காரி,Kaari

காரி - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - ஹேமந்த்
இசை - இமான்
நடிப்பு - சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி
வெளியான தேதி - 25 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு கிராமத்துப் படம் 'காரி'. படத்தில் புதிதாக ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று பார்த்தால் அப்படி எதுவுமில்லை, வழக்கமான 'க்ரின்ஜ்' காட்சிகளுடன் கூடிய ஒரு படமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். கதையை ஓரளவிற்கு யோசித்த இயக்குனர் அப்படியே சசிகுமாருக்கு கொஞ்சம் மாறுபட்ட காட்சிகளை சேர்த்திருக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனெந்தல் இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான கருப்பன் கோயில் நிர்வாகத்தை யார் பார்ப்பது என்ற மோதல் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோயில் நிர்வாகம் என முடிவாகிறது. காளைகளை அடக்க சென்னையில் செட்டிலான சசிகுமார் குடும்பத்தை அழைக்க கிராமத்துப் பெரியவர்கள் செல்கிறார்கள். சென்னையில் குதிரை ஜாக்கி ஆக இருக்கும் சசிகுமார் முதலில் மறுத்து பின் கிராமத்திற்கு வருகிறார். அவர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டாரா, கோயில் நிர்வாகம் எந்த கிராமத்திற்குச் சென்றது என்பதுதான் மீதிக் கதை.

இந்தக் கதையை மட்டும் முழுக்க முழுக்க மண் மனத்துடன், ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பற்றியும், அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றியும் சொல்லியிருந்தால் அழுத்தமாக இருந்திருக்கும். ஆனால், ஒரு கார்ப்பரேட் வில்லன், காளை மாடுகளை வாங்கி அதை கறிக்காக எக்ஸ்போர்ட் செய்பவர் என வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவில் சென்றுள்ளார்கள்.

சசிகுமாருக்கு 'டெம்ப்ளேட்' கதாபாத்திரம். வழக்கம் போல பேசி, திட்டி, கோபப்படுத்தி, சண்டையிட்டு, காதலித்து, உருகி அழுது நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அப்பா ஆடுகளம் நரேன் சமூக அக்கறையுடன் குரல் கொடுப்பதையும், குதிரை மரணமடைய தான்தான் காரணம் என்று சொன்னதையும் ஏற்காமல் சண்டை போடுகிறார். கிராமத்திற்கு வந்த பிறகு அப்பா நடந்து கொண்ட விதம் சரி என்று உணர்கிறார். குதிரை, காளை அனைத்துமே நம்மைப் போன்ற ஒரு உயிர் தான் என புரிந்து கொள்கிறார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்த பார்வதி அருண் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் தன்னை அற்புதமாக பொருத்திக் கொண்டிருக்கிறார். காளை மாட்டை அப்பா விற்றுவிட்டார் என்று தெரிந்து அதனால் மனமுடைந்து கதறி அழும் காட்சியில் கலங்க வைக்கிறார். மாடு, காளை மீது நம் கிராமத்துப் பெண்களுக்கு உள்ள பாசத்தை பார்வதி கதாபாத்திரம் மூலம் உணர வைக்கிறார் இயக்குனர்.

கார்ப்பரேட் வில்லனாக ஜேடி சக்ரவர்த்தி. ஒரு பெரிய டைனிங் ஹாலில் சக கார்ப்பரேட் அதிபர்களுடன் உட்கார்ந்து காளை மாடு கறியைச் சாப்பிடுவதைப் பற்றி 'கிளாஸ்' எடுக்கிறார். ஏதேதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் பட்டு, வேட்டி சட்டை அணிந்து வந்து ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கிறார்.

கதாநாயகி பார்வதியின் அப்பாவாக பாலாஜி சக்திவேல், கதாநாயகன் சசிகுமாரின் அப்பாவாக ஆடுகளம் நரேன், ஊர் பெரியவராக நாகி நீடு அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அம்மு அபிராமி, ராம்குமார், ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய 'சாஞ்சிக்கவா…' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. டெம்ப்ளேட் காட்சிகளுக்கான டெம்ப்ளேட் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இமான்.

படத்தில் எல்லாமே மேலோட்டமாகக் கடந்து போகிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் கொடுக்கத் தவறிவிட்டார் இயக்குனர். 'ஜல்லிக்கட்டு' பற்றிய அதிரடியான படம் என்று எதிர்பார்த்துச் சென்றால் இரண்டு ஊர் பிரச்சினைகளை வைத்து அதில் ஜல்லிக்கட்டை திணித்து பரபரப்பை ஏற்படுத்தலாம் என முயன்று இருக்கிறார்கள்.

காரி - இன்னும் கொஞ்சம் பாய்ந்திருக்கலாம் சீறி...

 

காரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

காரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓