத்துள்ள படம்.
தடுக்கி விழுந்தால் அரசியல் சாட்டையடி வசனங்கள். ஆரம்பம் உதறலை ஏற்படுத்தினாலும், போகப்போக கதையிலிருந்து கவனத்தைச் சிதறவிடாமல் "விருதகிரி அசத்திவிடுவது ஆச்சரியம்தான்.
விருதகிரியின் களம் ஆஸ்திரேலியா. அங்கே கடத்தப்பட்ட நண்பரின் மகளை மீட்பதுதான் நோக்கம். அப்படியே, ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை தாக்குபவர்களுக்கு சிங்க முகம் காட்டிவிட்டும் வருகிறார்.
அடடா... டிபார்ட்மெண்ட் வணக்கங்களை செம லோக்கலான சல்யூட்டுடன் ஏற்றுக் கொள்கிற விஜயகாந்த்தை பார்த்து எத்தனை நாளாயிடுச்சு? வயசானா என்ன? ஓவர் வெயிட் போட்டா என்ன? போலீஸ் கேரக்டர் கேப்டனுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்தான்.
நண்பரின் மகள் கடத்தல்காரர்களால் சுற்றி வளைக்கப் படுகிறபோது, அவருக்கு விஜயகாந்த் பதற்றமும் பாசமுமாக செல்போனில் சொல்கிற அலர்ட் அட்வைஸில் ஆங்கிலப்படங்களின் சாயல் பளீரென்று தெரிந்தாலும், ரசிக்க முடிகிறது.
"அரசாங்க அதிகாரியா இருக்கறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே, அரசாங்கமே உங்க அதிகாரத்துக்கு வந்துட்டா? என ஆரத்தி எடுக்குற அம்மா முதல் ஆஸ்திரேலியா வில்லன் வரை சைக்கிள் கேப்பில்கூட பாலிடிக்ஸ் பஜ்ஜி சுடுகிறார்கள்.
ஆர்.வேலுமணியின் வசனங்களில் புத்திக்கூர்மை. ஒளிப்பதிவாளர் பூபதியும் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவும், இயக்குனர் விஜயகாந்திற்கு தோள் கொடுத்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவதன் சமூகக் காரணத்தை புரிந்து கொள்ளாமல், அதை ஒரு சர்வதேச கூலிப்படையின் சதியாக பார்த்திருப்பதுதான் சறுக்கல்.
தனக்கென ஹீரோயின், டூயட், உருக்கமான ஃப்ளாஷ்பேக் எதுவும் வைக்காமல் தவிர்ப்பதிலேயே இயக்குனர் விஜயகாந்த் பாஸ் ஆகி விட்டார்.
விருதகிரி - வெள்ளிப்பதக்கம் ; குமுதம் ரேட்டிங் - ஓ.கே.