மிலன் லூதிரா - அஜய் தேவ்கன் கூட்டணியில் வெளியாகியுள்ள மற்றொரு படம் தான் பாத்ஷாஹோ. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...
1975-ல், நாட்டில் எமர்ஜென்சி இருந்த காலக்கட்டத்தில் கதை நகருகிறது. ராஜஸ்தானின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் கிதாஞ்சலி எனும் இலியானா. இவருக்கு சொந்தமான நகைகள் உள்ளிட்ட சொத்துக்களை அரசு கையகப்படுத்துகிறது. இதற்கு இலியானா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் இந்த வேலையை ராணுவ அதிகாரி சாகர் சிங் எனும் வித்யூத் ஜம்வால் கச்சிதமாக செய்கிறார். மன்னரது குடும்பத்தில் விஸ்வாசமாக இருக்கும் பவானி சிங் எனும் அஜய் தேவ்கன், இலியானாவின் சொத்துக்கள், நகைகளை மீட்க, தன் சக கூட்டாளிகள் டாலியா எனும் இம்ரான் ஹாஸ்மி, டிக்காலா எனும் சஞ்சய் மிஸ்ரா, சஞ்சனா எனும் இஷா குப்தா ஆகியோருடன் களமிறங்குகிறார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பது பாத்ஷாஹோ படத்தின் பரபரப்பான ஆக்ஷ்ன் கதை. இதனூடன் அஜய்-இலியானா உடனான காதலையும் கலந்து ஒரு கலர்புல் படத்தை கொடுத்திருக்கிறார் மிலன்.
அஜய் தேவ்கன், மீண்டுமொரு நல்லதொரு ஆக்ஷ்ன் படத்தையும், அருமையான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
இலியானா, அரசு குடும்பத்து வாரிசாக சிறப்பாக நடித்திருக்கிறார். கூடவே நெருக்கமான காட்சிகளிலும் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
இம்ரான் ஹாஸ்மி, இஷா குப்தா, வித்யுத் ஜாம்வால்... என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் ரோலை அருமையாக செய்திருக்கிறார்கள்.
மேரே ரக்ஷே் ஓமர்... உள்ளிட்ட பாடல்களின் இசையும், பின்னணியும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. கூடவே ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் பக்காவாக அமைந்துள்ளன.
மிலன் லூதிரா - அஜய் தேவ்கன் கூட்டணியில் பல வெற்றி படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வெற்றி நடைபயணம் பாத்ஷாஹோ படத்திலும் தொடருகிறது என்றே சொல்லலாம். திரைக்கதையை அவ்வளவு பரபரப்பாக எங்கும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் மிலன். முற்பாதி விறுவிறுப்பாக நகருகிறது, பிற்பாதி கொஞ்சம் டல்லடித்தாலும் அது பெரிதாக தெரியவில்லை. அதேசமயம் படத்தில் ஆக்ஷ்னையும், ரொமான்ஸையும் கலந்து, கொஞ்சம் குழப்பி இருக்கிறார்கள். மற்றபடி பாத்ஷாஹோ ஒரு பக்கா ஆக்ஷ்ன் படமாக வெளிவந்திருக்கிறது.
மொத்தத்தில், பாத்ஷாஹோ - ஆக்ஷ்ன் டிரீட்!