பிரபல இயக்குனர் பி.வாசுவின் தம்பி மகன் கெளதம் விஆர்-ரின் எழுத்து இயக்கத்தில், பி.வாசுவின் வாரிசு சக்தி, நிகிஷா பட்டேல், கணேஷ் வெங்கட்ராம், பிரபு, நாசர், எம்எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், தேவதர்ஷினி, அங்கனாராய், ராஜீவ் கோவிந்த பிள்ளை, விஷ்ணு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, "மில்லியன் டாலர் மூவீஸ்" கார்த்திக்.எம் & கார்த்திகேயன்.என் இருவரது தயாரிப்பில் "ரெட் கார்பெட் எண்டர்டெயின்மென்ட்" வெளியிட, வந்திருக்கும் படம் தான் "7 நாட்கள்".
கதைப்படி, முதலமைச்சரில் இருந்து சென்ட்ரல் மினிஸ்டர் வரை பலரையும் ஆப் த ரெக்கார்டாகவும், அன்பாகவும் அதட்டி உருட்டும் அளவிற்கு பிரபலமான பிஸினஸ் புள்ளி பிரபு. அவரது ஒற்றை மகனுக்கு முதல்வர் சந்தானபாரதி தலைமையில் இவருக்கு ஈக்குவலான பிஸினஸ் புள்ளி ஒருவரது மகளுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு, கல்யாண வேலைகளில் தடபுடலாக இறங்கும் போது, அவரது செல்வந்த செல்ல மகனின் பெயர், ஒரு இளம் பெண் கொலை கேஸில் எக்குதப்பாய் அடிபடுகிறது. அதனால் வெகுண்டெழும் பிரபு, தாட் பூட் தஞ்சாவூர் என முதல்வர் சந்தானபாரதி வரை சென்று சப்தம் போட்டுவிட்டு, மகனை கூப்பிட்டு விளக்கம் கேட்கிறார்.
மல்டி மில்லியனர் மகனும் அவள், என் முன்னாள் கேர்ள் பிரண்ட், அவ்வளவுதான். அவள் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை... இது மாதிரி தான் இதற்கு முந்தைய என் கேர்ள் பிரண்ட் லிண்டா என்னை விட்டுப் பிரிந்த போதும், அவளும் இப்படித்தான் அகால மரணமடைந்தாள் டாடி... என டமார் என்று மற்றொரு குண்டை தூக்கிப் போடுகிறார். தன் பணத்திற்கும், செல்வாக்குக்கும் முன் தன் பையனை யாரும் எதுவும் செய்ய முடியாதென்றாலும், திருமண நேரத்தில் தன் பிள்ளை மீது அடுக்கடுக்கான கொலை பழிகளா? என விக்கித்துப் போகும் பிரபு, தன்னை அப்பா என அன்பொழுக அழைக்கும் பேமஸ் சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி கணேஷ் வெங்கட்ராமை வரவழைத்து அது பற்றி யாருக்கும் தெரியாது துப்பறிந்து தகவல் தர சொல்கிறார்.
கணேஷ் வெங்கட்ராம் கால் பதித்த வினாடி அவரது காமிரா கண்களில், ஒரே பிளாட்டில் எதிரும் புதிருமாக வசித்தபடி, அடிக்கடி வம்பளந்து கொள்ளும் ரேடியோ ஜாக்கியாக தமிழ் வளர்க்கும் கதாநாயகர் சக்தியும், டி.வி.சேனல் பிரபலமான கதாநாயகி நிகிஷா பட்டேலும் சிக்குகின்றனர். இந்த எதிரும் புதிருமான ஜோடியிடமும், அவர்களது செல்ல நாயிடமும் எதிர்பாராமல் அவர்களுக்கே தெரியாமல் சிக்கும் ஒரு சி.டியில் தான் கொலைகாரன் யார் எனும் ரகசியம் அடங்கியிருக்கிறது .
அதற்காக அவர்களை தூக்கி துன்புறுத்துகிறார் க்ரைம் (சைபர்) கணேஷ் வெங்கட்ராம். ஆனால், அவரிடமிருந்து தப்பித்து உண்மை குற்றவாளியை சக்தி., தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து கண்டுபிடித்தாரா? இல்லையா...? என்பதும், எதிரும் புதிருமான சக்தி - நிகிஷா ஜோடி ஒன்று சேர்ந்ததா? பிரபுவின் செல்ல செல்வமகனுக்கு திட்டமிட்டபடி ஏழு நாட்களில் திருமணம் நடந்தேறியதா? இல்லையா...? என்பதும் தான் 7 நாட்கள் படத்தின் சஸ்பென்ஸ், திகில், திருப்பங்கள் நிரம்பிய காமெடி கம் ஆக்ஷன் வித் லவ், சென்டிமென்ட் கலந்த கரு, கதை, களம், கொஞ்சமே கொஞ்சம் ரசிகனைப் படுத்தும் காட்சிப்படுத்தல்... எல்லாம்.
கெளதம் கிருஷ்ணவாக ஹீரோவாக சக்தி, வழக்கம் போலவே இயக்குனர் சொன்னபடி அழகான இளம் தமிழ் வளர்க்கும் ரேடியோ ஜாக்கியாக ஜமாய்த் திருக்கிறார். ஆனால் பாவம் உடம்புதான் சற்று பருமனாக இவர் சொல்படி கேட்காது ரசிகனை வெறுப்பேற்றுகிறது. மற்றபடி, சபாஷ் சக்தி... எனும் அளவிற்கு இப்படத்தில் நிறைய சாதித்திருக்கிறார்.
கதாநாயகி பூஜாவாக டி.வி.சேனல் பிரபல தொகுப்பாளினியாக நிகிஷா பட்டேல், குவிண்ட்டால் கணக்கில் கிளாமரில் ரசிகர்களை சீட்டோடு கட்டிப் போட்டுவிடுகிறார்.
சைபர் க்ரைம் சாய் பிரசாத்தாக கணேஷ் வெங்கட்ராம் செம க்ரைம்.
முதல்வரையே ஆட்டிவிக்கும் பெரிய மனிதர் விஜய் ரகுநாத்தாக பிரபு, பீட்டர் எஸ்.குமாராக - நாசர், காமெடி காவலர்கள் எம்எஸ் பாஸ்கர், சின்னிஜெயந்த், சக்தியின் சிஸ்டர் மைதிலியாக தேவதர்ஷினி, ஜெனிபராக அங்கனாராய், சித்தார்த்தாக ராஜீவ் கோவிந்த பிள்ளை, ஷாமாக விஷ்ணு உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம். இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது வி.எஸ்.ராகவன் வாய்ஸில் குரல் கொடுத்தபடி வளைய வரும் சக்தி வளர்க்கும் அந்த செம க்யூட் நாய்!
ராஜுவின் கலை, இயக்கம், கவிதா கெளதத்தின் உடை அலங்காரம் உள்ளிட்டவை கவனம் ஈர்க்கின்றன.
ஜெஸ்வின் பிரபுவின் படத்தொகுப்பில் பெரும் சஸ்பென்ஸ் மட்டும் அல்ல பெரிய லெங்க்த்தும் இருப்பது சற்றே போர்.
ஒளிப்பதிவாளர் எம்.எஸ் .பிரபு வின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் காஸ்ட்லீயாக ஜொலிக்கின்றன.
மதன் கார்க்கியின் காந்த வரிகளில், "காதல் கனவு..." உள்ளிட்ட பாடல்கள், விஷால் சந்திரசேகரின் இசையில் ஒ.கே! அதே நேரம் பின்னணி இசை, இரைச்சல் இம்சை!
கெளதம் விஆர்ரின் எழுத்து - இயக்கத்தில், ஒரு காட்சியில் பைக்கில் வந்து வகையாக சக்தியிடம் சிக்கும் செல் திருடர்களின் மூஞ்சில், ஹீரோவின் செல்ல நாய், கேஸ் ரிலீஸ் செய்யும் உவ்வே காட்சிகள் உள்ளிட்ட ஒரு சில குறைகளை ஒரு மாதிரி ஒதுக்கிவிட்டு பார்த்தோமென்றால், "பிரண்டுக்கு வேணுங்கிற பொண்ணுங்கக் கூட நீங்க தங்கும் போது அவள நீங்க தங்கச்சிமாதிரியும் நினைக்க வேண்டாம்... நீங்க அண்ணா வாகவும் நடிக்க வேண்டாம்...", "தமிழ்நாட்டு பெண்கள், தமிழை தவிர்க்காதீர்கள் தமிழ் பையன்களையும் தவிக்க விடாதீர்கள்...." என்பது உள்ளிட்ட வசீகர வசன வரிகளுக்காகவும் சஸ்பென்ஸ் என்றாலும் காமெடி கலந்து அதை பேன்டஸியாக தந்திருக்கும் இயக்கத்திற்காகவும் புது மாதிரி சப்ஜெக்ட்டிற்காகவும் "7 நாட்கள்" படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம்.
"7 நாட்கள் - திரையரங்கில் நிச்சயம், ஒடும் சிலநாட்கள்"