நடிகர்கள் : மோகன்லால், விஷால், மஞ்சு வாரியர், ஹன்ஷிகா, ராசி கண்ணா, ஸ்ரீகாந்த், செம்பான் வினோத், ரெஞ்சி பணிக்கர்
டைரக்சன் : பி.உன்னிகிருஷ்ணன்
மோகன்லால் - பி.உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் வெளியாகியுள்ள நான்காவது படம் தான் வில்லன். விஷால் - ஹன்ஷிகா இந்தப்படத்தில் நடித்திருப்பது ஸ்பெஷல் போனஸ். சரி.. யார் வில்லன்..? ஏன் வில்லன்..? பார்க்கலாம்.
தனது மனைவி - மகளை விபத்தில் பறிகொடுத்த போலீஸ் அதிகாரி மோகன்லால், அந்த சோகத்தில் வேலையைவிட்டு ஓய்வுபெற தீர்மானிக்கிறார். ஒய்வுபெறும் நாளன்று நகரத்தில் ஒரே நேரத்தில் நடக்கும் மூன்று பேர் கொல்லப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்த, அந்த கேஸை மட்டுமாவது கவனிக்குமாறு மோகன்லாலை ஒப்புக்கொள்ள வைக்கிறார் உயரதிகாரி சித்திக்.
வழக்கை மோகன்லால் விசாரித்துக்கொண்டு இருக்கும் சில நாட்களிலே இதேபோல அடுத்தும் மூவர் கொல்லப்படுகின்றனர்.. இரண்டு வழக்கிற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து குற்றவாளி டாக்டரான விஷால் தான் என கண்டுபிடிக்கிறார் மோகன்லால். இந்த உண்மை தெரியவரும்போது, உயரதிகாரி சித்திக்கையும் கடத்துகிறார் விஷால்.
விஷால் தான் கொலை செய்கிறார் என்பதை ரசிகர்களுக்கும் ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறார்கள் என்பதால், நம் முன் நிற்கும் கேள்வி விஷால் ஏன் கொலை செய்கிறார்..? உயரதிகாரி உள்ளிட்ட அடுத்தடுத்த ஆட்களை விஷால் கொலை செய்வதை மோகன்லாலால் தடுக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.. இதில் யார் வில்லன் என்பதை ரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறார்கள்.
மோகன்லால் இதற்கு முன் கிராண்ட் மாஸ்டர் படத்தில் ஏற்று நடித்த வேடம் தான் இதிலும்.. ஆனால் அதில் இருந்த விறுவிறுப்பும் துடிப்பும் இதில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் மட்டும் இளைஞராக மாறி மிரட்டுகிறார். அதிலும் விஷாலுக்கும் அவருக்குமான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல் ரகம்.
முதன்முதலாக விஷாலை மலையாள சினிமாவில் பார்க்க முடிவது ஆச்சர்யமாக இருக்கிறது.. விஷால் கொலை செய்வதற்கான நியாயங்கள் அவர் பக்கம் சரியாக இருந்தாலும், க்ளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தை சற்றே திசைதிருப்பியிருக்கிறார்கள். விஷாலின் வசதிக்கேற்ப மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் பேசுவதால் தமிழ்ப்படம் பார்த்த பீலிங் ஏற்படுவது நிஜம். கூடவே விஷாலின் ஜோடியாக அவரது செயல்களுக்கு துணை நிற்கும் ஹன்சிகாவும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்..
தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இதில் துணை வில்லன் போஸ்ட் கொடுத்துள்ளார்கள் என்றாலும், அது சாதாரண ஒரு நடிகர் செய்துவிடும் கேரக்டர் என்பதால் ஏமாற்றமே..
பாந்தமான மனைவி, அன்பான அம்மா என சில காட்சிகளே வந்தாலும் மனதை நெகிழ வைத்துவிடுகிறார் மஞ்சு வாரியர்.
பெரிய வேலை இல்லையென்றாலும் அழகான போலீஸ் அதிகாரியாக அன் யூனிபார்மில் வந்து அசத்துகிறார் ராசி கன்னா.
போலீஸ் அதிகாரிகளாக வரும் செம்பான் வினோத், ரெஞ்சி பணிக்கர் இருவரும் வழக்கம்போல. விஷாலின் தந்தையாக வேல.ராமமூர்த்தியும் ஒரு காட்சியில் தலைகாட்டுகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட இயக்குனர் உன்னிகிருஷ்ணன், அதை ஈடு செய்வதற்கு மிகவும் தடுமாறி இருப்பது படம் முழுவதும் நன்றாக தெரிகிறது. விஷால் தனது முதல் படமாக இதை தேர்வு செய்யும் அளவுக்கு அவரது கேரக்டரில் வலுவும் இல்லை. அதை வடிவமைத்ததில் வித்தியாசம் காட்டவும் இல்லை.
இரண்டு முக்கிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கும்போது இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டாமா சார்..? அதேபோல விஷால் கொலைகளை செய்ததிலும், கொலையாளியை மோகன்லால் நெருங்குவதிலும் கூட ரசிகர்களை நிமிர்ந்து உட்கார முடியாமல் திரைக்கதையை ரொம்ப சாதரணமாக நகர்த்தி இருப்பது அலுப்பு தட்டுகிறது..
பழிவாங்கும் உணர்ச்சி தவறானது என்கிற ஒற்றை மெசேஜை சொல்லி படத்தை முடித்திருக்கும் இயக்குனர் உன்னிகிருஷ்ணன், இந்தமுறை மோகன்லால் ரசிகர்களையே சரிவர திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை.