புத்தம் புதுக் காலை,Putham pudhu kaalai

புத்தம் புதுக் காலை - பட காட்சிகள் ↓

Advertisement
1.75

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : ஜெயராம், காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன், எம்.எஸ்.பாஸ்கர், ரித்து வர்மா, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், காத்தாடி ராமமூர்த்தி, குருசரண், ஆன்ட்ரியா, லீலா சாம்சன், பாபி சிம்ஹா, முத்துக்குமார்

இயக்கம் : சுதா கொங்கரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ்

வெளியான தேதி - 16 அக்டோபர் 2020 (ஓடிடி)

ரேட்டிங் - 1.7/5

2019ம் வருடக் கடைசியில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி படம் தான் இந்த புத்தம் புதுக் காலை படத்திற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. அதில் எப்படியான ஒரு திரைக்கதை அணுகுமுறை இருந்ததோ அதே மாதிரியாகத்தான் இதிலும் இருக்கிறது.

இளமை இதோ இதோ, அவரும் நானும் / அவளும் நானும், காபி - எனி ஒன், ரியூனியன், மிராக்கிள் என ஐந்து இயக்குனர்கள் இயக்கியுள்ள குறும் படங்கள் இணைந்ததுதான் இந்த புத்தம் புதுக் காலை. இப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு கதையும் நடக்கிறது. சாமானிய மக்கள் பட்ட துயரங்களை இதில் காட்டவில்லை. மேல்தட்டு மக்களின் சில பிரச்சினைகள் தான் இதில் கதையாக இடம் பெற்றுள்ளதால் பலராலும் தொடர்புபடுத்தி பார்க்க முடியாது.


இளமை இதோ இதோ


இயக்கம் - சுதா கொங்கரா

நடிப்பு - ஜெயராம், காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன்

ரேட்டிங் - 1.5/5

60 வயதுடைய ஜெயராம் வீட்டிற்கு அவருடைய முன்னாள் காதலி ஊர்வசி, பாண்டிச்சேரி யோகா ஆசிரமத்திற்குப் போவதாக தன் மகனிடம் பொய் சொல்லிவிட்டு வருகிறார். வந்த நேரத்தில் 21 நாள் கொரானோ ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அம்மா ஊர்வசியை வீட்டுக்கு திரும்பச் சொல்லி அவரது மகன் போன் செய்கிறார். தன் அப்பாவைப் பார்க்க ஜெயராம் மகள், கணவருடன் வீட்டிற்கு வருகிறார். தங்கள் பிள்ளைகளுக்குப் பயந்து தங்கள் (கள்ளக்) காதலை மறைப்பதா என அவர்கள ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஜெயராம், ஊர்வசி இருவரும் சந்தித்த உடன் தங்களை இளம் பருவத்தினராக கற்பனை செய்து கொள்வது சுவாரசியம். அந்த இளம் பருவத்தினராக ஜெயராம் மகன் காளிதாஸ், கல்யாணி நடித்திருக்கிறார்கள். ஊர்வசி முகத்தில் முதுமையின் தொடக்கம். காளிதாஸ், கல்யாணி பொருத்தமான ஜோடியாக இருக்கிறது.


அவரும் நானும் / அவளும் நானும்

இயக்கம் - கௌதம் மேனன்

நடிப்பு - எம்.எஸ்.பாஸ்கர், ரித்து வர்மா

ரேட்டிங் - 2.5/5

ஓய்வு பெற்ற விஞ்ஞானி எம்.எஸ்.பாஸ்கர். வீட்டில் தனிமையில் இருக்கிறார். அவருடைய பேத்தி ரித்து வர்மா தாத்தாவுடன் சில நாள் தங்கியிருக்க வருகிறார். தன் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் பல காலமாக அப்பாவும் மகளும் பிரிந்திருக்கிறார்கள். தன் அம்மாவின் செயலை தாத்தாவிடம் நியாயப்படுத்துகிறார் ரித்து. பேத்தி மீது மிகவும் பாசமாக இருக்கிறார் பாஸ்கர். மகள் பாசம், அம்மா பாசம் எப்படி இருக்கிறது என்பதுதான் இந்தக் கதை.

எம்.எஸ்.பாஸ்கர், ரித்து வர்மா இருவரும் அவரவர் கதாபாத்திரத்தில் சிம்ப்ளி சூப்பர்ப். புத்தம் புதுக் காலையின் ஐந்து கதைகளில் நடித்திருப்பவர்களில் யார் பெஸ்ட் என்றால் இவர்கள் இருவரை மட்டும்தான் சொல்ல முடியும். அவ்வளவு இயல்பாக தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து அளவான எமோஷனுடன் நடித்து ரசிக்க வைக்கிறார்கள். சிறந்த பாடகியான மகளை கல்யாணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை பாடவைக்காமல் விட்டதுதான் பாஸ்கரின் கோபம் என்பது நம்பும்படி இல்லை.


காபி, எனி ஒன்

இயக்கம் - சுஹாசினி மணிரத்னம்

நடிப்பு - சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், காத்தாடி ராமமூர்த்தி

ரேட்டிங் - 1.5/5

கோமாவில் இருக்கும் மனைவியை வீட்டிற்கே அழைத்து வந்து பார்த்துக் கொள்கிறார் கணவர் காத்தாடி ராமமூர்த்தி. வெளிநாட்டில் இருக்கும் மகள்கள் சுஹாசினி, அனு அம்மாவைப் பார்க்க வருகிறார்கள். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துதான் பார்க்க வேண்டும் என அப்பாவிடம் பேசுகிறார்கள். ஆனால், தன் மனைவியை கஷ்டப்படுத்திப் பார்க்க விரும்பவில்லை. அவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என பிடிவாதமாக இருக்கிறார். கடைசி மகள் ஸ்ருதிஹாசன் கோபித்துக் கொண்டு மும்பையில் இருக்கிறார். அம்மா எப்படியாவது கண்முழித்துவிட மாட்டாரா என சுஹாசினி, அனு தவிக்கிறார்கள். ஸ்ருதி வீட்டிற்கே வர மாட்டேன் என்கிறார். பின் என்ன நடந்தது என்பதுதான் இக்கதையின் முடிவு.

சுஹாசினி, அனு வழக்கம் போல் டிராமாத்தனமாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால், நாடக நடிகரான காத்தாடி ராமமூர்த்தி அப்பா கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் இரண்டே காட்சியில் வருகிறார். அக்கா சுஹாசினி இயக்கியதால் நடித்திருப்பார் போலிருக்கிறது. கதையில் இருக்கும் ஜீவன் குறிப்பிட வேண்டியது. மருத்துவ சிகிச்சையை விட மன சிகிச்சைதான் முக்கியம் என்பதை வலியுறுத்தும் கதை.


ரியூனியன்

இயக்கம் - ராஜீவ் மேனன்

நடிப்பு - குருசரண், ஆன்ட்ரியா, லீலா சாம்சன்

ரேட்டிங் - 1/5

தன் முன்னாள் தோழன் குருசரண் வீட்டிற்கு திடீரென வருகிறார் ஆன்ட்ரியா. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கேயே தங்க வேண்டிய நிலைமை. டாக்டராக இருக்கும் குருசரண் அம்மா லீலா சாம்சனுடன் வீட்டில் இருக்கிறார். குரு சிகிச்சை அளித்த நோயாளி கோவிட் தாக்கப்பட்டதால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறார். ஆன்ட்ரியா போதைக்கு அடிமையானவர் என்பதைப் பார்த்து குருசரண், லீலா அவரை மாற்ற முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் கதை.

இது தமிழ் படமா அல்லது ஆங்கிலப் படமா என்பதுதான் கேள்வி. ஓரிரு வரிகள் மட்டும்தான் தமிழில் வந்திருக்கும். மற்ற அனைத்தும் ஆங்கிலமே. ஆன்ட்ரியா நடிப்பதால் தேவையே இல்லாமல் அவரைக் கொஞ்சம் கிளாமர் காட்ட வைத்திருக்கிறார்கள்.


மிராக்கிள்

இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்

நடிப்பு - பாபி சிம்ஹா, முத்துக்குமார்

ரேட்டிங் - 2/5

பாபி சிம்ஹா, முத்துக்குமார் இருவரும் திருடர்கள். யாரோ ஒரு பணக்காரர் ஆங்காங்கே பழைய காரில் பணத்தை பதுக்கி வைப்பதாகத் தகவல் வந்து அப்படி ஒரு காரைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்தக் காரில் எதுவும் இல்லாததால் அதில் இருந்து ஒரு டயரை மட்டும் திருடி எடுத்து வருகிறார்கள். வரும் வழியில் ஒரு அலுவலகத்தில் திருட நுழைகிறார்கள். அங்கு போதைப் பொருள், பணம் இருக்கிறது. டயரை அங்கேயே போட்டுவிட்டு அவற்றைத் திருடி வீட்டிற்கு எடுத்து வந்து பார்த்தால் அவை போலியானவை. ஆனால், அவர்கள் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை. அதுதான் மிராக்கிள்.

பாபிசிம்ஹா, முத்துக்குமார் இருவருமே திருடன் கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார்கள். இக்கதையில் உள்ள சுவாரசியமே கிளைமாக்ஸ் மட்டும்தான்.


தமிழ் சினிமாவின் குறிப்பிட்ட இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். ஐந்து கதைகளில் ஓரிரு கதைகளைத் தவிர மற்ற கதைகளில் அழுத்தம் இல்லை. மேக்கிங் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. அவரவர் இயக்கியுள்ள படங்களை அவர்களின் அலுவலகங்களிலேயே படமாக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்த பிரபலமான இயக்குனர்களை விட பல புதிய இளம் இயக்குனர்கள் இதைவிட வித்தியாசமான கதைகளை இது போல வைத்திருப்பார்கள். பிரபலங்கள் என்பதால் ஓடிடி தளம் இவர்களை அணுகியிருக்கிறது போலிருக்கிறது. புத்தம் புதுக் காலை எனப் பெயர் வைத்துவிட்டு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் இன்னும் புதிதாக விடிந்திருக்கலாம்.

புத்தம் புதுக் காலை - பழசு

 

பட குழுவினர்

புத்தம் புதுக் காலை

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓