3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வீனஸ் இன்போடெயின்மென்ட், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - தரணி ராசேந்திரன்
இசை - சக்கரவர்த்தி
நடிப்பு - ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2023
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் சரித்திரக் கதைகளைக் கொண்ட படங்கள் கருப்பு வெள்ளை காலத்தில்தான் அதிகமாக வந்தன. அதன்பின் அவை படிப்படியாகக் குறைந்தன. தெலுங்கில் வெளிவந்த 'பாகுலி' படங்களைத் தொடர்ந்து தமிழில் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் படம் உருவானது. அதன் தொடர்ச்சியாக வந்துள்ள மற்றுமொரு சரித்திரப் படம்தான் இந்த 'யாத்திசை'.

'பொன்னியின் செல்வன்' படம் அளவிற்குப் பட்ஜெட்டும் இல்லை, அந்த அளவுக்கு நட்சத்திர அந்தஸ்தும் இல்லை. ஆனால், இப்படத்தின் டிரைலர் வெளியான போதே பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த அளவிற்குக் குறைவான பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான உருவாக்கத்தை இந்த படக்குழு தந்திருக்கிறது.

இயக்குனர் தரணி ராஜேந்திரனுக்கு இந்தப் படம் சரியானதொரு அடையாளத்தைக் கொடுக்கும். இவ்வளவு சிறிய பட்ஜெட்டிலேயே, நிறைய புதுமுகங்களை வைத்து தரமானதொரு படத்தைக் கொடுக்க முடிகிறது. எனவே, இவரை நம்பி இன்னும் பல கோடிகளைக் கொட்டிக் கொடுக்க சில தயாரிப்பாளர்கள் முன்வரலாம். பாண்டியர்களின் வீர வரலாற்றை தரணி முழுவதும் ஒலிக்க வைக்க இந்த 'யாத்திசை'யைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்

சேர, சோழ, பல்லவர்களை தனது வீரத்தால் வென்று அவர்களை விரட்டியடித்து தென் திசை முழுவதும் தனது ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வருகிறார் பாண்டிய மன்னர் ரணதீரன். சோழ மண்ணிலிருந்து ஆட்சி செய்து வருகிறார். அவரால் பாளை நிலப் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்ட எயினர்கள் என்ற பழங்குடியினர் தங்களது நிலை கண்டு குமுறுகின்றனர். அவர்களின் தலைவனாக கோதி என்பவன் காட்டில் மறைந்து வாழும் சோழர்களைத் தேடிக் கண்டுபிடித்து ரணதீரனை வென்று காட்டுகிறேன், துணைக்கு வாருங்கள் என அழைக்கிறான். அதன்படி சோழ தேசத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி ரணதீரனை வெற்றி கொள்கிறான். காட்டில் பெரும்பள்ளிகள் என்ற கூட்டத்திடம் சென்று ஆதரவு கேட்கிறான் ரணதீரன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

7ம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. அந்தக் காலத்தில் மன்னர்களும், எயினர்கள் என்ற பழங்குடி இன மக்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நாமும் நம்பும் அளவிற்கு அந்த கால கட்டத்தை முற்றிலும் வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ள புதுமுகங்கள் அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பாண்டிய மன்னன் ரணதீரன் ஆக அறிமுக நடிகர் ஷக்தி மித்ரன் நடித்திருக்கிறார். படத்தின் இடைவேளை சமயத்தில்தான் இவரது கதாபாத்திர அறிமுகம் நடக்கிறது. அதுவரை பாண்டிய மன்னன் ரணதீரன் பெரும் வீரன் என படத்தில் சொல்கிறார்கள். ஆனால், அவரது கதாபாத்திரம் படத்தில் அறிமுகமானதுமே அவர் எயினர்களின் தாக்குதலில் தடுமாறி ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தத் தோல்வியால் கடும் கோபமடையும் ரணதீரன் எப்படியாது எயினர்களை அழிப்பேன் என சபதமெடுக்கிறார். ரணதீரன் கதாபாத்திரத்தில் முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார் ஷக்தி மித்ரன்.

எயினர்களின் படைக்குத் தலைமை ஏற்று நடத்தும் கோதி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் சேயோன். இடைவேளை வரை படத்தின் கதாநாயகனாக இவரைத்தான் சொல்ல வேண்டும். தங்களை ஓடவிட்ட ரணதீரனை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் தனது கூட்டத்தினருக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு கதாபாத்திரம். பார்ப்பதற்கு ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா போல இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரணதீரன் தன்னை சுற்றி வளைக்க திட்டம் போட்டுவிட்டான் என்று தெரிந்ததும் வீணாகப் போர் புரிந்து வீரர்களை பலி கொடுப்பதற்குப் பதிலாக நேருக்கு நேர் மோதத் துணிவது வீரன் என்பதையும் மீறி நல்ல தலைவன் எனப் புரிய வைக்கிறது.

படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படவில்லை. தேவரடியார்களாக ராஜலட்சுமி, வைதேகி அமர்நாத் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். எயினர் கூட்டப் பூசாரியாக குரு சோமசுந்தரம் ஒரே ஒரு நீளமான காட்சியில் வருகிறார்.

படத்தில் இயக்குனருக்கு உதவும் பெரும் கூட்டமாக ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து, கலை இயக்குனர் இரஞ்சித்குமார், எடிட்டர் மகேந்திரன் கணேசன், ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ்குமார், சண்டைப் பயிற்சியாளர் ஓம் சிவபிரகாஷ் இருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் பின்னணி இசை ஒரு சரித்திரப் படத்திற்கு மிகத் தரமாக அமைந்திருக்கிறது.

மிக நீளமான கொற்றவை பலி காட்சி, பெரும்பள்ளிகள் கூட்டத்துடனான ரணதீரனின் பேச்சுவார்த்தை மிக நீளமான காட்சிகளாக வந்து படத்தின் வேகத்தைத் தணிக்கிறது. சேர, சோழ, பல்லவர்களை வென்ற பாண்டிய மன்னன் ரணதீரன், ஒரு காட்டுவாசி கூட்டமான எயினர்களிடம் தோற்று ஓடிப் போகிறார் என்பது படத்திற்கான ஹீரோயிசத்தைக் குறைக்கிறது. ஒரு பேரரசன் மற்றொரு பேரரசனோடு மோதி, தோற்றோ, வென்றாலோ பரவாயில்லை. ஆனால், ஆயிரம் பேர் கொண்ட எயினர் கூட்டத்திடம் தோற்பது லாஜிக்கலாக சரியாக இருந்தாலும் படமாக சரியாக இருக்காது. இரண்டாம் பாகமும் வரப் போகிறது. அதில் இப்படியான சில குறைகளைத் தவிர்க்கலாம்.

மற்றபடி இயக்குனர் மற்றும் அவரது குழுவினரின் உழைப்புக்கும், முயற்சிக்கும் இந்தப் படத்தைத் தாரளமாகப் பாராட்டலாம்.

யாத்திசை - எத்திசைக்கும்…

 

யாத்திசை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

யாத்திசை

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓