டைனோசர்ஸ்,Dienosirs
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கேலக்சி பிக்சர்ஸ்
இயக்கம் - எம்ஆர் மாதவன்
இசை - போபோ சசி
நடிப்பு - உதய் கார்த்திக், ரிஷி, மாறா, யாமினி சந்தர், சாய் பிரியா தேவா
வெளியான தேதி - 28 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசக் கதை. ஏற்கெனவே இம்மாதிரியான படங்களை நிறைய முறை பார்த்துவிட்டதால் புதிதாக ஏதாவது இருந்தால் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என இயக்குனர் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி புதிதாக எதையும் யோசிக்காமல் ஒரு பழி வாங்கும் கதையையே கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மாதவன்.

வட சென்னையில் ரிஷி, மாறா இருவரும் நெருங்கிய நண்பர்கள். ரிஷி ஒரு டெய்லர் கடையை நடத்தி வருகிறார். மாறா அடியாளாக இருந்து மாறி திருமணம் செய்து கொண்டு ரவுடியிசத்தை விட்டு இருக்கிறார். பிரபல ரவுடியான கவின் ஜே பாபுவின் மைத்துனர் கொலை வழக்கிற்காக எட்டு பேர் சரண்டர் ஆக வேண்டிய சூழ்நிலையில் நண்பன் மாறாவுக்குப் பதிலாக தனா சரண்டர் ஆகிறார். ஆனால், ஆள் மாறாட்டம் நடந்ததைத் தெரிந்து கொண்ட கவின், பழிக்குப் பழியாக மாறாவைக் கொலை செய்கிறார். அதற்குப் பழி வாங்க மாறாவின் நண்பனான ரிஷியின் தம்பி உதய் கார்த்திக் துடிக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நட்பு, துரோகம், பழி வாங்கல், காதல், குடும்பம், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த 'கேங்ஸ்டர்' படமாக இப்படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகள் சிறப்பாக இருக்கிறதே என பாராட்ட வைக்க, அடுத்த காட்சியே சுமாராக அமைந்து தடுமாற வைத்துவிட்டது. இடைவேளைக்குப் பின் இன்னும் சுவாரசியமான காட்சிகளை அமைத்திருந்தால் வட சென்னை சம்பந்தப்பட்ட படங்களில் இந்தப் படமும் முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் மூன்று கதாநாயகர்கள் என்பது போல ஆரம்பித்தாலும் போகப் போக உதய் கார்த்திக் மட்டும்தான் படத்தின் கதாநாயகன் என அவரை மையப்படுத்தியே திரைக்கதை நகர்கிறது. அடிதடி சண்டையே வேண்டாமென ஒதுங்கி நிற்பவர் உதய் கார்த்திக். தனது அண்ணனின் நண்பனுக்காக ஏரியா ரவுடிகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். மண்ணு என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் போகப் போக கதாபாத்திரத்திற்குள் புதைந்துவிடுகிறார் உதய் கார்த்திக்.

நெருங்கிய நண்பர்களாக ரிஷி, மாறா. புதிதாகத் திருமணமான நண்பனுக்காக சிறைக்குச் செல்லவும் தயங்காத நண்பர் ரிஷி. இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நண்பர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறார். இடைவேளைக்குப் பின் இவரும் சிறையிலிருந்து வெளியில் வந்து நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே. கொஞ்ச நேரமே வந்தாலும் மாறாவின் மரணம் கலங்க வைத்துவிடுகிறது.

வட சென்னையின் இரண்டு முக்கிய ரவுடிகளாக மானேக்ஷா, கவின் ஜே பாபு. இருவரைப் பார்த்தாலுமே ரவுடி என நம்ப முடிகிறது. தோற்றத்தில் இருப்பதை நடிப்பிலும் வெளிப்படுத்தி மிரட்டுகிறார்கள். படத்தில் யாருக்காவது ஜோடி வைத்தாக வேண்டும் என கதாநாயகிகள் கதாபாத்திரத்தை திணித்திருக்கிறார்கள். மாறாவின் புது மனைவியாக யாமினி சந்தர், உதய் கார்த்திக்கின் காதலியாக சாய் பிரியா தேவா நடித்திருக்கிறார்கள்.

போபோ சசி வட சென்னைக்குரிய பின்னணி இசையை தனித்து கொடுத்திருக்கிறார். கதைக்களத்தை தன் ஒளிப்பதிவில் இயல்பாய் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி ஆனந்த். காட்சிகளின் நீளத்தை எடிட்டர் கலைவாணன் குறைத்திருக்கலாம்.

ஆங்காங்கே வசனங்கள் நச்சென்று அமைந்துள்ளன. கதாபாத்திரங்களும், சில பரபரப்பான காட்சிகளும் தான் படத்தைக் காப்பாற்றுகிறது. ஒரு காட்சி வந்தால் சீக்கிரம் முடியாமல், நீண்டு கொண்டே போகிறது. இடைவேளைக்குப் பின் என்ன மாதிரியான காட்சிகளை வைப்பது என இயக்குனர் தடுமாறியிருக்கிறார். இவற்றையெல்லாம் சரி செய்திருந்தால் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கும்.

டைனோசர்ஸ் - கொஞ்சம் 'நோ', கொஞ்சம் 'சரி'

 

பட குழுவினர்

டைனோசர்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓