O2,O2
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஜிஎஸ் விக்னேஷ்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன்
வெளியான தேதி - 17 ஜுன் 2022 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.5/5

ஓடிடியில் வெளியாகும் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு 'இலக்கணம்' வந்துவிடும் போலிருக்கிறது. பார்க்கத் திரைப்படம் போல இல்லாமல், குறும்படம் போலவும் இல்லாமல் இருக்கும் சில படங்கள்தான் ஓடிடி தளங்களில் அதிகமாக வெளியாகின்றன. அப்படி ஒரு படமாகத்தான் இந்த 'ஓ 2' படம் இருக்கிறது.

இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்ட ஒரு குறும்படமாகவே இந்த 'ஓ 2' படம் தெரிகிறது. மிகக் குறைவான கதாபாத்திரங்கள், ஒரே ஒரு பேருந்தில் நடக்கும் கதை என ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே கதை சுற்றி வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு பரபரப்பு திரைக்கதையில் இல்லாமல் போனது படத்தின் சுவாரசியத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

அறிமுக இயக்குனர் விக்னேஷுக்கு அவரது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நயன்தாரா கிடைத்திருந்தும், அதற்கான முக்கியத்துவத்தை படத்தில் கொடுக்கத் தவறிவிட்டார். கதையாக ஒரு தாய்மையின் போராட்டத்தைக் காட்டக் கூடிய கதை, ஆனால், திரைக்கதை அமைத்து காட்சிகளாக்குவதில் அந்த தாய்மையின் போராட்ட உணர்வைக் கடத்தத் தவறிவிட்டார்.

கணவனை இழந்த இளம் விதவை நயன்தாரா. அவருடைய ஒரே மகன் ரித்விக்கிற்கு சுவாசக் கோளாறு இருக்கிறது. எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம்தான் அவன் சுவாசிக்க முடியும். அதற்கான ஆபரேஷன் செய்து கொள்வதற்காக கோயம்புத்தூரிலிருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்து மூலம் செல்கிறார். கடும் மழைக்கிடையில் நிலச்சரிவில் அந்தப் பேருந்து சிக்கிக் கொள்கிறது. பேருந்தில் இருப்பவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதனால், நயன்தாராவின் மகன் ரித்விக்கின் ஆக்சிஜன் சிலிண்டரைக் கைப்பற்றி சுவாசிக்க முயற்சிக்கின்றனர். தன் மகனைக் காப்பாற்ற நயன்தாரா என்ன முயற்சி எடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் நயன்தாரா எப்போதுமே கவனமாக இருப்பார். இந்தப் படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் கேட்டதுமே தனக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார். ஆனால், அவரது எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. தன் மகனின் ஆக்சிஜன் சிலிண்டரைக் கைப்பற்றத் துடிப்பவர்களை எதிர்த்து ஓரிரு முறை போராடுவதுடன் அவரது போராட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அக்கதாபாத்திரம் மீது பெரிதாக எந்த ஒரு அனுதாபமும் வரவில்லை என்பது உண்மை.

பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளாக சில கதாபாத்திரங்கள். ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு அரசியல்வாதி, காதலியுடன் ஓடிப் போகத் திட்டமிட்டு பயணிக்கும் ஒரு காதலன், அவரது காதலி, அக்காதலியின் அப்பா, சிறையிலிருந்து விடுதலையாகி அம்மாவைப் பார்க்கப் போகும் ஒருவர், ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்கள். இவர்களில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் நீலகண்டனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம். பேருந்தில் போதைப் பொருளை எடுத்துச் சென்று கேரளாவில் சேர்க்க நினைக்கும் போது சிக்கிக் கொள்கிறார். எப்படியாவது தப்பிக்க வேண்டும் என கொஞ்ச நேரம் ரவுடி போலீசாக மாறிவிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவு காட்சிகளைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நயன்தாராவின் மகனாக யு டியூப் புகழ் ரித்விக். அந்த சிறுவன் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு கதாபாத்திரம். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார் ரித்விக்.

ஒரே ஒரு பேருந்தில் பயணிக்கும் கதை. பேருந்தை செட்டாக அமைத்துத்தான் படமாக்கியிருப்பார்கள். அந்த செட்டை வடிவமைத்த கலை இயக்குனர், அதற்குள்ளேயே பல கோணங்களில் காட்சியமைத்த ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்கள்.

இதற்கு முன்பு நயன்தாரா நடித்து வெளிவந்த 'அறம்' படத்தில் ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததை மையமாக வைத்து படம் வந்தது. இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஏனோ அந்தப் படம் ஞாபகம் வந்து போகிறது. அந்தப் படத்தில் ஆழ்துளைக் குழாய் குழந்தையைக் காப்பாற்ற வெளியில் கலெக்டர் நயன்தாரா நடத்தும் போராட்டம் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் பேருந்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற தேசிய பேரிடர் குழு போராடுவதை திரைக்கதையாக அமைத்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது. அக்குழுவின் மீட்புப் பணிகளை போகிற போக்கில் காட்டிவிட்டுச் செல்கிறார்கள். பேருந்தில் சிக்கிய குடும்பத்து உறவினர்களில் ஒரே ஒருவர் மட்டுமே அந்த இடத்திற்கு வருகிறார். இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது.

ஓ 2 - லெவல் குறைவு…

 

O2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

O2

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓