ஜோதி,Jothi
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஸ்பிஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - கிருஷ்ண பரமாத்மா
இசை - ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
நடிப்பு - வெற்றி, ஷீலா, புஜிதா தேவராஜு, ராஜா சேதுபதி
வெளியான தேதி - 28 ஜுலை 2022
நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே மருத்துவக் குற்றங்கள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்து பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு மருத்துவக் குற்ற, குழந்தை கடத்தல் படம் இது.

இந்தியாவில் பிறந்த குழந்தைகளைக் கடத்துவது ஒரு பெரும் குற்றமாகவே இருக்கிறது. பணத்திற்காக ஆசைப்பட்டு பிறந்த குழந்தைகளை ஏதோ ஒரு காரணம் சொல்லி குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கப்படுவதை இந்தப் படத்தின் மையக் கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா. கதையாக சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையாக பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவே வெற்றி பெற்றிருக்கிறார்.

டாக்டராக இருக்கும் சரவணன் மனைவி ஷீலா நிறை மாத கர்ப்பிணி. ஒரு அவசர வேலையாக சரவணன் வெளியூர் செல்கிறார். அப்போது ஷீலா வீட்டிற்குள் செல்லும் ஒரு மர்ம நபர், ஷீலாவின் வயிற்றை அறுத்து, குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். ஷீலாவை பக்கத்து வீட்டில் உள்ள க்ரிஷா குரூப் கவனித்து மருத்துவமனையில் சேர்க்கிறார். இந்த வழக்கை சப் இன்ஸ்பெக்டரான வெற்றி விசாரிக்கிறார். அவரது சந்தேகப் பார்வையில் விழுபவர்களை அடுத்தடுத்து விசாரித்தாலும், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சில பல திருப்பங்களுக்குப் பிறகு அந்த குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்கிறார். யார் அந்தக் குற்றவாளி என்பதுதான் கிளைமாக்ஸ் ?.

இந்தியா முழுவதும் வருடா வருடம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி காணாமல் போனவர்களில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியான ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

படம் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் சாராமல் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. நாயகன் வெற்றி, ஷீலா, சரவணன், க்ரிஷா குரூப், குமரவேல், ராஜா சேதுபதி என பலரும் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்பதால் அந்தக் கதாபாத்திரங்களில் பொருந்திப் பார்க்க முடிகிறது.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசை காட்சிகளுக்கான விறுவிறுப்பை முடிந்தவரை கூட்டியிருக்கிறது. செசி ஜெயா ஒளிப்பதிவு கதையுடனே சுற்றி வருகிறது.

ஒரு அருமையான த்ரில்லர் படத்திற்குரிய கதைக் கரு. இன்னும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் திரைக்கதை அமைத்திருந்தால் வேறு ஒரு வரவேற்பை இந்தப் படம் பெற்றிருக்கும். கிளைமாக்ஸ் காட்சி நாம் சிறிதும் எதிர்பார்க்காத அளவில் அமைந்திருக்கிறது.

ஜோதி - ஒளி குறைவு…

 

ஜோதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஜோதி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓