3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஆசீர்வாத் சினிமாஸ்
இயக்கம் : பிரியதர்ஷன்
நடிகர்கள் : மோகன்லால், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், கல்யாணி பிரியதர்ஷன், ஹரீஷ் பெராடி, அசோக் செல்வன், நெடுமுடி வேணு, முகேஷ் மற்றும் பலர்.
இசை : ராகுல்ராஜ், அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல்
ஒளிப்பதிவு : திரு
கலை : சாபு சிரில்
வெளியான தேதி : 2.12.21
நேரம் : 3 மணிநேரம் 1 நிமிடம்
ரேட்டிங் : 3/5

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சாலி மரைக்காயர் என்கிற கடற்படை தலைவன் பற்றிய வீர வரலாறாக உருவாகியுள்ளது இந்தப்படம்.

முகமது அலி என்கிற குஞ்சாலியின் குடும்பம் உறவினர்களின் துரோகத்தால் போர்ச்சுகீசியர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறது. தனது தாய் தன் கண்ணெதிரே போர்ச்சுகீசியர்களின் கையால் உயிர் விடுவதை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல், தனது சித்தப்பாவுடன் தப்பிக்கிறார் இளைஞன் குஞ்சாலி. சாமுத்ரிகா அரசு ஆட்சி செய்யும் நாட்டிற்கு சென்று தஞ்சம் அடையும் குஞ்சாலி (மோகன்லால்), அங்கே ராஜா நெடுமுடி வேணு நல்லவராக இருந்தாலும் அவரது உத்தரவை நிறைவேற்றும் கீழ்மட்டத்தில் இருப்பவர்களால் மக்கள் பாதிக்கப்படுவது கண்டு அவர்களுக்கு வேண்டிய நல்லதை செய்யும் ராபின்ஹூட் ஆக மாறுகிறார், மேலும் போர்ச்சுகீசியர்கள் மீது கொண்ட வெறுப்பால், கடலில் வரும் அவர்களது கப்பல்களை கொள்ளையடித்து, அவற்றை நிர்மூலமாக்குகிறார்.

போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தை விரும்பாத ராஜா, குஞ்சாலி மரைக்காயரின் நேர்மையையும் வீரத்தையும் கண்டு, அமைச்சர் ஹரீஷ் பெராடியின் ஆலோசனைப்படி அவரை அழைத்து தனது கப்பற்படை தலைவர் ஆக்குகிறார். அவரது இந்த நியமனத்தை தரைப்படை தளபதி அர்ஜுன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாலும், ஏற்கனவே தன்னிடமிருந்த பதவியை பிடுங்கி கொண்டதால் அவரது தம்பி அசோக் செல்வன் மோகன்லால் மீது கோபமாகிறார்.
இதற்கிடையே அடுத்து நடக்கும் கடற்படை போரில் போர்ச்சுகீசியர்களின் கப்பலை அர்ஜுனுடன் இணைந்து தனது சாகசமான யுக்திகள் மூலம் தரைமட்டமாக்குகிறார் மோகன்லால். இதனால் அவரது மதிப்பு இன்னும் உயர்கிறது. இந்தநிலையில் அரண்மனையின் இன்னொரு முக்கியஸ்தரான முகேஷின் மகள் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் அசோக் செல்வன். ஆனால் கீர்த்தியோ, மோகன்லாலின் வலதுகரம் போல விளங்கும் சீன வீரனை காதலிக்கிறார்.

இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு மோகன்லாலின் இடத்திற்கே சென்று தஞ்சம் அடைகிறார்கள். தம்பிக்கு கீர்த்தியை மணம் முடித்து வைப்பதாக வாக்கு தந்த அர்ஜுன், உண்மை நிலவரம் அறிந்து கீர்த்தியை அழைத்துப்போக அங்கே வருகிறார். வந்த இடத்தில் அசோக் செல்வனின் சூழ்ச்சியால், நல்ல மனிதர்களின் மனம் கூட சில நேரம் தடுமாற, அடுத்தடுத்து மூன்று உயிர்ப்பலிகள் நிகழ்கின்றன.

இதனால் மோகன்லாலுக்கும் அரசாங்கத்துக்குமாக ஒரு பகை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஒருகட்டத்தில் ராஜாவின் பங்காளிகள் சிலர் போர்ச்சுகீசியர்களின் சொல்படி ஆட்சியை நடத்த, ராஜாவும் வேறு வழியின்றி அவர்களது கைப்பாவையாக மாறுகிறார். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி மோகன்லாலை பணியவைக்க திட்டுமிடுகின்றனர் போர்ச்சுகீசிய அதிகாரிகள்.. வீரத்தால் வெல்ல முடியாத அவரை துரோகத்தால் வீழ்த்த முடிவு செய்கின்றனர். இறுதியில் வீரம் வென்றதா..? துரோகம் வென்றதா..? என்பதே மீதிக்கதை.

போர்ச்சுகீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயர் கேரக்டரில் மோகன்லால். அவரது உடைகளும் குதிரை மேல் அமர்ந்து அவர் வரும் கம்பீரமும் கடற்படை தாக்குதலில் அவர் ஈடுபடும் லாவகமும் காணும்போது அவரை மரைக்காயராக ரொம்ப எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. அவரது இளமைப்பருவ கதாபாத்திரமாக அவரது மகன் பிரணவ் மோகன்லாலே நடித்திருப்பது சிறப்பு.. கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெட்டுள்ளார்..

தவறு செய்பவன் தம்பியே ஆனாலும் தவறுதான் என நியாயத்தின் பக்கம் நிற்கும் தளபதியாக அர்ஜுனின் பாத்திர படைப்பு பெருமைப்பட வைக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மோகன்லாலுக்கும் அவருக்குமான அந்த கண நேர தவறான புரிந்துணர்வு காரணமாக அர்ஜுனுக்கு ஏற்படும் முடிவு பரிதாபப்பட வைக்கிறது.

ராஜ்யத்தை அபகரிக்க நினைக்கும் உறவினர்களுடன் சேராமல், குருநாதரின் வழி நடத்தல்படி நல்லவர் பக்கம் நிற்கும் வீரனாக சுனில் ஷெட்டி.. படத்தில் இவர் தனித்து சாதிக்கும் விஷயம் என எதுவும் இல்லாவிட்டாலும் பக்கபலமாக நின்றுள்ளார் என்றே சொல்லலாம். இளமைப்பருவத்தில் மோகன்லாலுடன் சின்னதாக உரசலில் அறிமுகமானாலும் கடைசி வரை அவர் கூடவே வரும் ஆத்மார்த்த நண்பனாக பிரபு, வழக்கம் போல குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். மோகன்லால் மூலமாக பாதிக்கப்பட்டு அவருக்கு எதிராக திரும்பும் அந்த கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தியுள்ளார் அசோக் செல்வன்.

வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்து அப்பாவியாக உயிரை விடுகிறார் கல்யாணி பிரியதர்ஷன். நண்பர்களாக பழகி வருபவர்களுக்குள் ஒரு பிரளயமே நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆனால் இது எதையுமே உணராத கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், கூட்டத்தில் ஒருவராக கடந்து செல்கிறார். கணவனை இழந்த கதாபாத்திரத்தில் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் படம் முழுதும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, அதிக வசனங்கள் எதுவுமின்றி அதிர்ச்சி அளிக்கிறார் மஞ்சு வாரியர்.. ஆனால் இவரது நோக்கம் என்னவென்று ஆரம்பத்திலேயே நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது.

இவர்களை தாண்டி படம் முழுதும் நட்சத்திரக்குவியல் இன்னும் உள்ளது. மோகன்லாலின் அம்மாவாக சுஹாசினி, சித்தப்பாவாக சித்திக், நல்ல மனம் கொண்ட ராஜாவாக மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, நாட்டுக்கு நல்லதே நடக்கவேண்டும் என நினைக்கும் அமைச்சராக ஹரீஷ் பெராடி ஆகியோர் படம் முடிந்த பின்னும் நம் மனதில் சில காலம் இடம் பிடித்திருப்பார்கள். குறிப்பாக மோகன்லாலின் பாதுகாவலானாக கீர்த்தி சுரேஷின் காதலானாக சீன வீரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெய் ஜே ஜக்ரிட்டின் ஆக்சன் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

கதை நிகழும் காலகட்டத்திற்கே நம்மை அழைத்து சென்றதில் கலை இயக்குனர் சாபு சிரில் தான் ஒரு வித்தகன் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கூடவே ஒளிப்பதிவாளர் திருவின் பங்கும் அசாத்தியமானது. குறிப்பாக கடற்போர் காட்சிகளை பிரமிக்க வைக்கும் விதமாக படமாக்கி இருக்கிறார்கள். ராகுல்ராஜின் பின்னணி இசையுடன் அங்கிட் சூரி மற்றும் ரோனி ரபேல் ஆகியோரின் கூட்டு முயற்சியில் பாடல்களும் பின்னணி இசையும் திருப்தி ரகம்.

கலகலப்பான, உணர்வுப்பூர்வமான படங்களையே கொடுத்துவந்த பிரியதர்ஷன், வரலாற்று கதைகளையும் தன்னால் இயக்க முடியும் என சாதித்து காட்டியுள்ளார். ஏற்கனவே வாழ்ந்த ஒரு வீரனின் கதை தான் என்பதால் மிகப்பெரிய பில்டப் காட்சிகள் எல்லாம் இல்லாமல், கதையின் போக்கிலேயே படத்தை நகர்த்தி சென்றுளார். மூன்று மணி நேர படம் என்பதுதான் படத்திற்கு எதிர்மறையான அம்சமாக தெரிகிறது. அதிலும் இடைவேளைக்கு முதலான ஒன்றரை மணி நேரம் வேகமாக பறந்துவிட்டாலும் கூட, கடைசி முக்கால் மணி நேரம் ரொம்பவே மெதுவாக நகர்கிறது.

ஆனாலும் ஒரு வரலாற்று படமாக உருவாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் இவரால் இப்படிக்கூட படம் எடுக்க முடியுமா என்கிற பிரமிப்பை நம் மனதில் ஏற்றி அனுப்பி வைக்கிறார் பிரியதர்ஷன்.

மரைக்காயர் - வீரமே வாகை சூடும்

 

பட குழுவினர்

மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மோகன்லால்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் லால். கேரள மாநிலத்தில் பிறந்த மோகன்லால், 1978ம் ஆண்டு திறனோட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 முறை தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓