பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில், 1940ம் ஆண்டுகளில் கோல்கட்டாவை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் படம் தான் டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி. சுமார் 1300 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ள இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, 1942ம் ஆண்டு கதை நடக்கிறது. அந்தசமயம் இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கோல்கட்டாவை, ஜப்பான் தாக்கிய சம்பவம் நடந்தேறியது. இந்த பதட்டமான சூழலில், பார்ட்டைமாக துப்பறியும் வேலை பார்க்கும் பயோம்கேஷ் பக்ஷி-சுஷாந்த் சிங், வேதியல் நிபுணர் ஒருவரின் கொலையை, அவரது மகன் ஆனந்த் திவாரியின் உதவியுடன் துப்பறிய செய்கிறார். ஒரு கொலைக்கான சம்பவத்தை துப்பறிய சென்ற இடத்தில், இதோடு தொடர்புடைய பல கொலைகள் நடந்திருப்பதும் தெரிய வருகிறது. இறுதியில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை எப்படி சட்டத்தின் முன் சுஷாந்த் நிறுத்துகிறார் என்பது தான் டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி-யின் கிரைம் ப்ளஸ் த்ரில்லராக கதை.
சுஷாந்த் சிங், துப்பறிவாளர் பயோம்கேஷ் பக்ஷியாக அருமையாக நடித்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் சரி, துப்பறியும் இடங்களிலும் சரி தனக்கான கேரக்டரை உண்மையான செய்திருக்கிறார். ஆனால் படத்தில் மைனஸே சுஷாந்த்தின் குரல். இந்த கேரக்டருக்கு அவரது குரல் செட்டாகவில்லை.
ஆனந்த் திவாரி மற்றும் படத்தில் நடித்த அத்தனை துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் நீரஜின் நடிப்பு 'ஆசம்'. க்ளைமாக்ஸில் வரும் அந்த ஒரு காட்சி, படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களையும் டம்மியாக்கி விடுகிறது.
படத்தில் பின்னணி இசை, கலை, படத்தொகுப்பு உள்ளிட்ட எல்லாமே படத்திற்கு பக்கபலமாகத்தான் இருக்கிறது. உர்வி மற்றும் இயக்குநர் திபாகரின் அனல் தெறிக்கும் வசனங்கள் படத்திற்கு பெரிய ப்ளஸ்-ஆக இருக்கிறது. ஒரு கிரைம் த்ரில்லர் கதையை எப்படி ரசிகர்களின் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை சிறப்பாக தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர் திபாகர் பானர்ஜி. படத்தின் ஒவ்வொரு த்ரில்லர் காட்சியையும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து அமரும் வகையில் பக்காவாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இவ்வளவு ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடிக்குமா என்று கேட்டால் கேள்விக்குறி தான். ஆனாலும் ஒரு பாதி ரசிகர்கள் இந்த படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள்.