தினமலர் விமர்சனம் » ஊ ல ல லா
தினமலர் விமர்சனம்
பிரபல பிரமாண்ட பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் வாரிசு, இளம் இயக்குநர், இளம் நடிகர், ரவி கிருஷ்ணாவின் சகோதரர் என பன்முகங்கொண்ட இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, தனது இயக்கத்தில் கதாநாயகர் அவதாரமும் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "ஊ ல ல லா...!"
கதைப்படி தன்னை பார்க்கும் போதெல்லாம் கடுப்படிக்கும் அப்பா, அடுப்படியே கதி என கிடந்தாலும் தன் மீதும் குடும்பத்தின் மீது பாசங்காட்டும் அம்மா, ரெண்டாங்கெட்டான் வயதில் ஒரு தம்பி, எங்க கூப்பிட்டாலும் ஏன்? எதற்கு.? எனக் கேட்காமல் பைக் பில்லியனில் ஏறிக் கொள்ளும் நட்பு, பார்க்கும் பெண்கள் எல்லாம் தன்னுடன் பழக மாட்டார்களா...? என ஏங்கும் மனசை உடைய வயசு! இதுதான் சூர்யா எனும் ஹீரோ ஜோதி கிருஷ்ணா! இவருக்கு பாராமுகங்காட்டும் இளம் பெண்களில் ஒருத்தியையாவது பிடித்து நட்பாக்கி, லவ்வாக்கி, அவர் மூலம் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் உரசி பார்த்துவிட வேண்டுமென்பது நப்பாசை அல்ல...! லவ் ஆசை...! அப்படிப்பட்ட சூர்யா-ஜோதி கிருஷ்ணாவிடம் பிரீத்தி எனும் திவ்யா பண்டாரி வகையாக சிக்குகிறார். காதல் கூடாது, நட்பு கிடையாது என கட் அண்ட் ரைட்டாக இருக்கும் திவ்யாவை, மெல்ல மெல்ல கவிழ்த்து நட்பாக்கும் ஜோதி கிருஷ்ணா, அந்த நட்பை தப்பாக பயன்படுத்தி பல பெண்களை மடக்கி அவர்களுடன் சுற்றுகிறார். ப்ரீத்தி எனும் திவ்யா பண்டாரிக்கோ ஜோதி மீதுள்ள நட்பு, மெல்ல மெல்ல காதலாக கசிந்துருகிறது. ஆனால், அதை சட்டை செய்யாத ஜோதி கிருஷ்ணா, பல பெண்களை வட்டமடித்து கொட்டமடிக்கிறார். ஜோதி கிருஷ்ணா திருந்தினாரா...? திவ்யா பண்டாரி வருந்தினாரா...? என்பது ஊ ல ல லாவின் மீதிக்கதை!
அப்பாவிற்கு அடங்காத பிள்ளையாக, அம்மாவின் பாசத்திற்கு மயங்கும் வாலிபராக, காதலிகளுக்காக ஏங்கும் இளைஞராக, நட்புக்கு நயவஞ்சகம் செய்யாதவராக ஜோதி கிருஷ்ணா சூர்யா எனும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என சொல்லும் அளவிற்கு வாழ முயற்சித்திருக்கிறார்! நடிப்பு வருகிறது என்றாலும் உப்பலான முகமும், உடம்பும் அதை தெரியவிடாமல் தடுக்கிறது. சற்றே சதை போட்டிருப்பதை தவிர்த்திருந்தால் ஜோதி இந்த தடையை தடுத்திருக்கலாம். தம்பி ரவிக்கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய ஆக்டிங் டிப்ஸூம் வாங்கி வந்து அடுத்து படத்தில் ஜோதி நடிக்க வேண்டும் என்பது நம் அவா!
நாயகர் திவ்யா பண்டாரி வருகிறார் போகிறார், சிரிக்கிறார், பைக்கில் பறக்கிறார்... தட்ஸ் ஆல்! ஜோதியின் அப்பாவாக தலைவாசல் விஜய், அம்மா ராணி, திவ்யா பண்டாரியின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, கஞ்சா கருப்பு, சேகர் பிரசாத், சிட்டி பாபு, பக்கோடா பாண்டி, சாய் சுந்தர், கவுரவ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சேகர் சந்திராவின் இசை இனிமையாக இருக்கிறது. ஆர்.ஜி.சேகரின் ஒளிப்பதிவு அசரடிக்கிறது. எல்லாமே ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா நடிக்க போகாமல் திரைக்கதை, இயக்கத்தில் இன்னும் முழுமூச்சாக இறங்கி இருந்தார் என்றால், "ஓஹோ ல ல லா" என்றில்லாமல் இருந்திருந்தாலும், உண்மையாகவே "ஊ ல ல லா" என்றிருக்கும்.