Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கே.ஜி.எப்

கே.ஜி.எப்,KGF
 • கே.ஜி.எப்
 • இயக்குனர்: பிரசாந்த் நீல்
21 டிச, 2018 - 19:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கே.ஜி.எப்

நடிப்பு - யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர்
இயக்கம் - பிரசாந்த் நீல்
இசை - ரவி பர்சுர்
தயாரிப்பு - அம்பலே பிலிம்ஸ்
வெளியான தேதி - 21 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தென்னிந்தியத் திரையுலகத்தில் மலையாளப் படங்கள் தரத்தின் அடிப்படையிலும், தெலுங்குப் படங்கள் வசூல் அடிப்படையிலும், தமிழ்ப் படங்கள் கொஞ்சமாக இரண்டின் அடிப்படையிலும் அதிகமாகப் பேசப்பட்டு வந்தன.

கன்னடப் படங்களுக்கென பெரிய அடையாளம் அதிகம் இல்லாமல் இருந்தது. கடந்த சில வருடங்களாக சில கன்னடப் படங்கள் தரமான படங்களாக வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று வெளிவந்துள்ள 'கேஜிஎப்' படம் ஆச்சரியத்தை மட்டுமல்ல, பிரமிப்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறது. இந்தப் படம் கன்னடப் பட உலகைப் பற்றி இந்திய அளவில் பேச வைக்கும் படமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ள படமாக இருந்தாலும், படத்தின் இயக்குனர் யார், மற்ற டெக்னீஷியன்கள் யார் என படம் பார்த்த பின் டிரைலரையும், கூகுளையும் இந்தப் படம் தேடிப் பார்க்க வைக்கும்.

2014ம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த 'உக்ரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இரண்டாவது படம்தான் 'கேஜிஎப்'. 2016ம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமான இந்தப் படம் இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகின் அதிக பட்ஜெட் படம்.

இடைவேளை வரை கதை மும்பையிலும், இடைவேளைக்குப் பின் கேஜிஎப்-லும் நகர்கிறது. ஆரம்பத்தில் ஒரு தாதாவின் கதையாக நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய மும்பை பின்னணியில் நகர்ந்தாலும், கேஜிஎப்-ல் நடக்கும் கதை இதுவரை நாம் எந்த ஒரு சினிமாவிலும் பார்க்காத ஒன்று. அதற்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்படி ஒரு பிரம்மாண்டத்தை ஒரு கன்னடப் படத்தில் பார்ப்பது அரிதான ஒன்று.

சிறு வயதிலேய அனாதை ஆனவர் யாஷ். சிறுவனாக பிழைப்பு தேடி மும்பைக்குச் செல்கிறார். அங்கு ஷு பாலீஷ் போடும் வேலையை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மும்பையில் ஒரு தாதாவாக வளர்ந்து நிற்கிறார். அவரைப் பற்றிக் கேள்விப்படும் சிலர், கேஜிஎப்-ல் உள்ள ஒரு தங்கச் சுரங்க கம்பெனியின் முதலாளியைக் கொல்லச் சொல்கிறார்கள். கடும் பாதுகாப்பில், அடிமைத்தனத்துடன் 20 ஆயிரம் பேரை வைத்து நடக்கும் அந்தச் சுரங்கத்துக்குள் நுழைகிறார் யாஷ். அடிமைகளோடு அடிமைகளாக கலக்கும் அவர் திட்டமிட்டபடி சுரங்க முதலாளியைக் கொல்கிறாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கன்னடத் திரையுலகின் சிவகார்த்திகேயன் தான் யாஷ். நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து டிவியில் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து வெற்றிகரமான நாயகனாக இன்று வளர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமாவில் கூட ஒரு ஹீரோவுக்கு இப்படிப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு கேஜிஎப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் இடியாக இருக்கின்றன. ஒரே சமயத்தில் 50 பேரை அல்லது 100 பேரை யாஷ் அடித்தாலும் அது நம்பும்படியாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய உடல்வாகு அமைந்துள்ளது. இடைவேளை வரை மும்பையில் உள்ள தாதாக்களுக்கு தண்ணி காட்டுபவர், பின்னர் கேஜிஎப்-ல் அவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அனைவரையும் மிரள வைக்கிறார். இந்தப் படம் யாஷுக்கு பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. நடுரோட்டில் டிராபிக்கை நிறுத்திவிட்டு, தண்ணியடிக்கும் பணக்கார வீட்டுப் பெண். அவரைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் யாஷ். இருவருக்குமான காதல் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் இருவரும் சந்திக்கும் காட்சிகள் கூட ஆக்ஷன் காட்சிகள் போல மிரட்டியிருக்கின்றன.

படத்தில் வில்லன்களுக்கு அதிக வேலையில்லை. வில்லன்களின் அடியாட்கள் அதிகமாக வந்து அடிவாங்கி சாகிறார்கள். படத்தின் கதையே, அனந்த்நாக் ஒரு டிவி பேட்டியில் சொல்வது போலத்தான் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கதை சொல்லும் விதமே படத்திற்கு ஒரு கூடுதல் பரபரப்பை சேர்க்கிறது. அதை ஒரு சஸ்பென்ஸுடன் திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா, இசையமைப்பாளர் ரவி பர்சுர், சண்டைப் பயிற்சியாளர் இந்தப் படத்திற்கு தூணாக இருக்கிறார்கள். தமிழ் வசனங்களை அசோக் எழுதியிருக்கிறார். டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு இல்லாமல் சில காட்சிகளில் உதட்டசைவுகள் கூட பொருத்தமாக இருக்கிறது.

படத்தில் உள்ள வன்முறையும், குரூரமும்தான் படத்திற்கு மைனஸ் பாயின்ட். இப்படிப்பட்ட கதைகளில் அதைக் குறைக்கவும் முடியாது. இருந்தாலும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தைக் கொஞ்சம் ரத்தம் இல்லாமல் குறைத்திருந்தால் பெண்களும் பார்க்க முடிந்திருக்கும். இவ்வளவு வன்முறைகளுடன் படக் காட்சிகள் இருந்தால் பெண்கள் எப்படி வருவார்கள் என்பதற்காகவே அம்மா சென்டிமென்ட்டைக் கொஞ்சம் தூக்கலாக வைத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்திற்கே இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டார்கள். இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிடுவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை இந்த 'கேஜிஎப் அத்தியாயம் 1' ஏற்படுத்துகிறது.

கேஜிஎப் - கன்னட சினிமாவின் தங்கம்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
கே.ஜி.எப் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in