கே.ஜி.எப் 2
விமர்சனம்
தயாரிப்பு - ஹம்பலே பிலிம்ஸ்
இயக்கம் - பிரசாந்த் நீல்
இசை - ரவி பர்சுர்
நடிப்பு - யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி
வெளியான தேதி - 14 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 48 நிமிடம்
ரேட்டிங் - 3.75/5
2018ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகம் 'கேஜிஎப் 2'. முதல் பாகத்தில் மும்பையில் இருந்து கேஜிஎப்பிற்கு ஒரு கொலை செய்ய வந்து அங்கு அடிமையாக வேலை செய்ய ஆரம்பிப்பர் ராக்கி. அதன் பின் அந்த தங்கக் கோட்டைக்கே 'ராக்கி' தன் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் சந்திக்கும் கதைதான் இந்த இரண்டாம் பாகம்.
இயக்குனர் பிரசாந்த் நீல், கதாநாயகன் யஷ் கூட்டணி இந்தப் படம் மூலம் இந்திய சினிமாவுக்கு ஒரு புதிய 'டிரென்ட் செட்' செய்துவிட்டார்கள். ஆக்ஷன் படம் என்றால் இனி இப்படித்தான் எடுக்க வேண்டும், ஆக்ஷன் என்றால் இதுதான் 'பெஸ்ட்', மற்றதெல்லாம் 'வேஸ்ட்' என பல இயக்குனர்களுக்கும், கதாநாயகர்களுக்கும் சவால் விடுகிறது இந்த 'கேஜிஎப் 2'.
பன்ச் டயலாக் பேசுவதையும், காற்றில் பறந்து பறந்து சண்டை போடுவதையும் மட்டுமே ஹீரோயிசம் என்று இதுவரை ஏமாற்றி வந்த ஹீரோக்கள் உஷாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. திரையில் ஹீரோ வந்து ஹீரோயிசம் செய்தால் திரையே பற்றியெரிய வேண்டும். அப்படி ஒரு 'பயர்' இந்தப் படத்தில் பல காட்சிகளில் இருக்கிறது.
கேஜிஎப் சாம்ராஜ்ஜியத்தில் இனி தான்தான் ராஜா என இதுவரை அங்கு தங்களை தாதா என சொல்லி வந்தவர்களை அழைத்துச் சொல்கிறார் யஷ். சில வருடங்களில் அவரது சாம்ராஜ்ஜியம் உச்சத்தை அடைகிறது. அதே சமயம் சிபிஐ, கேஜிஎப்பில் நடப்பதை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பிரதமர் ரவீணா டாண்டனிடமே சிபிஐ அதிகாரி நேரடியாகப் பேசி யஷ் மீது நடவடிக்கை எடுக்கும் அனுமதியைப் பெறுகிறார். இதனிடையே, தன்னுடைய கேஜிஎப் கோட்டையை இழந்த சஞ்சய் தத்தும் அதை மீண்டும் கைப்பற்ற நினைக்கிறார். இப்படியான சூழலில் யஷ் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இப்போதைய தமிழ் ரசிகர்கள் ரஜினிகாந்தின் ஹீரோயிசத்தைத்தான் உச்சமாகக் கண்டு ரசித்திருக்கிறார்கள். அதையும் மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் யஷ்ஷின் ஹீரோயிசம் அமைந்துள்ளது. குறிப்பாக துபாய் சென்று அங்குள்ள தலைவனை சந்தித்துப் பேசும் காட்சி, தன்னுடைய பழைய பங்காளியைக் கொல்லும் காட்சி, பிரதமர் அலுவலகத்திற்கே சென்று தன்னைப் பற்றியே தன் மீது புகார் கொடுக்கும் காட்சி என நிறைய காட்சிகளைச் சொல்லலாம். கடந்த எட்டு வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் காத்திருந்த யஷ்ஷின் நம்பிக்கைக்கு இந்தப் படம் தங்கக் கிரீடத்தைப் பரிசாக அளிக்கும்.
படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. தன் காதலி தன்னுடனேயே இருக்க வேண்டுமென அவரை வலுக்கட்டாயமாகக் கேஜிஎப்பிற்குத் தூக்கி வந்து விடுகிறார் யஷ். முதலில் யஷ் மீது வெறுப்படைந்தாலும் போகப்போக யஷ்ஷைக் காதலித்து 'ஐ லவ் யூ' சொல்லிவிடுகிறார். நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் நாயகி வரும் காட்சிகளில் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
சஞ்சய் தத், ரவீனா டாண்டன், படத்தில் மிரட்டும் இரண்டு முக்கியமானவர்கள். அகிரா என்ற மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத். அவரது தோற்றமும், உடல்மொழியும் ஹாலிவுட் வில்லனைப் பார்ப்பது போல உள்ளது. பிரதம மந்திரியாக ரவீனா டாண்டன். பெண் என்றால் அழகு மட்டும்தான் என்று யார் சொன்னது, பெண்களின் கம்பீரமே தனி என தனது நடிப்பால் நிரூபிக்கிறார் ரவீனா. சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், சரண் கவனம் பெறுகிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், சண்டைப் பயிற்சி, ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு என பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இது தங்களுக்கான படம் என்பதை உணர்ந்து அவர்களது சிறந்த ஈடுபாட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
இடைவேளை வரை கொஞ்சம் பரபரப்பு இல்லாமல் மெதுவாக நகருகிறது. ஆனால், இடைவேளைக்கு முன்பாக ஆரம்பிக்கும் பரபரப்பு, கிளைமாக்ஸ் வரை அப்படியே நீடிக்கிறது. கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு என பல காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. படம் முடிந்துவிட்டது என எழுந்துவிடாதீர்கள், என்ட் டைட்டில் முடிந்த பின் 'கேஜிஎப் 3'க்கு ஒரு 'லீட்' வைக்கிறார்கள், அதையும் பார்த்துவிட்டு வாருங்கள்.
கேஜிஎப் 2 - கேஜிஎப் 1 தங்கம், கேஜிஎப் 2 டபுள் தங்கம்…