நடிகர்கள் - சந்தீப் கிஷான், வம்சி, நையினா கங்குளி, வம்சி சகன்டி
இயக்குனர் - ராம் கோபால் வர்மா
இசை - ரவி சங்கர்
சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கில்லிங் வீரப்பன் எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராம் கோபால் வர்மா 1970,80களில் விஜயவாடாவில் நிகழ்ந்த சாதிய அரசியலை மையப்படுத்தி மீண்டும் ஒரு உண்மைச்சம்பவத்தை தழுவி வங்கவீட்டி படத்தை இயக்கியுள்ளார்.
விஜயவாடாவில் வாழ்ந்த வங்கவீட்டி மோகன ரங்கா குறைந்த கால கட்டத்தில் பலரும் பார்த்து நடுங்கும் தாதாவாக மாறுகிறார். இதனை பிடிக்காத எதிரி கும்பலான தேவினேனி கூட்டம் மோகன ரங்காவை திட்டமிட்டு தீர்த்து கட்டுகின்றது. பதிலுக்கு வங்கவீட்டி மற்றும் தேவினேனி குடும்பங்கள் மோதிக் கொள்கின்றன. இதுதான் வங்கவீட்டி படத்தின் கதைக்கரு.
வங்கவீட்டி மோகன் ரங்காவாக நடித்துள்ள சந்தீப் தோற்றத்தில் மட்டுமல்லாது, வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் மோகன ரங்காவாக மாறி அப்லாஸ் அள்ளுகின்றார். நிச்சயமாக தெலுங்கு திரை உலகில் சந்தீபிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. தேவினேனி முரளி மற்றும் தேவினேனி நேரு வேடங்களில் நடித்துள்ள வம்சி கிருஷ்ணா பெரும்பாலுமான புதுமுக நடிகர்களுக்கு மத்தியில் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்கின்றனர். காட்சிளின் கோர்வை, கதாபாத்திர தேர்வு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் போன்ற விஷயங்களில் பாராட்டு பெறும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, 80களில் விஜயவாடாவை காட்சி மாறாமல் கண்முன் நிறுத்தி, சபாஷ் போட செய்கின்றார். தேவினேனி முரளியின் கொலையும் அதனைத் தொடர்ந்து வரும் இடைவேளையும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டச் செய்கின்றது.
இசையமைப்பாளர் ரவி சங்கர் பொருத்தமான பின்னணி இசையால் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் தெரிகிறது. இருப்பினும் சண்டைக்காட்சிள் என்ற பெயரில் ரத்தம் தெறிக்கும் கொலைபாதக வன்முறை காட்சிகளை ராம் கோபால் வர்மா, குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்-யை கருத்தில் கொண்டாவது, குறைத்திருக்கலாம். நேர்த்தியை படமும் முழுக்க எதிர்பார்க்கும் ராம் கோபால் வர்மா தான் பின்னணி பேசிய இடங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தது வேடிக்கை.
ராம் கோபால் வர்மாவின் முந்தை படங்களை ஒப்பிடும் போது வங்கவீட்டி படத்தை சற்று தரமான படமாக தரவே அவர் முயற்சித்திருக்கின்றார். உண்மை சம்பவத்தை அப்படியே படமாக்க முதலில் முடிவு செய்த ராம் கோபால் வர்மா வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக சில நிகழ்வுகளை தவிர்த்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
விறுவிறுப்பான முதல் பாதி, ஆர்வத்தை தூண்டும் இடைவேளை என செல்லும் வங்கவீட்டி திரைப்படம் இரண்டாம் பாதியில் வேகம் இழக்கின்றது. முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்தாமல் பின்னணி பேசி ராம் கோபால் வர்மா சமாளித்திருப்பது வேக தடையாக அமைகின்றது. வங்கவீட்டி மோகன ரங்காவின் மரணம் குறித்த உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுப்பதாகக் கூறிய ராம் கோபால் வர்மா கொலைகளை மட்டுமே படத்தில் தெளிவாக காட்டியுள்ளார்.
மொத்தத்தில், ‛‛வங்கவீட்டி - ரத்தவாடை!''