2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்
இயக்கம் - ஜேடி ஜெர்ரி
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு - சரவணன், கீத்திகா, ஊர்வசி ரவுட்டலா
வெளியான தேதி - 28 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 41 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமா எத்தனையோ விதவிதமான நடிகர்களைப் பார்த்துவிட்டது. அதிலும் அறிமுகமாகி ஒரே படத்தில் காணாமல் போன நடிகர்கள் முதல், சில வருடங்கள் நடித்து காணாமல் போனவர்கள், அறுபது வயதைக் கடந்தாலும் இன்னமும் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், ஐம்பது வயதிற்கும் மேல் நாயகனாக அறிமுகம் ஆகும் நடிகர்கள் பல பலர் இந்தப் பட்டியலில் அடக்கம்.

தனது கடை விளம்பரங்களில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடனமாட, விளம்பரப் படங்களை எடுத்து அதன் மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்குப் பிரபலமானவர் சரவணன். எந்தவிதமான விமர்சனம் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சினிமாவில் நாயகனாக நடித்தே தீருவது என்று இந்தப் படத்தைத் தயாரித்து நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.

பல விளம்பரப் படங்களையும், 'உல்லாசம், விசில்' ஆகிய படங்களையும் இயக்கிய ஜேடி--ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்கள். கதைக்காக எல்லாம் ரொம்பவும் மெனக்கெடவில்லை. 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' டைப்பிலான ஒரு கதையே போதும் என முடிவெடுத்து கொஞ்சம் உல்டா செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் சர்க்கரை நோயளிகளின் எண்ணிக்கை அதிகம். அதன் வீரியத்தைக் குறைக்க இன்சுலின் ஊசியை போட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். வெளிநாட்டில் தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என சரவணன் இந்தியா திரும்புகிறார். அவரது பள்ளி கால நண்பன் ரோபோ சங்கர் குடும்பமே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்ததிலிருந்தே சர்க்கரை நோய் இருக்கிறது. இந்நிலையில் ரோபோ சங்கர் இறந்து விடுகிறார். அதனால் மனமுடையும் சரவணன் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார். அதற்கு பெரிய மருந்து கம்பெனி ஓனரான சுமன் எதிராக இருக்கிறார். சரவணன் மருந்தைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் ஒரே ஹேர்ஸ்டைல், சோகக் காட்சியில் கூட அப்படியே இருக்கும் மேக்கப், ஒரே விதமான வசன உச்சரிப்பு என பணம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் படம் தயாரித்து நாயகனாக நடிக்கலாம் என சரவணன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரம்மாண்டமாக எடுத்தால் சில பல குறைகளை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என இயக்குனர்கள் அட்வைஸ் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. படம் முழுவதும் ஒரே கூட்டமாக இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை அதிகம் பார்த்து நடிக்க முயற்சித்திருக்கிறார் சரவணன். நடிப்பு என்பது வேறு என இனி புரிந்து கொள்வார்.

விளம்பரப் படங்களில் தன்னுடன் ஜோடி போட்டு நடித்த முன்னணி நடிகைகள் எத்தனை கோடி கொடுத்தாலும் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிக்க மாட்டார்கள் என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. அதனால் புதிதாக பாலிவுட் ஹீரோயின்களை அழைத்து வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள். சரவணனின் மனைவியாக கீத்திகா முதல் பாதியிலும், சரவணனின் ஆராய்ச்சி உதவியாளராக ஊர்வசி ரவுட்டலா இரண்டாம் பாதியிலும் நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக சுமன். மிகப் பெரிய பார்மா கம்பெனியை நடத்துபவர். சரவணனின் ஆராய்ச்சிக்கு தடையாக இருப்பவர். சரவணன் அண்ணனாக பிரபு, இடைவேளைக்கு முன்பு நகைச்சுவைக்காக மறைந்த நடிகர் விவேக், இடைவேளைக்குப் பின்பு யோகி பாபு, சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

படம் முழுவதும் பிரம்மாண்டமான அரங்குகள், நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் என பட்ஜெட்டை எகிற வைத்திருக்கிறார்கள். பாடல் காட்சிகளை முன்னணி கதாநாயகர்களுக்குரிது போல எடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவற்றைப் பார்க்க விளம்பரப் பாடல் போலவே உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு முன்பு வெளிவந்த சில ஹிட் பாடல்களை மீண்டும் காப்பி அடித்திருக்கிறார்.

படம் எப்படித்தான் இருக்கிறது என பார்க்க ஆசைப்பட்டு சிலர் படத்தைப் பார்க்கப் போகிறார்கள். அதையே வரவேற்பு என நினைத்து அடுத்த படத்தை இக்குழு சீக்கிரமே ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.

தி லெஜன்ட் - பொறுமையோ பொறுமை

 

தி லெஜண்ட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தி லெஜண்ட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓