பீட்சா 3 : த மம்மி,Pizza 3 The Mummy

பீட்சா 3 : த மம்மி - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மோகன் கோவிந்த்
இசை - அருண் ராஜ்
நடிப்பு - அஷ்விக் காகுமானு, பவித்ரா மாரிமுத்து
வெளியான தேதி - 28 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2/5

'த மம்மி' என படத் தலைப்பில் இருப்பதால் ஹாலிவுட் படம் என நினைத்துவிட வேண்டாம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பீட்சா' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதே தயாரிப்பு நிறுவனம் 'பீட்சா 2, த வில்லா' என பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்கள். இப்போது 'பீட்சா 3, த மம்மி' என வெளியிட்டுள்ளார்கள்.

முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகமே நெருங்காத போது, இந்த மூன்றாம் பாகம் எதற்காக என்று தெரியவில்லை. “த வில்லா, த மம்மி” என ஹாலிவுட் படங்களைப் போல பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதாது ரசிகர்களைக் கவர்வது எப்படி என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து மாறி புதிதாக எதையும் சொல்லவில்லை இயக்குனர் மோகன் கோவிந்த். பழி வாங்கும் பேய் தான், கூடவே சிறுமியின் பாலியல் வன் கொடுமை என சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சீரியசான விஷயங்களைச் சொல்கிறோம் என இப்படி பேய் படமாகக் 'படம்' காட்டுவதே வன்மமான ஒன்றுதான். இதையெல்லாம் எப்போது நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

அஷ்வின் காகுமானு ரெஸ்டாரென்ட் ஒன்றை நடத்தி வருகிறார். சிறு வயதிலிருந்தே பவித்ரா மாரிமுத்துவைக் காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு பவித்ராவின் அண்ணன் இன்ஸ்பெக்டரான கவுரவ் நாராயணன் எதிராக இருக்கிறார். அஷ்வினின் ரெஸ்ட்டாரென்டில் திடீரென ஒரு அற்புதமான ஸ்வீட் ஒன்று செய்யப்பட்டு பிரிட்ஜ்ஜில் இருக்கிறது. யாருமே அதைச் செய்யவில்லை என்கிறார்கள். மர்மமாக ஏதோ நடக்கிறது என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் அஷ்வின். அந்த ஸ்வீட்டைச் செய்தது ஒரு பேய் என கண்டுபிடிக்கிறார். இதனிடையே, அடுத்தடுத்து சில கொலைகளும் நடக்கிறது. அதற்கு அஷ்வின்தான் காரணம் என அவரைக் கைது செய்யத் துடிக்கிறார் கவுரவ். அந்தப் பேய் யார், கொலைகளுக்கு என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அஷ்வின் காகுமானு 'பொன்னியின் செல்வன்' படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இந்த 'பீட்சா 3' படத்திலும் நடித்திருக்கிறார். அந்த ஹேர்ஸ்டைல், தாடி எல்லாம் எடுக்க முடியாமல் அப்படியே இந்தப் படத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறார். ரெஸ்ட்டாரென்ட்டின் ஓனர் என்றாலும் படம் முழுவதும் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. கவுரவ் அவமானப்படுத்துவது ஓரிரு காட்சிகளோடு போனாலும் அதையே நினைத்து படம் முழுவதும் நடித்தது போல இருக்கிறது.

அஷ்வினின் காதலியாக பவித்ரா மாரிமுத்து. பேய்களுடன் நேரடியாக பேசக் கூடிய மொபைல் ஆப் ஒன்றைக் கண்டுபிடித்தவராம். ஆனால், இவரிடம் இடைவேளை வரை கூட தன் ரெஸ்ட்டாரென்டில் பேய் இருக்கிறது என அஷ்வின் சொல்லாமலேயே இருக்கிறாராம். இயல்பாக நடிக்கும் பவித்ராவுக்கும் ஆரம்பத்திலிருந்தே இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அவரும் படத்தில் இருக்கிறார் என்பதற்காக அவ்வப்போது மட்டும் காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்.

பிளாஷ்பேக் காட்சிகள் சிறுமியின் பாலியல் வன்கொடுமை பற்றிய காட்சிகளாக இருக்கின்றன. ஆனால், அதற்குரிய எதிர்ப்புகளை வசனத்திலாவது சொல்லியிருக்கலாம். அப்படியே கடந்து போகிறார்கள். பிளாஷ் பாக்கில் அனுபமா குமார், அபி நட்சத்திரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனுதாபப்பட வைக்கின்றன. வில்லன்களாக கவிதாபாரதி, வீரா காமப் பேய்களாக நடித்துள்ளனர்.

பிரபு ராகவ், ஒளிப்பதிவில் பேய்ப் படங்களுக்கே உரிய லைட்டிங் வித்தியாசமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. அருண் ராஜ் பின்னணி இசையும் பரபரப்பைக் கூட்டுகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் பலரும் காட்சிகளை நீளமாக வைப்பதில் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் எனத் தெரியவில்லை. அதுவே ஒரு சோர்வைக் கொடுத்துவிடும். இரண்டரை மணி நேரம் ஓடும் இப்படத்தை இரண்டு மணி நேரமாக சுருக்கியிருக்கலாம்.

பீட்சா 3, த மம்மி - சுவை குறைவு…

 

பட குழுவினர்

பீட்சா 3 : த மம்மி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓