பிகினிங்,Beginning
Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லெப்டி மேனுவல் கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஜெகன் விஜயா
இசை - கேஎஸ் சுந்தரமூர்த்தி
நடிப்பு - வினோத் கிஷன், கௌரி ஜி கிஷன்
வெளியான தேதி - 26 ஜனவரி 2023
நேரம் - 1 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

ஆசியாவிலேயே முதன் முறையாக வெளிவந்துள்ள 'ஸ்பிளிட் ஸ்கிரீன்' திரைப்படம். அதாவது தியேட்டர்களில் திரையில் இடது புறத்தில் ஒரு காட்சியும், வலது புறத்தில் வேறொரு காட்சியும் இடம் பெறும். அந்த விதத்தில் படமாக்கப்பட்டுள்ள படம் இந்த 'பிகினிங்'.

இப்படியான புது மாதிரியான கதைக்கு எந்த மாதிரியான கதையும், காட்சிகளும் பொருத்தமாக இருக்கும் என யோசித்து இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெகன் விஜயா.

மன வளர்ச்சி குன்றிய இளைஞர் வினோத் கிஷன். அவரது அம்மா ரோகிணி மகனுக்குத் தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு அவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். அம்மா சென்ற பின் தனது அன்றாட வேலைகளை ஆரம்பிக்கிறார் வினோத். இது திரையின் இடது புறத்தில் நகரும் கதை.

அழகான இளம் பெண்ணான கௌரி ஜி கிஷனை, சச்சின் தனது நண்பர்கள் இருவர் உதவியுடன் கடத்தி வந்து நண்பன் மகேந்திரன் வீட்டில் தனி அறையில் அடைத்து வைக்கிறார். மயக்கம் தெளிந்து எழும் கௌரி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அவருக்கு அந்த அறையில் பழைய போன் ஒன்று கிடைக்கிறது. அந்த போனில் சில பட்டன்கள் வேலை செய்யவில்லை. அதனால், போலீசைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிடைக்கும் ஏதோ ஒரு எண்ணிற்கு போன் போடுகிறார். அவர் போன் போடுவது மன வளர்ச்சி குன்றிய இளைஞர் வினோத் கிஷனுக்கு. இது திரையின் வலது புறத்தில் நடக்கும் கதை.

வலது புற திரையின் அறையில் பூட்டப்பட்டுள்ள கௌரிக்கு, இடது புற திரையின் அறையில் பூட்டப்பட்டுள்ள வினோத் உதவு முடியுமா ? என்பதுதான் வித்தியாசமான இந்தப் படத்தின் இரண்டு திரையும் சேர்ந்த ஒரு திரையின் கதை.

மன வளர்ச்சி குன்றிய இளைஞராக வினோத் கிஷன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். அதற்கான உடல் மொழி, திக்கித் திக்கிப் பேசும் குறைபாடு, ஒரு பதட்டம் என மிக எமோஷனலாக நடித்திருக்கிறார். யார் என்றே தெரியாத, எங்கோ சிக்கித் தவிக்கும் கௌரிக்கு உதவத் துடிக்கும் அவருடைய மனம் குன்றிய மனம் அல்ல குன்றின் மனம் கொண்டவர்.

'96' படத்தில் இளம் த்ரிஷாவாக நடித்த கௌரி ஜி கிஷன் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஒரு அறையில் அவரை யாரோ கடத்தி வந்து அடைத்துவிட அங்கிருந்து தப்பிக்க அவர் படும் கஷ்டங்கள் பரிதவிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு போன் கிடைத்து அதில் பேசினால் எதிர்முனையில் இருக்கும் வினோத்திற்கு நிலைமையைப் புரிய வைத்து உதவி கேட்க தனி முயற்சி செய்கிறார். பொறுமையாகப் பேசி தனக்கான உதவியைத் தேடிக் கொள்ளத் தவிக்கிறார். கிளைமாக்சில் கௌரி செய்யும் அந்த செயல் சிறப்பு.

வில்லனாக சச்சின், சில காட்சிகளில் வந்தாலும் சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்கிறார். அவருக்கு உதவும் நண்பர்களாக மகேந்திரன், சுருளி. வினோத்தின் அம்மாவாக ரோகிணி, வினோத்தின் நண்பனாக கேபிஒய் பாலா ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

தனித் தனியாகப் படமாக்கி இரண்டு காட்சிகளையும் திரையில் சரியான நேர இடைவெளியில் தொகுத்துத் தருவது சாதாரண விஷயமல்ல. அதைச் சரியாகச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரேம்குமார். இரண்டு அறைகளில் முழு படம் நகர்ந்தாலும் ஒளிப்பதிவில் அது தெரியாத அளவிற்கு பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் வீரகுமார். கேஎஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.

புதிய முயற்சிகளுக்கு தமிழ் சினிமா எப்போதும் ஆதரவளிக்கும். அது இப்படத்திற்கும் கிடைத்தால் சிறப்பே. எளிமையான படமாக இருந்தாலும் எமோஷனலாக படமாக அமைந்து ரசிக்க வைக்கிறது.

பிகினிங் - நல்ல தொடக்கம்…

 

பிகினிங் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பிகினிங்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓