Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மீண்டும் ஒரு காதல் கதை

மீண்டும் ஒரு காதல் கதை,Meendu oru kadhalkadhai
  • மீண்டும் ஒரு காதல் கதை
  • வால்டர் பிலிப்ஸ்
  • இஷா தல்வார்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் இது.
12 செப், 2016 - 17:46 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மீண்டும் ஒரு காதல் கதை

சில வருடங்களுக்கு முன் "தட்டத்தின் மறையத்து" எனும் பெயரில் நேரம் நிவின் பாலி நடிக்க, மலையாளத்தில் சூப்பர் - டூப்பர் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீ-மேக்காக வெளி வந்திருக்கும் படம் தான் "மீண்டும் ஒரு காதல் கதை.


"தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் புதுமுகம் வால்ட்டர் பிலிப்ஸுடன், இஷா தல்வார் ஜோடியாக நடிக்க, நாசர், தலைவாசல் விஜய் , மனோஜ் கேஜெயன், சிங்கமுத்து, வனிதா கிருஷ்ணசந்திரன், அர்ஜூனன், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.


கதைப்படி, பள்ளி சிறுவனாக இருக்கும் போதே வினோத் எனும் ஹீரோ வால்டர் பிலிப்ஸ், மணிரத்னத்தின் "பம்பாய்" படத்தையும் முஸ்லீம் பெண்கள் துப்பட்டா உடுத்தும் விதத்தையும் சிலேகித்துப் பார்த்து, வளர்ந்து பெரியவன் ஆனதும் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து கரம் பிடிக்க வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார். அதன்படி, அந்த ஊர் அரசியல்வாதியும் பெரும் தொழில் அதிபருமான அப்துல் காதர் - நாசர் வீட்டு பெண், ஆயிஷா - இஷா தல்வாரை கண்டதும் இவர், காதல் கொள்கிறார். இஷா தல்வாரும் இரண்டொரு சந்திப்பில் வால்டர் மீது வசியமாகிறார். மதம் கடந்து மனிதத்தால் இவர்கள் காதல் இணைந்ததா? அல்லது, மதம் பிடித்த மதத்தால் மாண்டு போனதா..? என்பது தான் மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் களமும், காட்சிப்படுத்தலும்.


வினோத்தாக வால்டர் பிலிப்ஸ், அப்பாஸ், அரவிந்த சாமி லுக்கில் இருக்கிறார். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நடித்திக்கிறார். திருமண வீட்டு மாடிப்படிகளில் நாயகியை தெரியாமல் இடித்து தள்ளிவிட்டு, மாடிப்படிகளில் அவர், உருண்டு விழுந்ததும், அங்கிருந்து... எஸ்கேப் ஆகி, ஹாஸ்பிட்டலில் போய் நாயகியை பார்த்து, சிறுமியிடம் "ஐ யம்சாரி ஆயிஷா" எழுதிக் கொடுத்து விட்டு வரும் காட்சிகளில் அம்சமாக நடித்திருக்கிறார் மனிதர். அதே நேரம், அதே கல்யாண வீட்டில் மாப்பிள்ளையின் அரை நிர்வாண படங்களைக் காட்டி, இஸ்லாமிய பெண் பிள்ளைகளிடம் மாப்பிள்ளை.... சன்னி லியோன் மாதிரி இருக்கான்ல... என்பது அபத்தமாக இருக்கிறது.


இஷா தல்வார் இதற்கு முந்தைய அவரது படங்களைக் காட்டிலும் இதில் பொலிவாக பொருந்தி நடித்திருக்கிறார். ஒரு வேளை இதன், ஒரிஜினல் மலையாள படத்திலும் இவர்தான் நாயகி என்பதால் இத்தனை இயல்பான நடிப்போ என்னவோ.? குறிப்பாக பல காட்சிகளில் கண்களாலேயே நடித்திருக்கிறார் அம்மணி. "மனசுல இருக்கிற ஆசையை வெளியே செல்லாது திரைக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு இருப்பது, கஷ்டம் எத்தனையோ பெண்களை அப்படி நான் பார்த்திருக்கிறேன். அப்படி வாழ்ந்து முடிக்க எனக்கு ஆசையில்ல... " என காதலனிடம் புரட்சியாக தன் ஆசையை கூறுவதில் தொடங்கி, காரைக்குடி சிவராமன் சார் வீட்டுல... நான் தொழுவதற்கு எனக்கு ஒரு சின்ன இடம் கொடுப்பீயா.... என க்ளைமாக்ஸில் இஷா கேட்டபடி வால்டரிடம் இணையும் இடம் வரை... ஒவ்வாரு காட்சியும் அம்மணியின் நடிப்பிற்கு கட்டியம் கூறுகின்றன! வாவ்!


முரட்டு அரசியல்வாதி அப்துல் காதராக நாசர், அவரது தம்பியாக சாப்ட் நேச்சரான அப்துல் ரஹ்மானாக இஷாவின் அப்பாவாக தலைவாசல் விஜய், காதலுக்கு உதவும் போலீஸ் இன்ஸாக மனோஜ் கே.ஜெயன், ஹெட் கான்ஸ்டபிளாக சிங்கமுத்து, நாயகரின் தாயாக வனிதா கிருஷ்ணசந்திரன், காமெடி நண்பராக அர்ஜூனன், நாயகியின் தோழியாக வித்யூலேகா ராமன், அக்கா சல்மா, சங்கிலி முருகன்... உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச் என நடித்திருக்கின்றனர்.


அதிலும், "அந்தப் பொண்ணு இங்கிலீஷ்ல பிச்சு உதறும். நம்ம ஆளுக்கு இங்கிலீஷ்னாலே கை கால் உதறும்.... " என்பது உள்ளிட்ட காமெடி "பன்ச்கள் பேசி கலக்கும் அர்ஜூனனும், அல்லா மீது நம்பிக்கை வை.. எனக்கு நம்பிக்கை மேலயே நம்பிக்கை போய் ரொம்ப நாளாச்சு... முடிவு எடுக்கிறது நம்ம கையில இல்லங்கிறப்போ, நாம் ஏன் ஆசைப்படணும்? என யதார்த்தமாய் பேசம் நாயகியின் கணவரால் கைவிடப்பட்ட அக்கா சல்மாவும் செம கச்சிதம்.


குறிப்பாக, நாசரிடம், ‛‛அளவுக்கு மீறி அனுசரித்து போறது கூட ஒரு வித அடிமைத்தனம் தான், கருப்புத் துணிப் போட்டு உடம்பு தான் மூட முடியுமே தவிர ஒரு பெண்ணோட ஆசையும் மனசையும் மூட முடியாதுண்ணே..." என்பதில் தொடங்கி, "இந்த காதல்ல தோத்தவங்க ஒரு வித தீவிரவாதி மாதிரி.... எப்போ என்ன செய்வாங்கன்னு சொல்ல வேமுடியாது, முதல்ல அவனைப் பார்க்க போம்மா...." என மகளை வழியனுப்புவது வரை நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார் விஜய்.


விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சியிலும் ஒவியப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் மை போட்டு மை போட்டு மயக்க தான் வந்தாளே...., ஏ பெண்ணே ஏ தே தோபெண்ணே.., மோகினி மண்ணில் வந்து என்ன செய்யப் போகிறாள்... , உன் இதயம் என் வசத்தில்... உள்ளிட்ட பாடல்கள் பரவசம். பின்னணி இசையும் பிரகாசம்.தியாகராஜனின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு !


மித்ரன்.ஆர்.ஜவஹரின் இயக்கத்தில், "பாதி லவ் பிரேக் ஆவதற்கு காரணமே இந்த செல்போன் தான்..." என பேசும் இன்ஸ், "மனசுக்கு நிம்மதி தராத பிள்ளைங்களை பெற்று இருக்கும் அம்மாக்களுக்கு பகல் ஏது, இரவென்ன..? பொதுவா எல்லா அம்மாக்களும் பிள்ளைங்க பக்கம்தான் பேசுவாங்க... ஆனா, நான் அப்படி கிடையாது..." எனும் நாயகரின் அம்மா வனிதா, பேசும் டயலாக் உள்ளிட்ட பன்ச்சுகளாலும், ஸ்கூல், காலேஜ் கல்ச்சுரல் புரோகிராமில் இஸ்லாமிய சகோதரர்கள் கடவுள் கிருஷ்ணன், பரமசிவன் வேடம் போட்டு நிற்பது... மாதிரியான காட்சி ப்ளஸ் பாயிண்டுகளாலும் பெரிதாக குறையாக தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேல் இப்படி ஒரு மென்மையான காதல் கதையை வன்மை நிரம்பிய போலீஸ் ஸ்டேஷனில் பிளாஷ் பேக்காய் ஆரம்பிப்பது புதுசாய் தெரிகிறது... என்பது இப்படத்திற்கு பெரும் பலம்.


மொத்தத்தில், "மீண்டும் ஒரு காதல் கதை - மீண்டும், மீண்டும் பார்க்கத் தோன்றும் கதை!"




----------------------------------------------------------


குமுதம் சினி விமர்சனம்




நிவின் பாலி நடித்து மாலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த 'தட்டத்தின் மறயத்து' படத்தின் ரீமேக் இது.

யதார்த்தமான, எளிமையான, மிகைப்படுத்தப்படாத, இப்படி ஒரு காதல் கதையைப் பார்த்து எத்தனை நாளாயிற்று! இயக்கம் 'யாரடி நீ மோகினி' மித்ரன் ஜவஹர்.

முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் இந்து இளைஞனின் கதை. அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா, இல்லையா? என்பதுதான் படம்.

புதுமுகம் வால்டர் பிலிப்ஸ் பொருத்தம். நடனமும் நன்று.

இஷா தல்வார் க்யூட். அந்த பதட்டமும், பயமும், காதலும் கொள்ளை கொள்கிறது.

படத்தின் பெரிய பலம் ஜி.வி. பிரகாஷின் பாடலும், ஆர். ஆரும், 'உன் இதயம், என் வசத்தில்' பாடல் வசியம்! விஷ்ணுசர்மாவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.

சின்னச் சி்ன்ன காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. காரில் தனக்கு அருகில் காதலியை அமர வைக்க நாயகன் முயல, அதை நாசூக்காக நாயகி தவிர்ப்பது, காதல் கடிதத்துக்குப் பதிலாக புர்காவுடன் அமைந்த தன்னுடைய முகத்தை ஓவியமாக அனுப்புவது, 'உன் வீட்டில் நான் தொழுகை நடத்த ஓர் இடம் கிடைக்குமா?' என கேட்பது எல்லாம் ஸ்வீட்.


மீ.ஒ.கா.க.: காதல் கவிதை!


குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in