நூடுல்ஸ்
விமர்சனம்
தயாரிப்பு - ரோலிங் சவுன்ட் பிக்சர்ஸ்
இயக்கம் - மதன் தட்சிணாமூர்த்தி
இசை - ராபர்ட் சற்குணம்
நடிப்பு - ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன்
வெளியான தேதி - 8 செப்டம்பர் 2023
நேரம் - 1 மணி நேரம் 46 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ஒரு எளிமையான கதையை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்து ரசிக்க வைப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. 'அருவி' படத்தில் அறிமுகமாகி சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 'அயலி' வெப் தொடரிலும் பெயர் வாங்கிய மதன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
ஹரிஷ் உத்தமன், ஷீலா இருவரும் காதல் தம்பதியினர், ஒரே மகள் ஆழியாவுடன் சக குடித்தன ஆட்களுடன் நட்பாக இருப்பவர்கள். ஒரு நாள் அந்த வீட்டில் குடியிருக்கும் அனைவரும் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் இன்ஸ்பெக்டர் மதனுடன் ஹரிஷ் உத்தமன் சண்டைக்குப் போகிறார். இந்நிலையில் காலையில் ஹரிஷ் வீட்டிற்குள் யாரோ ஒருவர் வந்து விழுந்து இறந்து போகிறார். தங்கள் மீது கொலைப் பழி விழாமல் இருக்க வக்கீல் ஒருவர் உதவியுடன் பிணத்தை மறைத்து வைக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து மதன், ஹரிஷ் உத்தமனை முன்னிரவில் நடந்த சண்டைக்காக விசாரணைக்கு அழைத்துப் போக வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
ஒரே ஒரு சிறிய வீட்டிற்குள் நகரும் கதை. இடைவேளைக்குப் பின்பும், கிளைமாக்ஸ் முன்பாக ஒரு அரை மணி நேரமும் பரபரப்பாக அமைந்திருப்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். நான்கு சுவற்றுக்குள் இப்படி கூட விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைக்கலாம் என காட்டியிருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி.
முன்னணி ஹீரோக்கள் அல்லது தெரிந்த ஹீரோக்கள் என யாரும் இல்லாமல் கதைக்குத் தேவையானவர்களை நடிக்க வைத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார். சில படங்களில் வில்லனாக நடித்த ஹரிஷ் உத்தமன் இந்தப் படத்தில் கதாநாயகனாக புரமோஷன் வாங்கியிருக்கிறார். மிரட்டலான வில்லனாக நடித்தவரா இவர் என தனது நடிப்பில் ஆச்சரியப்பட வைக்கிறார். ஒரு பக்கம் இன்ஸ்பெக்டரான மதனுடன் மோதல், மற்றொரு பக்கம் வீட்டில் ஒரு பிணம், இன்னொரு பக்கம் பத்து வருடங்களுக்குப் பிறகு மாமானார், மாமியார் வருகை என இத்தனை சிக்கல்களுக்கு இடையில் அவர் தவிக்கும் தவிப்பில் அப்படி ஒரு யதார்த்தம்.
ஹரிஷ் உத்தமன் மனைவியாக ஷீலா ராஜ்குமார். பெற்றோர் எதிர்ப்பை மீறி ஹரிஷைக் காதலித்து மணந்து கொண்டவர். வீட்டு வாசலில் தனது மகளிடம் செல்போனைப் பறிக்க முயற்சித்த இளைஞரை தள்ளி விடப் போய் அவர் கீழே விழுந்து இறந்துவிடுகிறார். அந்த இளைஞரை தான்தான் கொலை செய்தேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறார். மனைவி மாட்டிக் கொள்ளக் கூடாது என அந்தப் பழியை தானே செய்ததாக ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார் கணவர் ஹரிஷ். அந்தப் போட்டியிலும் இருவரின் காதலும் தான் வெளிப்படுகிறது.
இன்ஸ்பெக்டராக படத்தின் இயக்குனர் மதன். போலீஸ் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்பதை இந்தப் படத்திலும் இயல்பாக நடித்து வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேர சுவாரசியத்தைக் கொடுப்பவர் வக்கீலாக நடித்திருக்கும் வசந்த். ஹைகோர்ட் வக்கீல் என தன்னை கூறிக் கொண்டாலும் ஒரு இன்ஸ்பெக்டரிடமே பயந்து நடுங்குகிறார். இருந்தாலும் ஹரிஷையும், அவரது மனைவியையும் காப்பாற்ற அவர் துடிக்கும் துடிப்புதான் இந்தப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறது.
நான்கு சுவற்றுக்குள் படம் நகர்ந்தாலும் அவ்வளவு சிறிய இடத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜா. ராபர்ட் சற்குணம் பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.
ஒரே வீட்டில் படம் நகர்வதால் கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இயக்குனரின் புதிய முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நூடுல்ஸ் - சுவையுடன்…