பாரிஸ் ஜெயராஜ்,Parris jeyaraj

பாரிஸ் ஜெயராஜ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தானம், அனைகா
தயாரிப்பு - லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஜான்சன்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 12 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

2019ல் வெளிவந்த ஏ 1 படத்தின் கூட்டணியான இயக்குனர் ஜான்சன், சந்தானம் மீண்டும் இணைந்துள்ள படம் இது. நகைச்சுவையைத் தவிர வேறு எதையும் கொடுக்கக் கூடாது என இருவருமே முடிவெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதில் முக்கால்வாசி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சென்னை, பாரிஸ் பகுதியைச் சேர்ந்த கானா பாடகர் யு டியூப் புகழ் பாரிஸ் ஜெயராஜ் ஆக சந்தானம். அவருக்கு அனைகா சோதி மீது காதல். சில பல முயற்சிகளுக்குப் பின் அனைகாவை தன் காதல் வலையில் விழ வைக்கிறார் சந்தானம். இவர்கள் காதலுக்கு சந்தானம் அப்பாவே வில்லனாக வருகிறார். வக்கீலாக இருக்கும் சந்தானத்தின் அப்பா பிருத்விராஜ், முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவியுடனும் குடும்பம் நடத்துகிறார். இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் அனைகா. தன்னுடைய மகனும், மகளுமே காதலிப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அந்த சிக்கலை அவர் எப்படி தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அண்ணன், தங்கை காதலா என படிப்பவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கும் பழைய எம்ஜிஆர், சிவாஜி படங்களைப் போல கிளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன், தங்கை என்பதால் தான் இருவருக்கும் டூயட் எல்லாம் வைக்காமல், ஆரம்பத்திலிருந்தே நெருக்கமாகவும் நடிக்க வைக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். இடைவேளை வரை படம் அப்படி, இப்படி என கொஞ்சம் தடுமாறினாலும், இடைவேளைக்குப் பின் கிளைமாக்ஸ் முடியும் வரை நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்து விடுகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அனைகா அவருடைய அப்பாவையும், சந்தானத்தின் அப்பாவையும் கான்பிரன்ஸ் காலில் பேச வைக்கலாம் என முடிவெடுக்க தன் மகனுக்காகவும், தன் மகளுக்காகவும் அப்பா பிருத்விராஜ் பேசி சமாளிக்கும் காட்சி சிம்ப்ளி சூப்பர். இப்படியான ஒரு காட்சியை எழுதி, அதை ரசிகர்களுக்குப் புரியும் விதத்தில் படமாக்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதை அழகாகச் செய்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். அடுத்து ஜவுளிக் கடையில் ஒரே சமயத்தில் தனது இரண்டு மனைவிகளும் சுடிதார் அணிந்து பார்க்க டிரையல் ரூம் செல்ல, அவர்களை பிருத்விராஜ் சமாளிக்கும் காட்சியும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

சந்தானம், முந்தைய படங்களிலிருந்து இந்தப் படத்தில் கொஞ்சம் மாற்றிக் காட்ட தாடியை வைத்திருக்கிறார். வழக்கம் போல அதே சந்தானம், அதே டைமிங் காமெடி. தான் மட்டும் சிரிக்க வைத்தால் போதாது என மற்றவர்களுக்கும் பங்கு கொடுத்திருக்கிறார். மொட்ட ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேஷு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவர்களுக்குக் கிடைத்த கொஞ்ச நேர வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி சிரிக்க வைக்கிறார்கள். சந்தானம் அப்பாவாக தெலுங்கு நடிகர் பிருத்விராஜ். இரண்டு மனைவிகளுக்கு இடையிலும், மகன், மகளுக்கு இடையிலும் சிக்கித் தவிப்பதை முடிந்த அளவிற்கு யதார்த்தமாய் செய்திருக்கிறார்.

படத்தின் மைனஸ் பாயின்ட் நாயகி அனைகா சோதி. ஓவர் மேக்கப், பொருத்தமில்லாத ஆடைகள் என படத்திற்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறார். தன் படத்தின் கதாநாயகிகள் விஷயத்தில் சந்தானம் கொஞ்சம் அக்கறை காட்டுவது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்துமே கானா பாடல்கள்தான். பச்சா பச்சாக்கே, புலி மாங்கா புலிப் ஆகிய பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் இந்தக் காலத்தில் ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்ப்பது அரிது. தனது படத்தை அனைவரும் பார்க்கும் படமாக சந்தானம் தொடர்வது பாராட்டுக்குரியாது. ஆனாலும், படத்தில் அடிக்கடி குடிக்கும் காட்சிகள் வருகின்றன. அவற்றைக் குறைத்திருக்கலாம், அல்லது தவிர்த்தே இருக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரம் சிரித்து விட்டு வரலாம்.

பாரிஸ் ஜெயராஜ் - பார்க்கலாம்...

 

பாரிஸ் ஜெயராஜ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பாரிஸ் ஜெயராஜ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓