ராகவா லாரன்ஸ் - நிக்கி கல்ராணி ஜோடி நடிக்க, சாய்ரமணி இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்து வழங்க, சிவபாலன் பிக்சர்ஸ் தடை பல கடந்து ஒரு வழியாக, ரீலீஸ் செய்திருக்கும் படம் தான் "மொட்ட சிவா கெட்ட சிவா".
நேர்மையான போலீஸ் உயர் அதிகாரி ஒருவரது மகன் ஊழல் போலீஸ் அதிகாரியாக உலா வருகிறார். அதற்கு காரணம் அவரது அப்பா, இவரது அம்மாவை பிரிந்தது தான் எனும் ப்ளாஷ்பேக்குடன் லஞ்ச லாவண்ய தர்பார் செய்யும் அந்த போலீஸைத் தேடி, அவரது அப்பாவே ஒரு கற்பழிப்பு கொலை கேஸை கண்டுபிடித்து தர சொல்லி வருகிறார். மகன் போலீஸ், அரசியல் பின்புலம் நிரம்பிய அந்த கேஸில் உண்மை குற்றவாளியை பிடித்து அடித்து உதைத்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா? அல்லது, அப்பா மீதுள்ள கோபத்தில் கையூட்டு வாங்கிக் கொண்டு கைதி ஆக வேண்டியவரை தப்பிக்க விட்டாரா..? எனும் கதையுடன் மகன் போலீஸின் பெண் நிருபருடனான காதல் கசிந்துருகலையும், கலந்து கட்டி "மொட்ட சிவா கெட்ட சிவா" படத்தை லாரன்ஸின் வழக்கமான நல்ல, கெட்ட ஆட்டத்துடன் கூடிய முழுநீள கமர்சியல் சினிமாவாக தர முயர்சித்து, ஓவர் ஆட்டத்துடன் அதில், ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
"மொட்ட சிவா கெட்ட சிவான்னு தெரியாதா உனக்கு..." என்றபடி ராகவா லாரன்ஸ் தன் பாணியில் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்... என எல்லாவற்றிலும் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். முதல் பாதியில் காமெடியிலும், இரண்டாம் பாதியில் ஆக்ஷனிலும் புகுந்து விளையாடியிருக்கும் லாரன்ஸ் வழக்கம் போல் டான்ஸிலும், கூடுதலாக பைட் சீனிலும் ரசிகனை மெய்யாலுமே மெய்சிலிர்க்க வைக்கிறார். என்ன, இவர் பேசும் வசனங்களில் அனல், அதிகம் தெறிக்க வேண்டும் என்பதற்காக ஒவர் சவுண்டு விட்டிருப்பது மட்டும் பெரும் இறைச்சலாக சற்றே எரிச்சலாக இருக்கிறது.
இப்படத்தின் அறிமுக பாடலில் ராகவா லாரன்ஸ் ஆடும் ஆட்டம் ரசிகர்களை தியேட்டரில் ஸ்கிரீனுக்கு முன் ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல், ஹர ஹர மகாதேவி பாடலுக்கு ராகவா லாரன்ஸும், ராய் லட்சுமியும் போடும் குத்தாட்டம் விசில் பறக்க விடுகிறது.
நாயகி நிக்கி கல்ராணியை நம்மூர், பெண் பத்திரிகை நிருபராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காட்சிக்கு காட்சி வெறும் அழகு பதுமையாக தெரிகிறார். அம்மணி என்பது நிருபர் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கவில்லை. அதே நேரம் ராகவா லாரன்ஸ்க்கு ஈடு கொடுத்து, பாடல் காட்சிகளில் செம ஆட்டம் போட்டிருப்பதற்காக நிக்கியை பாராட்டலாம்.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், கம்பீரமான தோற்றம் இருந்தும், மகன் முன் சூழ்நிலை கைதியாக வரும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.
கோவை சரளா, தேவதர்ஷினி, சாம்ஸ், சதிஷ் ஆகியோரின் காமெடி., ஆங்காங்கே கடிக்கிறது. சில இடங்களில் லாஜிக்காக இடிக்கிறது.
வில்லனாக வரும் அசுதோஸ் ராணா, அவரது கற்பழிப்பு கொலை குற்றவாளி தம்பியாக வரும் வம்சி கிருஷ்ணா இருவரும் மிரட்டல்.
சிறுத்தை கே.கணேஷ், ராகவா லாரன்ஸுக்கு ஏற்ற பைட்சீன்களை பக்காவாக அமைத்திருப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சண்டை காட்சிகள் தான் இப்படத்தில் பெரும் பலம்.
பிரவீன் கே.எல்.லின் படத்தொகுப்பில் பெரிதாக குறையொன்றுமில்லை.
சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள், படக்காட்சிகள் எல்லாம் அதன் விறுவிறுப்பு குறையாது பளிச்சிடுகிறது. பலே!
அம்ரீஷ் கணேஷ் இசையில் ஹர ஹர மகாதேவி உள்ளிட்ட பாடல்கள் அதிரடி அருமை. பின்னணி இசையிலும் அம்ரீஷ்., செம ஸ்பீடு காட்டியிருக்கிறார். வாவ்.
இயக்குனர் சாய் ரமணியின் எழுத்து, இயக்கத்தில், படத்தின் முன்பாதி கடி காமெடிகள், எம்.ஜி.ஆர்., புகைப்படங்கள் திரும்பிய திசை எல்லாம் தெரியும் ஒரு பாடல் காட்சியில் ஆட்ட நாயகியர் டூ - பீஸில் ஆட்டம் போடும் அரைவேக்காட்டு ரசனை, மாற்றுத் திறனாளி சாதனையாளரை முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடும் வழக்கமான ராகவா லாரன்ஸ் சீன்கள் உள்ளிட்ட இன்னும் சில, பல லாஜிக் குறைகள்... என தொடரும் இப்படத்தை பார்ப்பதைவிட பேசாமல் அமைதியாக வீட்டில் அமர்ந்து விடலாம்.