இறுதி பக்கம்,Irudhi pakkam

இறுதி பக்கம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - டிரீம் கிரியேஷன்ஸ்
இயக்கம் - மனோ வெ கண்ணதாசன்
இசை - ஜோன்ஸ் ரூபர்ட்
நடிப்பு - ராஜேஷ் பாலசந்திரன், அம்ருதா ஸ்ரீனிவாசன்
வெளியான தேதி - 17 டிசம்பர் 2021
நேரம் - 1 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

சினிமா என்பது ஆச்சரியமான ஒன்று. சில சமயங்களில் எதிர்பார்த்தவை ஏமாற்றிவிடும், எதிர்பாராதவை ரசிக்க வைத்துவிடும். இந்தப் படம் இதில் இரண்டாவது ரகம்.

இளம் இயக்குனர் மனோ கண்ணதாசன் ஒன்றைரை மணி நேரத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லரைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படத்தில் அதிக பரிச்சயமில்லாத நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆனால், அனைவருமே யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனரையே சாரும்.

பெண் எழுத்தாளரான அம்ருதா ஸ்ரீனிவாசன் அவரது வீட்டில் கொல்லப்படுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் வழக்கை விசாரிக்கும் போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடக்கிறது. அதையெல்லாம் மீறி அவர் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்ஸ்பெக்டர் ஆக நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரன் தான் படத்தின் கதாநாயகன். சினிமாத்தனமில்லாத இயல்பான முகம். வழக்கை விசாரிப்பதிலும் அவ்வளவு இயல்பு. வழக்கமான சினிமாவில் விசாரிப்பது போல அவரது விசாரணை இல்லை.

பெண் எழுத்தாளராக நடித்திருக்கும் அம்ருதா சீனிவாசன் தான் படத்தின் கதாநாயகி. படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கொல்லப்படுகிறார். அதன்பிறகு பிளாஷ்பேக்கில்தான் அவரது காட்சிகள் வருகிறது. இப்படியெல்லாம் யோசிக்கும் பெண்கள் இருக்கிறார்களா என்று அவரது கதாபாத்திரம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

அம்ருதாவின் காதலர்களாக ஸ்ரீராஜ் மற்றும் விக்னேஷ் சண்முகம். இவர்களது காதலில் ஒருவர் மனதிற்கு, மற்றொருவர் உடலுக்கு என பிரிக்கிறார் காதலி அம்ருதா. இன்ஸ்பெக்டருக்கு உதவும் பெண் போலீசாக கிரிஜா ஹரி, கான்ஸ்டபிளாக சுபதி ராஜ் ஆகியோரும் குறிப்பிட வேண்டியவர்கள்.

பிரவீண் பாலுவின் ஒளிப்பதிவு, ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை, ராம் பாண்டியனின் படத்தொகுப்பு ஆகியவை கதையோடு பொருத்தமாக அமைந்து இயக்குனருக்கு கை கொடுத்திருக்கிறது.

ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிவடைந்துவிடுவதால், பாடல்கள், தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள் என எதுவும் படத்தில் இல்லை.

நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் தங்களது படைப்புகளை, கதாபாத்திரங்களை நம்பி வரும் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டியவை. இயக்குனர் மனோ அடுத்த படத்தில் முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பைப் பெறட்டும் என வாழ்த்துவோம்.

இறுதி பக்கம் - சுவாரசியம்

 

பட குழுவினர்

இறுதி பக்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓