நாயகன் - வருண் தேஜ்
நாயகி - திஷா
இயக்குனர் - பூரி ஜெகன்நாத்
லோஃபர் - தெலுங்கு தேசத்தின் முக்கிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க, மாஸ் ஹீரோ வருண் தேஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்.
சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் ஒரு பொறுப்பில்லாத ஒருவன், தன் மனைவியை விட்டு பிரிந்து தனது மகன் ராஜாவோடு(வருன் தேஜ்) தனித்து வாழ்கிறான். தனது அம்மா இறந்து விட்டதாகவே நினைத்துகொள்ளும் ராஜாவும், தனது தந்தையை போலவே வளர்ந்து பெரியவனாகிறான்.ஒரு நன்நாளில் நாயகி மெளனியை(திஷா) பார்க்கிறான், ஹீரோ ஹிரோயினைபார்த்தால் காதல் வர வேண்டுமே அதுவும் வருகிறது.
குற்றங்கள் செய்யும் தனது தந்தையால் மெளனிக்கு ஆபத்து என்பதை அறிகிறான். ஏதாவது செய்து காப்பாற்ற நினைக்கிறான். அப்போது தான் தனது அம்மா உயிரோடு இருக்கும் உண்மை தெரிய வருகிறது. மேலும் மெளனிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கும் அவனின் அம்மாதான் காரணம் என்றும் தெரிகிறது. நாயகனின் பிரச்சனைகள் என்னவானது? குடும்பம் இணைந்ததாது? காதல் கைகூடியதா என்பதே லோஃபர் படத்தின் மீதிக் கதை
இப்படி செல்லும் திரைக்கதையின் அத்தனை மூலைகளிலும் மசாலா காட்சிகள் சமமாக பரப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த படமாக இருந்திருக்கும் இது மட்டும் 90களில் வெளி வந்திருந்தால். மொத்த படத்திலும் முக்கியமாக தெரிபவர் வருண் மட்டுமே, இந்த படம் அவரின் திரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் வருண் முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக முன்னேறி இருக்கிறார். இன்னும் சிறப்பான படங்கள் வரும் பட்சத்தில் நிச்சயம் முன்னனியில் இடம் பிடிப்பார்.
இரண்டு பெண்களை சுற்றித்தான் கதை நிகழ்கிறது, ஒன்று வருணின் அம்மா (ரேவதி) இரண்டாவதாக மெளனி(திஷா) காதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் நன்றாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தாய் மகனுக்கு இடையேயான காட்சிகளின் உணர்சி வெளிப்பாடுகள் அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. வருணின் அப்பாவாக நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ண முரளி கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பூரி ஜெகன்னாத் தனது திரைக்கதை யுக்தியால் முதல் பாதியை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கரை சேர்க்கிறார். இரண்டாம் பாதி முழுக்கவே யூகிக்க முடிந்த காட்சிகள் நிரம்பி கிடக்கின்றன. அதுவும் நேரம் செல்ல செல்ல கிளைமேக்ஷை நோக்கி படம் மிக அவசரமாக நகர்கிறது.
படத்தின் திரைக்கதை இப்படி இருக்கையில் பாடல்கள் வேறு இடைஇடையே வந்து நம் பொறுமையை சோதிக்கிறது. செட்கள் செயற்கையாக காட்சி அளிப்பதை கொஞ்சம் உழைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
வருணை ஒரு அழகான ஆக்ஷன் ஹீரோவாக முந்தைய படத்தில் இருந்து மாறுபட்ட விதத்தில் காட்டியதற்காக நிச்சயம் இயக்குனரை பாராட்டியாக வேண்டும். மொத்தமாக பூரியின் சாயலில், சாயம் வெளுத்ததாக வெளிவந்திருக்கிறது லோஃபர்.