2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கௌதம் கார்த்திக், அர்ஷிதா ஷெட்டி, சோனாரிகா படோரியா
இயக்கம் - கலாபிரபு
இசை - கேபி
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்

சக்கரக்கட்டி என்ற படத்தை இயக்கிய பிறகு 9 வருடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார் கலாபிரபு. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன்.

அப்பாவே தயாரிப்பாளராக இருக்கும் போது மகன் தாராளமாகப் படம் எடுக்கலாம். ஒரு பேன்டஸியான கதையை எடுத்துக் கொண்ட கலாபிரபு, அதை திரைக்கதையில் சுவாரசியப்படுத்தியிருந்தால் இந்திரஜித் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

பேன்டஸி கதையில் லாஜிக் பார்க்க முடியாது. அதற்காக படத்தில் இவ்வளவு காதில் பூ சுற்றும் காட்சிகளை வைத்திருக்க வேண்டுமா?. இன்னும் எத்தனை தமிழ் சினிமாவில் மிஷின் கன்-னில் சரமாரியாக சுட்டாலும் நாயகன் மீது ஒரு குண்டு கூட பாயாத காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. அதே சமயம் கிளைமாக்சில் மட்டும் அவர் மீது ஒரே ஒரு குண்டு சரியாகப் பாய்ந்துவிடும். மாத்தி யோசிங்க இயக்குனர்களே...

படத்தின் ஆரம்பத்தில் விண்ணிலிருந்து ஏதோ ஒன்று வருகிறது என்று பின்னணிக் குரல் மூலம் சொல்கிறார்கள். ஆனால், என்ன சொல்கிறார்கள் என்பது ஒன்று கூட புரியவில்லை. பின்னணி இசையில் அந்தப் பின்னணிக் குரல் பேசுவது கேட்கவேயில்லை. சென்னை, சத்யம் தியேட்டரிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற ஊர்களில் யோசித்துப் பாருங்கள். அந்த முதல் காட்சியில் சொல்வது என்னவென்று புரிந்தால்தான் நாமும் படத்துக்குள் மூழ்க முடியும். எப்படியோ, அதை நாமே போகப் போகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பல வருடங்களுக்கு முன்பு விண்ணிலிருந்து வந்த ஒரு அதிசய கல் இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் விழுந்திருக்கிறது என்பதற்கான தகவல் தொல்லியில் துறை நிபுணரான சச்சின் கண்டேகருக்குத் தெரிகிறது. அவரிடம் உதவியாளராக வந்து சேர்கிறார் கௌதம் கார்த்திக். அந்த அதிசய கல் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேல் மனிதன் நோய்வாய்ப்படாமல் இருக்கலாம் என்கிறார் சச்சின். அந்தக் கல் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு காட்டுப் பகுதிக்குள் இருக்கிறது என்பதற்கான தடயத்தை கௌதம் கார்த்திக் கண்டுபிடிக்கிறார். அதன் பின் சச்சின் கண்டேகர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் அங்கு புறப்படுகிறார்கள். அதே சமயம், தொல்லியல் துறை இயக்குனரான சுதான்ஷு பான்டேவும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறார். யார் கையில் அந்த அதிசய கல் கிடைக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விளையாட்டுத்தனமான ஜாலியான பையனாக கௌதம் கார்த்திக், ஆரம்பத்தில் என்ட்ரி கொடுக்கிறார். கோவாவில் ஆரம்பமாகும் கதை அப்படியே காதல் கதையாக நகரும் என்று பார்த்தால், அதிசய கல், அருணாச்சல பிரதேசம் என அப்படியே பேன்டஸி ஆக்ஷ்னுக்கு மாறிவிடுகிறது. கௌதம் கார்த்திக்கின் ஆக்ஷ்ன் காட்சிகள் ஒன்றைக் கூட நம்ப முடியாது. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோவை விட பதினாறடி பாய்ந்திருக்கிறார். எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி ரியாக்ஷ்ன்தான் கொடுக்கிறார்.

படத்தில் ஆரம்பத்தில் சோனாரிகா படோரியா தான் ஹீரோயின் என்று பார்த்தால் இரண்டு காட்சிகளுக்குப் பிறகு அவர் காணோம். அதன் பின் அருணாச்சல பிரதேசத்தில் அர்ஷிதா அறிமுகமாகிறார். அவருக்கும் பெரிய வேலையில்லை. ஒரே ஒரு இடத்தில்தான் கௌதமும் இவரும் காதல் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள். காதலுக்கும் படத்தில் வேலையில்லை.

சச்சின் கண்டேகர், சுதான்ஷு பான்டே என இரண்டு ஹிந்தி முகங்களில் யார் வில்லன் என்பது படத்தின் கிளைமாக்சில் தான் தெரியும். சீரியசாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வந்து காமெடி என்ற பெயரில் வதைக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளர் கேபி இசையில் என்னென்ன காட்சிகள்... பாடல் மட்டும் ஓகே. ராசாமதியின் ஒளிப்பதிவில் அருணாச்சலப் பிரதேசம் எனக் காட்டப்படும் கேரள மலைப்பிரதேசக் காட்சிகள் அழகோ, அழகு. லொகேஷன்களை தேடித் தேடிப் பிடித்திருக்கிறார்கள்.

இடைவேளை வரை கோவாவில் நடக்கும் கதை பரபரப்பாக நகர்கிறது. அருணாச்சல் காட்டுப் பகுதிக்குள் போன பின்னர்தான் தட்டுத் தடுமாறுகிறது திரைக்கதை. அதில் சுவாரசியமான திருப்பங்களை வைத்திருந்தால் முழுமையான பேன்டஸி படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

இந்திரஜித் - திரைக்கதையில் இன்னும் உழைத்திருக்கலாம்!

 

இந்திரஜித் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

இந்திரஜித்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓