குருதி (மலையாளம்),Kuruthi (malayalam)

குருதி (மலையாளம்) - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : பிரித்விராஜ், ரோஷன் மேத்யூ, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்டராஜன், சிருந்தா ஆஷப், முரளிகோபி, மம்முக்கோயா மற்றும் பலர்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜன்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
இயக்கம் : மனு வாரியர்
தயாரிப்பு : பிரித்விராஜ் புரொடக்சன்ஸ்
வெளியான தேதி : 11.08.2021
நேரம் : 2 மணி 3 நிமிடங்கள்
ரேட்டிங் : 3 / 5

மனைவி குழந்தையை விபத்தில் பலி கொடுத்துவிட்டு தம்பி, தந்தையோடு வாழ்க்கையை நடத்துபவர் இஸ்லாமிய இளைஞர் ரோஷன் மேத்யூ. பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டராஜனின் தங்கை சிருந்தா ஆஷப், ரோஷன் மீதான காதலால் இவர்கள் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருக்கிறார். ஒருநாள் இரவில் திடீரென குற்றவாளி இளைஞன் ஒருவனை பிடித்துக் கொண்டு ரோஷன் வீட்டிற்குள் நுழைகிறார் போலீஸ் அதிகாரி முரளிகோபி. இந்துவான அந்த இளைஞன் கோவிலை இடித்து விட்டார்கள் என்கிற கோபத்தில் இஸ்லாமியர் ஒருவரை கொன்றுவிட்டான் என்பதால் அவனை கைது செய்து அழைத்து செல்வதாகவும், ஆனால் அவனை தன்னிடம் இருந்து விடுவித்து கொலை செய்து பழி தீர்ப்பதற்காக பிரித்விராஜ் தலைமையிலான ஒரு கூட்டம் முயற்சிப்பதாகவும் கூறுகிறார். அதனால் நிலைமை சரியில்லாததால் பாதுகாப்புக்கு அதிக போலீஸார் வரும் வரையில் இரவில் அந்த வீட்டில் தங்கிவிட்டு செல்வதாக கூறுவதுடன், ரோஷன் மேத்யூ குடும்பத்தினரையும் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வந்த சிருந்தாவையும் வெளியே செல்லக்கூடாது என மிரட்டி வீட்டுக்காவலில் வைக்கிறார்.

ஒருகட்டத்தில் அதிரடியாக வீட்டுக்குள்ளே நுழையும் பிரித்விராஜ், போலீஸ் அதிகாரியை குத்தி சாய்க்கிறார். ஆனால் அவரிடம் இருக்கும் துப்பாக்கி மூலம் மிரட்டி பிரித்விராஜை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் ரோஷன் மேத்யூ.. அந்த இளைஞனை காப்பாற்றி போலீசில் ஒப்படைக்கும்படி சாவதற்கு முன் ரோஷன் மேத்யூவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு உயிரை விடுகிறார் முரளிகோபி.

ஆனாலும் அந்த இளைஞனை கொன்றே தீருவது என வெளியே உலாவுகிறார் பிரித்விராஜ். ரோஷனின் தம்பி, பிரித்விராஜ் தரப்பில் உள்ள நியாயத்தை பேசுகிறார். அதை தொடர்ந்து வீட்டுக்குள்ளே நடக்கும் விவாதத்தில் ஒருகட்டத்தில் ரோஷன் மீதுள்ள காதலை விட, தனது மதம் மீதான பாசம் சிருந்தாவிடம் தலைதூக்க, தனது அண்ணன் மணிகண்டராஜனுடன் சேர்ந்து அந்த இளைஞனையும் அழைத்துக்கொண்டு பிரித்விராஜின் கண்களில் மண்ணை தூவி பைக்கில் தப்பிக்கிறார்.

அதை தொடர்ந்து ரோஷனையும் அவரது குடும்பத்தினரையும் வைத்தே அவர்களை பிடிக்க முயற்சிக்கிறார் பிரித்விராஜ். இந்த முயற்சியில் பிரித்விராஜ் அந்த இளைஞனை கொன்று பழி தீர்த்தாரா, இல்லை செய்து கொடுத்த சத்தியத்தை ரோஷன் மேத்யூ காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்.

பழிவாங்கும் வெறியை படம் முழுதும் முகத்தில் காட்டி இருக்கும் பிரித்விராஜின் முகம் நமக்கு புதிது. அதேசமயம் நியாயத்தின் பக்கம் நிற்பதால் அவர் கதாபாத்திரம் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. பிரித்விராஜ் தான் நாயகன் என்றாலும் அவரைவிட படம் முழுதும் ரோஷன் மேத்யூவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது. கொலைகார இளைஞனை காப்பாற்றுவதாக தனது புனித நூல் மீது சத்தியம் செய்து கொடுத்துவிட்டோம் என்பதற்காக ஒருகட்டத்தில் தானே கொலைகாரனாக மாறும் ரோஷன் மீது பரிதாபத்திற்கு பதில் கோபமே ஏற்படுகிறது.

பெண் என்றாலும் தனக்கும் மதம் குறித்த பற்று உண்டு என கூறி காதலனையே எதிர்க்க துணியும் சிருந்தா அதிர்ச்சி அளிக்கிறார். மிரட்டல் போலீஸ் அதிகாரியாக முரளிகோபி.., கொஞ்ச நேரமே வந்தாலும் பயம் காட்டிவிடுகிறார். ரோஷனின் நண்பனாக இருந்தாலும் பிரித்விராஜின் நியாத்திற்காக அவரது பக்கம் இணைந்து கொள்ளும் ஷைன் டாம் சாக்கோ, அண்ணனை போல சத்தியத்தை பற்றி யோசிக்காமல் நியாயத்தின் பக்கம் பேசும் ரோஷனின் தம்பி, கொலைகாரனோ, யாரோ தங்கள் வீட்டில் அடைக்கலம் ஆகிவிட்டவரை காப்பாற்ற முயற்சிக்கும் ரோஷனின் தந்தை மம்முக்கோயா என மற்றவர்களும் நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

மொத்தப்படமும் இருள் சூழ்ந்த நேரத்திலேயே எடுக்கப்பட்டிருந்தாலும் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜன் மிகவும் நேர்த்தியாக தனது மொத்த வித்தையையும் இறக்கி வைத்துள்ளார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் திகிலுக்கே த்ரில் சேர்க்கிறது.

துவக்க நிமிடங்களில் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது சற்றே குழப்பமாக இருந்தாலும், போலீஸ் அதிகாரி முரளிகோபி அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் சூடுபிடிக்க துவங்குகிறது. மதத்தின் பெயரால் இளைஞர்களிடம் துவேஷத்தை வளர்த்து, அதை ஒன்று மறியா மக்கள் மீது பிரயோகிக்க வைப்பது எந்தவிதத்தில் நியாயம், பழிக்குப்பழி ஒன்றுதான் தீர்வா என்கிற கேள்வியை எழுப்பியபடி படம் முடிகிறது. புதியவரான மனு வாரியர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேர்த்தியான இயக்கத்தில் குறை ஒன்றும் இல்லை. இருந்தாலும் சாதாரண ரசிகன் இந்தப்படத்துடன் ஒன்றி பயணிக்க சற்று திணறித்தான் போவான்.

குருதி - பி பாசிடிவ் (Be Positive)

 

பட குழுவினர்

குருதி (மலையாளம்)

  • நடிகர்
  • இயக்குனர்

பிருத்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் விமர்சனம் ↓