பொம்மை நாயகி,Bommai Nayagi
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஷான்
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு - யோகிபாபு, சுபத்ரா, பேபி ஸ்ரீமதி
வெளியான தேதி - 3 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

எளியவனை வலியவன் ஆட்டிப் படைக்கும் மற்றுமொரு கதை. இதில் ஒரு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை, சாதிப் பிரச்னை என இரண்டையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இதில் எதை மையக் கருத்தாக வைத்து படத்தைக் கொடுப்பது என இயக்குனர் ஷான் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். சிறுமி பிரச்சினை, சாதிப் பிரச்னை இரண்டில் ஒன்றை மட்டும் மையமாக எடுத்துக் கொண்டிருந்தால் அந்த தடுமாற்றம் வந்திருக்காது.

கடலூர் அருகில் ஒரு டீக்கடையில் வேலை பார்ப்பவர் யோகிபாபு. அவரது முதலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலை இல்லாமல் இருக்கிறார். அந்த சமயத்தில் ஊர்த் திருவிழா நடக்கும் போது அவரது 9 வயது மகளை மேல்சாதியினர் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறார்கள். தக்க சமயத்தில் அதைத் தடுத்துவிடுகிறார் யோகிபாபு. காவல் துறை புகாரை வாங்க மறுக்க, அவர் மீது நீதிமன்றத்திற்கே சென்று புகார் கொடுக்கிறார். வழக்கு நடந்து குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மேல் முறையீட்டில் அவர்கள் ஜாமினில் வெளியில் வருகிறார்கள். யோகிபாபுவைப் பழி வாங்க நினைக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படி உணர்வு பூர்வமான கதைகளைப் படமாக்கும் போது சம்பந்தப்பட்ட முக்கியக் கதாபாத்திரம் மீது நமக்கு அதிக அளவிலான அனுதாபம் வர வேண்டும். அப்போதுதான் படத்துடன் ஒன்ற முடியும். இந்தப் படத்தில் அது ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் போவது படத்தின் ஜீவனைக் குறைத்துவிடுகிறது. கதைக்களம், கதாபாத்திரங்களுக்காக யோசித்த இயக்குனர் அந்த உணர்வுக்கும் கொஞ்சம் யோசித்திருந்தக்கலாம்.

இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்ததும் யோகிபாபு நடித்து வந்த 'மண்டேலா' படம் போல இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. படம் அந்த அளவிற்கு இல்லையென்றாலும் யோகிபாபு நடிப்பில் ஏமாற்றவில்லை. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு அப்பாவி அப்பாவின் தயக்கத்தை படம் முழுவதும் இயல்பாகக் காட்டியிருக்கிறார். யோகி பாபுவின் மனைவியாக சுபத்ராவும் அதே அளவிற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

யோகிபாபுவின் அண்ணனாக அருள்தாஸ், அப்பாவாக ஜிஎம் குமார், யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை அதன் இயல்புடனேயே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அதிசயராஜ். கேஎஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கான உணர்வை அதிகமாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறது.

இடைவேளைக்குப் பின் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் கதை பயணிப்பது பெரும் குறையாக உள்ளது. ஏதோ பெரிதாக நடந்து கதை முடியும் என எதிர்பார்த்தால் சாதாரணமாக முடித்திருக்கிறார் இயக்குனர்.

பொம்மை நாயகி - பொம்மை குழந்தை

 

பட குழுவினர்

பொம்மை நாயகி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓